Load Image
Advertisement

உழைப்பு, விடாமுயற்சி இருக்கிறது!

ஆண்களுக்கே சவால் விடும் வகையில், சோபா தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும், வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகில் உள்ள, சின்னதாமல் செருவு எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி பிரபுகுமார்:

நான் சாதாரண கூலித் தொழிலாளியின் மகள். என் கணவர், தோல் தொழிற்சாலையில் வேலை செய்தார். ஒரு சமயம், தோல் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, சோபா பற்றி பேச்சு வந்தது.

நாமும் தோல் வாங்கி, மதிப்பு கூட்டி விற்றால் என்ன என்ற, 'ஐடியா' உதித்தது. சோபா தயாரிப்பு குறித்த தகவல்களை தேடியபோது, உ.பி.,யில் அதற்கு சரியான ஆட்கள் இருப்பதாக தெரியவந்தது. எங்களுடைய கிராமத்திலேயே தயாரிப்பு கூடம் அமைத்து விற்பனைக்கு வைத்தோம்.

தேக்கு, வேம்பு மரக்கட்டைகளுடன் ஐந்தாண்டு, 'கியாரண்டி' தரும், 'ரெக்சின்' மூலம் தான் தயாரிக்கிறோம். துளியும் பிசகாமல் நுணுக்கமாக, 'பினிஷிங்' கொடுத்து செய்கிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சோபா விற்பனை நடக்கவில்லை.

காரணம், சோபாவில் பல வகைகள், வடிவமைப்புகள் இருக்கின்றன. இவ்வளவையும் செய்து வைக்க பெரிய இடமோ, பொருளாதார வசதியோ எங்களிடம் இல்லை. மாத சம்பளம் வந்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டே இந்தத் தொழிலில் என் கணவர் முழு மூச்சாக இறங்கினார்.

வங்கியில், 'லோன்' வாங்கி, நகைகளை அடகு வைத்து, கடன் பெற்று தான் தொழில் நடத்துகிறோம். என் பெற்றோர் ஆதரவு கொடுத்தது சற்றே ஆறுதல் தந்தது.

எங்களிடம் பெரிய மூலதனம் இல்லாவிட்டாலும் திருப்திகரமாக தொழில் செய்ய காரணம், வாய்வழி விளம்பரங்கள் தான். எங்களிடம் சோபா வாங்கி போனவர்கள், மற்றவர்களிடம் சொல்லி, 'ஆர்டர்'கள் கிடைத்து வருகின்றன.

ஆனால், ஆரம்பத்தில் இந்தத் தொழிலில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. எங்கள் சிரமங்களை பார்த்தவர்கள், 'இந்த தொழிலை விட்டு விடுங்கள்' என்றனர்.

ஆர்வமும், திறமையும் இருக்கும் தொழிலை விட்டு விட்டு, வேறு எந்தத் தொழிலுக்குப் போவது... 'தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்' என்பர்.

சிப்பிகளை வேண்டுமானால் கடற்கரையில் எடுக்கலாம். ஆனால், முத்தெடுக்க கடலில் மூழ்கத் தான் வேண்டும். முத்து கிடைக்காவிட்டால் இன்னும் கொஞ்சம் மூச்சு பிடித்து, ஆழ்கடலில் மூழ்கினால் தான் முத்தெடுக்க முடியும்.

அதுபோல, நம்பிக்கை, உழைப்பு, விடா முயற்சி ஆகிய மூன்றும் எங்களிடம் உள்ளன. பிறர் அமர்ந்து இளைப்பாற, நாங்கள் ஓயாமல் உழைத்து வருகிறோம். எனவே, என்றைக்காவது ஒரு நாள் இந்த சோபா தொழிலால் எங்களுக்கு நல்ல பலன் கிடைக்காமல் போகாது.

அப்போது நானும் சோபாவில் நிம்மதியாக உட்கார்ந்து இளைப்பாறுவேன் என்ற திடமான நம்பிக்கையுடன் உள்ளேன்!வாசகர் கருத்து (2)

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    எப்பொழுதும் போல தொடர்பு என் குடுத்து இருக்கலாம்... யாருக்காவது உபயோகமா இருந்து இருக்கும். வெளி மாவட்டங்கள் கூட லாரி பார்சல் சேவை மூலமாக அனுப்பலாம் அவர்கள்..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மனதை தளரவிடாமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் தொழிலை செய்யுங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement