Load Image
Advertisement

41 தொழிலாளர்கள் 17 நாட்கள் 408 மணி நேரம்..
நீண்ட நாட்களுக்கு பிறகு தேசமே கொண்டாடி மகிழ்ந்த தினம் நேற்றுதான்

காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்,17 நாட்கள் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நாள் அது.

உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரம் நீட்டப்பட,மத்திய மாநில அரசு எந்திரங்கள் இரவு பகலாக பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்ய,முதல்வர் முதல் பிரதமர் வரை'என்னாச்சு என்னாச்சு' என்று விசாரித்துக் கொண்டே இருக்க, ஒரு நாள் முன்னேற்றம், ஒரு நாள் பின்னேற்றம் என்று மாறி மாறி ஏற்பட்ட சூழ்நிலைகளை எல்லாம் கடந்து எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்த அபார சாதனையை நிகழ்த்தியவர்கள் பலர் உண்டு என்றாலும் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்கள் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள்தான்

அவர்கள் எப்படி இவ்வளவு மனஉறுதியுடன் இருந்தார்கள் என்ற விவரங்களை அறியும் போது பிரமிப்பாக இருக்கிறது.

'சார் தாம்' என்பது இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்துள்ள இந்துக்களின் நான்கு புனித தலங்களை குறிக்கிறது. இந்த நான்கு புனித தலங்களையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் தங்கள் யாத்திரையை துவங்கும் இடமான யமுனோத்திரி உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ளது.

இந்த யமுனோத்திரிக்கு செல்வது என்பது சிரமமான சுற்றுவழிப்பாதையாக உள்ளது,சில்க்யாரா என்ற இடத்தில் உள்ள மலையைக்குடைந்து சுரங்கப்பாதை அமைத்துவிட்டால் எளிதில் யமுனோத்திரிக்க செல்லமுடியும்.இதற்காக தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் உ.பி.,பிகார்,உத்தரகண்ட்,ஜார்கண்ட் உள்ளீட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.

கடந்த 17 நாட்களுக்கு முன் ஊரே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க, 41 தொழிலாளர்கள் மட்டும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீபாவளியன்று அதிகாலை சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக சுரங்கப்பாதை மூடிக்கொண்டது.

இந்தப்பக்கம் மூடிய சுரங்கப்பாதை அந்தப்பக்கம் இறுகிய மலை என்ற இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தொழிலாளர்களில் பலர் இளைஞர்கள், இவர்ளின் சீனியரும்,சுரங்கப்பணியில் அனுபவம் மிக்கவருமான கபிர் சிங் நேகிதான் அனைவருக்கும் தைரியம் சொல்லி பயத்தை நீக்கினார்.

எல்லாவித தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தாங்கள் மாட்டிக் கொண்ட விஷயத்தை வெளி உலகிற்கு எப்படி தெரிவிப்பது எனத் தெரியாமல் விழித்தோம், அப்போது எங்கள் சீனியர் நேகிதான் தண்ணீர் குழாயை உடைத்துவிடச் சொன்னார், அதன்படி தண்ணீர் குழாயை உடைத்துவிட அனைத்து தண்ணீரும் வெள்ளம் போல கிடைத்த வழியில் வெளியில் பாய்ந்து சென்றது.இதைப் பார்த்த பிறகுதான் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என்பதை வெளியே இருந்தவர்கள் உணர்ந்து உடனடியாக செயல்பட்டனர்.

நல்லவேளையாக மின்சாரம் இருந்தது அதன் மூலம் விளக்கு வெளிச்சமும் இருந்தது இடமும் விசாலமாக இருந்தது, எங்களது முதல் தேவை உணவும் குடிநீரும்தான்.

குழாயை உடைத்துவிட்டதால் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது ஆனால் மலையில் கசிந்துவந்த நீர் எங்கள் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருந்தது, இருப்பில் இருந்த பிஸ்கட் உள்ளீட்ட உணவுகளை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம்.

பதினைந்து மணி நேரம் கழித்து இடுக்குகளை துளைத்துக் கொண்டு வந்த சிறிய ஸ்டீல் குழாய்களின் மூடிய முனைகளை எங்களிடம் இருந்து கருவிகள் மூலம் உடைத்து திறந்தோம், அதன் மூலம் வெளியில் இருந்து காற்று வந்தது கொஞ்சம் நிம்மதியும் வந்தது

சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலும் உலர் பழங்களும் பிறகு உணவும் வர ஆரம்பித்தது, நமக்காக வெளியே இருப்பவர்கள் நிறைய உழைக்கிறார்கள் என்ற எண்ணமே எங்களுக்கு தெம்பாக இருந்தது எங்கள் தலைவர் நேகி எல்லோரையும் உற்சகப்படுத்திக் கொண்டே இருந்தார்,குழந்தைப்பருவ விளையாட்டுக்களை விளையாடச் செய்து எப்போதும் பிசியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அடுத்த அடுத்த நாட்களில் உணவு வந்த குழாய் வழியாக வயரில் இணைக்கப்பட்ட சிறிய ரக கேமரா வந்தது அதன் மூலம் எங்களை வெளியில் இருப்பவர்களும் நாங்கள் வெளியில் இருப்பவர்களையும் பார்த்து பேசமுடிந்தது.அப்போதுதான் தெரிந்தது குளிர் மழை வெயிலைப் பொருட்படுத்தாது எங்கள் உறவுகள் எல்லாம் வெளியே எங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று,மேலும் தேசமே எங்களுக்காக பிரார்த்திக் கொண்டு இருக்கிறது என்பது புரிந்தது மனம் நெகிழ்தது ஆகவே நாங்கள் நன்றாக இருக்கிறோம் உற்சாகமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்.

பிறகு குடும்பத்துடன் பேசுவதற்கு ஏதுவாக மொபைல் போன் கிடைத்தது வீட்டில் பேசும்போது இப்போதுதான் முதல்வர் தாமி வந்து ஆறுதலும் தைரியமும் சொல்லிவிட்டுப் போனார் என்று சொன்னார்கள்.

எங்களை மீட்பதில் நிறைய பின்னடைவு ஏற்பட்டாலும் அதை எங்களிடம் சொல்லவில்லை வெளியில் வந்த பிறகுதான் அது தெரிந்தது, எங்களிடம் பேசும்போதெல்லாம் இதோ நெருங்கிவிட்டோம் காப்பாற்றிவிடுவோம் கவலைப்படாதீர்கள் என்று மட்டுமே சொன்னார்கள்.

17 வது நாள் இரவுதான் நாங்கள் வெளியே வருதற்கு ஏற்றவாறு ஒரு குழாய் வந்தது, அதன் முனையை உடைக்கச் சொன்னார்கள், உடைத்ததும் ஒருவர் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற வழி கிடைத்தது, அதன் வழியாக ஸ்ட்ரெச்சர் அனுப்பி எங்களை படுத்த நிலையில் வெளியில் வரச்சொன்னார்கள், ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை இது போன்ற குறுகிய பாதையில் செல்வது எங்களுக்கு பழகிய ஒன்று என்று சொல்லி எங்களின் தலைவரான நேகியை முதலில் போகச் சொன்னோம், ஆனால் அவரே நான் கடைசியில்தான் வருவேன் என்று சொல்லிவிட்டு கடைசியில்தான் வந்தார்.

வெளியில் வந்த எங்களை முதல் அமைச்சர் மாலை அணிவித்து வரவேற்றார் ரொம்ப, சந்தோஷமாக இருந்தது நமக்காக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

உடனடியாக வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியை கொண்டாட ஆசைதான் ஆனால் மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தற்போது மருத்துவமனையில் இருக்கிறோம், மன நல ஆலோசனை பெற்று வருகிறோம் ஒன்றும் பிரச்னை இல்லை ஒரிரு நாளில் வீட்டிற்கு சென்றுவிடுவோம், விட்டுப்போன தீபாவளியை கொண்டாடுவோம்.

எங்களுக்காக பிரார்த்தித்த ஒவ்வொருவருக்குள் நன்றிகள் என்றனர் உருக்கமாக..

-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (3)

  • sugumar s - CHENNAI,இந்தியா

    Really great on the rescuers efforts to save them by adopting and all means and appreciations to people who got stuck to stay confident

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement