Load Image
Advertisement

மைசூரு வள்ளிதமிழ் மீதுள்ள அளவற்ற பற்றின் காரணமாக மைசூருவில் உள்ள ஒரே தமிழ் பள்ளிக்கூடத்தை காப்பாற்றுவதற்காக, உயிரைக் கொடுக்காத குறையாக போராடிக் கொண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளி.

அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோலார் தங்க வயல் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான வள்ளி அங்குள்ள தமிழ் வழிக்கல்வியில்தான் கல்லுாரி வரைப்படித்தார்,பின் ஆசிரியர் தகுதிப்படிப்பு முடித்து பள்ளி ஆசிரியரானார்.

மைசூர் வி.வி.சாலையில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தின் ஆசிரியையாக 22 வருடங்களுக்கு முன் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இ்பபோது தலைமை ஆசிரியையாக உள்ளார்.

இவர் தலைமை ஆசிரியை ஆனது முதல் இந்தப் பள்ளிக்கும்,பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்க்க அயராது பாடுபட்டு வருகிறார்.

மாடுகட்டும் இடமாகவும்,சமூக விரோதிகளின் கூடாரமாகவும்,கிட்டங்கி போலவும் பாழடைந்து கிடந்த இந்தப் பள்ளியை படாதபாடுபட்டு சீரமைத்துள்ளார்.உள்ளூர் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் பள்ளியை பலவிதங்களில் புதுப்பித்து கட்டிடத்திற்கு பொலிவு ஏற்படுத்தியுள்ளார்.

கன்னட பள்ளிகளுக்கு வழங்குவது போல மாணவர்களுக்கு மதிய உணவு,ரொட்டி,பால்,முட்டை இங்கேயும் வழங்கவேண்டும் என்று அரசிடம் போராடிக்கேட்டுப் பெற்றுள்ளார்.

இங்கு படிக்கும் குழந்தைகள் எல்லாம் ஏழை எளிய குழந்தைகள்தான், இவர்களால் சீருடை கூட வாங்கமுடியாத நிலை, யாருக்கெல்லாம் சீருடை வாங்க முடியவில்லையோ அவர்களுக்கு எல்லாம் தன் கைக்காசு போட்டு வாங்கிக கொடுத்துள்ளார்,தனியார் பள்ளி மாணவர்கள் போல ஷீ,டை,சாக்ஸ் அணியச் செய்துள்ளார்.

காவிரி பிரச்னைக்கு பிறகு அரசு மறைமுகமாக தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளை ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்கள் வருகை குறைவு என்று காரணம்காட்டி மூடிவருகிறது அல்லது கன்னட மொழி வழிக்கல்விக்கூடமாக மாற்றிவருகிறது.இந்தப் பள்ளியையும் அப்படி காரணம் காட்டி மூடிவிட எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து பள்ளியின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

தமிழர்கள் இருக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று அங்குள்ள குடும்பத்தினரிடம் பேசி மாணவர் சேர்க்கைக்கு பெரும் முயற்சி எடுக்கிறார்.

மைசூரில் பல ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தாலும் தொன்னுாறு சதவீதம் பேர்களுக்கு தமிழ் பேச வருமே தவிர எழுதப்படிக்கத் தெரியாது.நாங்களோ எங்கள் பிள்ளைகளோ தமிழ் படித்து என்னவாகப்போகிறது என்றும் காரணம் சொல்வர்.

பிள்ளைகள் மட்டுமல்ல அப்பாக்களும்,அம்மாக்களும் ஏன் தாத்தா பாட்டிகளும் கூட தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் அது நம் தாய்மொழி என்று சொல்லி தமிழ் சங்கத்தின் மூலம் மாலை நேர இலவச தமிழ்ப்பள்ளி நடக்கவும் காரணமாக இருந்து வருகிறார்.

எங்கள் பள்ளியில் படிப்பதால் தாய் மொழியான தமிழைக் கற்றுக் கொள்ளலாம், உள்ளூர் மொழியான கன்னடம் கற்றுக் கொள்ளலாம்,ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் கூடவே இந்தியும் கற்றுத்தருகிறேன் என்று சொல்லி இவர் தன் சொந்த முயற்சியில் இந்தி மற்றும் யோகா போன்ற ஆரோக்கியமான விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

ஒன்று முதல் 7 வரை வகுப்புகள் உள்ளன, இருபாலர் பள்ளி மொத்த மாணவர் எண்ணிக்கை 27,வள்ளியையும் சேர்த்து மூன்று ஆசிரியைகள் உள்ளனர்,மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக்க வேண்டும் என்பதுதான் வள்ளியின் ஒரே லட்சியம் என்கிறார்,அவரது லட்சியம் ஈடேறட்டும்.

-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (4)

 • Karuthu kirukkan - Chennai,சிங்கப்பூர்

  மொழி காக்க தமிழராகிய நாமும் உதவலாமே இவரை தொடர்புகொள்ள அவரது மின் அஞ்சல் அல்லது கைபேசி எண் கிடைத்தால் ஏதாவது உதவலாம்.

 • Hemalatha - Coimbatore ,இந்தியா

  உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள். நான் ஒரு யோகா ஆசிரியை. இவரது தொடர்பு எண் கிடைக்குமா?

 • Hemalatha - Coimbatore ,இந்தியா

  உங்கள் லட்சியம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். நான் ஒரு யோகா ஆசிரியை. உங்கள் பள்ளிக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய தயாராக இருக்கிறேன்.

 • வேங்கடசுப்பிரமணியன் - Dindigul ,இந்தியா

  இவரை தொடர்புகொள்ள அவரது மின் அஞ்சல் அல்லது கைபேசி எண் கிடைத்தால் ஏதாவது உதவலாம். கிடைக்கும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement