Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ., இளங்கோவன் பேட்டி:

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்., கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. அதுபோல, லோக்சபா தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து, 40 தொகுதிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கிறது.

அதெல்லாம் சரி... அந்த 40 தொகுதிகளில், காங்கிரசுக்கு, இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும்னு இவரால் உறுதியா சொல்ல முடியுமா?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:

'சென்னை, மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது. மழை நீர் வெளியேற வழி இல்லை. மக்கள் கஷ்டப்படுகின்றனர்' என, யாரும் புலம்ப வேண்டாம். அமைச்சர் கீதா ஜீவனை அழைத்து, 'சென்னையில் பெய்த மழையால், வீடுகளில் நீரூற்று பொங்கி வழிகிறது' என்று பேட்டி கொடுக்க சொல்லுங்கள்; பிரச்னை தீர்ந்து விடும்.

அழுகிய முட்டைக்கு அருமையா விளக்கம் கொடுத்த கீதா ஜீவன், இனிமே எந்த பிரச்னைக்கும் வாயே திறக்க மாட்டார், பாருங்க!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'சிறுபான்மை மக்களின் காவலர்' என, புதுப்பட்டம் வாங்கியிருக்கும் பழனிசாமி, பா.ஜ., கொண்டு வந்த குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவற்றை ஆதரித்ததற்காக, சிறுபான்மை மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த சட்டங்களை கொண்டு வந்த பா.ஜ., அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிடுவாரா?
'கூட்டணி தர்மத்துக்காக, சில சட்டங்களை ஆதரிக்க நேர்ந்தது' என்று, பழனிசாமி தான் அப்பவே தெளிவா சொல்லி இருந்தாரே!

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'தமிழக மருத்துவ கட்டமைப்போடு, வேறு எந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுகாதார கட்டமைப்பு என்பது உயிரை காப்பாற்ற பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் தானே தவிர, பளபளப்பாக எழுப்பப்பட்டுள்ள கட்டடங்கள் அல்ல. அதை புரிந்து கொண்டு அரசு மருத்துவர்களின் வேதனையை தீர்க்க முதல்வர் முன்வர வேண்டும்.

டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதை விட, சுகாதார துறைக்கு பளபளப்பா புது கட்டடம் கட்டினால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்னு நினைச்சிருப்பாரு!

தமிழக பா.ஜ., துணை தலைவர் ராமலிங்கம் பேட்டி: இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை மோடி அரசு சரி செய்ததால், உலக அளவில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்படுத்தி தந்த ஆட்சியாக பா.ஜ., அரசு உள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் மாறாது. மீண்டும், மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி.

மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்னைக்கு வெளியாகிறதால, 'கண்டிப்பா ஜெயிப்போம்'னு அடிச்சு சொல்ல யோசிக்கிறாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும்' என, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், முதல்வர் பேசியதையும், அரசு போக்குவரத்து கழகங்களில், டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு, தனியார் நிறுவனம் வழியே, 'அவுட் சோர்சிங்' முறையில் ஆட்கள் நியமனம் நடத்த இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்ததையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, திராவிட மாடல் ஆட்சியில், சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா தவங்களிடம் போய், சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தம் தேடலாமா?

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும். மழை நீரால் ஏற்படக்கூடிய நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க, அதிகப்படியான மருத்துவ முகாமை நடத்த வேண்டும். காய்ச்சல்களில் இருந்து மக்களை காக்கும் வகையில், வீடு, வீடாக சென்று நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்.

நிலவேம்பு கஷாயத்தை தான், நம்மாளுங்க கொரோனா போன கையோட மறந்துட்டாங்களே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'சென்னை மாநகராட்சி தெருக்களில், ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆமாம், தெருக்கள் இருந்தால் தானே தண்ணீர் நிற்கும். மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் அப்படியே உள்ளதால், மழை நீர்,பள்ளங்களில் சென்று நிலத்தடி நீராகிவிட்டது என்ற பெருமை கொண்டு, இதுதான் திராவிட மாடல் ஆட்சி என, மார்தட்டிக் கொள்ளுங்கள்.

இதுவரைக்கும் பெய்த மழை, 'டிரெய்லர்' மாதிரி தான்... 'மிக்ஜாம்' புயலில் தானே, 'மெயின் பிக்சரை' பார்க்க போறோம்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement