Load Image
Advertisement

ஸ்வீட் பாக்ஸ் பணத்துல 'ஆட்டை' லஞ்சத்துக்கு இவ்வளவுன்னு அட்டவணை

வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

அவளிடம் காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''தாமரை கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவரே, பதவியை ராஜினாமா செஞ்சுட்டாரே... அந்தக் கட்சியில என்னதான் நடக்குது,'' என, ஆரம்பித்தாள்.

''அதுவா, அரசாங்கத்துக்கு சொந்தமான, உபரி நிலப்பிரச்னையை காரணமா சொல்றாங்க. ரூ.229 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை, அவரும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரும் சேர்ந்து, 'பிளாட்' போட்டு வித்ததா குற்றச்சாட்டு இருக்கு. ஐகோர்ட்டு வழிகாட்டுதல்ல, அந்த நிலத்தை 'ரெவின்யூ டிபார்ட்மென்ட்' கையகப்படுத்தி இருக்கு. அந்த இடத்தை வாங்கி, வீடு கட்டுனவங்க பலரும், இவுங்க மேல கேஸ் போட்டுட்டு வர்றாங்க,''

''தி.மு.க.,வுக்கு நெருக்கமான லாட்டரி அதிபருக்கு, 'ஆல் இன் ஆல்' ஆக இருந்து, நிலம் வித்து, வாங்கிக் கொடுக்கற அந்த எம்.எல்.ஏ.,வுக்கும், இவருக்கும் பெருசா சிக்கல் வெடிக்கும்னு சொல்றாங்க. இந்த பிரச்னை வெடிச்சதும், ராஜினாமா லெட்டர் எழுதி வாங்கிட்டாங்களாம்,''

''இருந்தாலும், 'மலை'யானவர் ஆதரவாளரங்கிறதுனால, காப்பாத்துறதுக்கு பலவிதத்திலயும் முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா, லோக்சபா எலக்சன் நேரத்துல, தேவையில்லாத குடைச்சல் வரலாம்னு, மாத்தியிருக்காங்க.

புதுசா நியமிச்சிருக்கிற மாவட்ட தலைவர், ஆர்.எஸ்.எஸ்., கொள்கை பிடிப்பு கொண்டவராம். கீழ்மட்டத்துல இருந்து வந்தவர்ங்கறது மட்டுமில்லாம, எல்லாத் தரப்புலயும் இணக்கமா இருப்பாருன்னு நம்புறாங்க,''

''ஆளுங்கட்சி தரப்புல இளைஞரணி கூட்டம் நடத்தப் போறாங்களாமே; உதயநிதி வர்றதா சொல்றாங்களே...''

''ஆமாப்பா... உண்மைதான்! வர்ற 2ம் தேதி கொடிசியா மைதானத்துல கூட்டம் நடத்த பிளான் பண்ணி இருக்காங்க. பொறுப்பு அமைச்சரா செந்தில்பாலாஜி இருந்தப்போ, இதே இடத்துல, பூத் கமிட்டி கூட்டத்தை பிரமாண்டமா நடத்தி, கட்சி தலைமையையே திரும்பிப் பார்க்க வச்சாரு,''

''அதே மாதிரி, பிரமிக்கிற வகையில கூட்டத்தை ஏற்பாடு செய்ய, உத்தரவு போட்டு இருக்காங்களாம். இளைஞரணியில இருந்து மட்டும், 20 ஆயிரம் பேரை திரட்டனும்னு உத்தரவாம்,''.

''இருந்தாலும், உடன்பிறப்புகள் பலரும் முணுமுணுப்புல இருக்கறதா கேள்விப்பட்டேனே...''

''அதுவா... நீலகிரி எம்.பி., ராசா மேல கடுங்கோபத்துல இருக்காங்க. அவரு கலந்துக்கிற அரசு நிகழ்ச்சிகள்ல, தேங்காய், பழம் உடைச்சு பூமி பூஜை நடத்துறதுக்கு தடை போடுறாங்க. இதுசம்பந்தமா, எம்.பி., ஆபீஸ்ல இருந்து, அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்றாங்க. அவர் வரலைன்னா, ஜோரா பூஜை நடத்தி, வேலையை துவக்குறாங்க. எலக்சன் வர்ற நேரத்துல, எம்.பி., ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறாருன்னு, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... அன்னுார் ஏரியாவுல ஆளுங்கட்சி பலவீனமா இருக்கு; மூனு கோஷ்டியா இருக்காங்கன்னு சொல்றாங்களே...''

''இதுவும் உண்மைதான், மித்து! வடக்கு ஒன்றிய செயலாளரா இருக்கற பழனிச்சாமி நடத்துற நிகழ்ச்சிக்கு, இதே பகுதியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஆனந்தனும், இவரோட ஆதரவாளர்களும் வர்றதில்லை. நகரச் செயலாளர் பரமேஸ்வரன் கலந்துக்கிற நிகழ்ச்சிகளுக்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், இவரோட ஆதரவாளர்களும் வர்றதில்லை,''

''இதே மாதிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலனும் தனி கோஷ்டியா இருக்காரு. வரப்போற எம்.பி., தேர்தல்ல, மறுபடியும் ராசா போட்டியிட்டா, இவுங்களை சமாளிச்சு, எப்படித் தேறப்போறாரோன்னு, உடன்பிறப்புகள் அங்கலாய்க்கிறாங்க,''

சூலுார் ஒன்றியத்துல இருக்குற, கேரள முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பேருள்ள ஒரு அதிகாரி, எப்பப் பார்த்தாலும் கரன்சி அள்ளுறதிலேயே குறியா இருக்காரு. அவரோட அதிகாரத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகள்ல நடக்குற வேலைகளுக்கு, பில் சான்க்ஷன் செய்றதுக்கு, கான்ட்ராக்டர்கள்கிட்ட பணத்தை கறந்துர்றாராம். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி, அட்டவணையே வச்சிருக்காராம்,''

''லஞ்சம் கொடுக்குறதுக்கு முரண்டு பிடிச்சா, பில்களை மாசக்கணக்குல முடக்கி வைக்கிறாராம். இதனால, அந்த ஆபீசர் வேலைபார்க்குற பகுதியில, எந்த வேலையும் இனி எடுக்கக் கூடாதுன்னு கான்ட்ராக்டர்கள்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க,''

''சில வி.ஏ.ஓ.,க்களால ஒட்டுமொத்த வி.ஏ.ஓ.,க்களுக்கும் கெட்ட பெயர் வர்றதா, சூலுார் ஏரியாவைச் சேர்ந்தவங்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.

''அப்படி என்னப்பா... நடந்துருச்சு,''

''சுங்கம் வசூலிக்கிற ஊர்கள்ல வேலை பார்க்குற வி.ஏ.ஓ.,க்கள், வசூல்ல பின்னி பெடல் எடுக்குறாங்களாம். கலெக்டர்கிட்ட புகார் சொல்ற அளவுக்கு, அவுங்களோட செயல்பாடு மோசமா போயிட்டு இருக்காம்; அநேகமா, வி.ஏ.ஓ., டிரான்ஸ்பர் வரும்னு சொல்றாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... கவர்மென்ட் ஆபீசுக்கு தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் சப்ளை செய்த கடைக்காரர், பணத்துக்காக தெனமும் நடையாய் நடக்குறராமே...''

''நானும் கேள்விப்பட்டேன். விரிவா சொல்றேன். வடக்கு தாலுகாவுல வேலை பார்க்குறவங்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெட்டி பெட்டியா ஸ்வீட்ஸ் வாங்கியிருக்காங்க. அந்தக்கடை ஓனருக்கு இன்னும் பணம் கொடுக்காம தவிக்க விடுறாங்க. தாசில்தாரோ, 'டிரான்ஸ்பராகி' போயிட்டாரு. கடை ஓனரு, தெனமும் தாலுகா ஆபீசுக்கு நடையாய் நடக்குறாரு,''

''இதே அலுவலகத்துல, கல்லணை கட்டியவர் பெயர் கொண்ட உதவியாளர் ஒருத்தரு துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துல, தொழிற்சாலை நடத்துறவங்கள்கிட்ட, 'தீபாவளி பணம்' வசூலிச்சு மொத்தமா சுருட்டிட்டாராம்.

இதே அலுவலகத்துல, ரொம்ப வருஷமா வேலை பார்க்குற இன்னொரு அதிகாரிக்கு, வேற எடத்துக்கு 'டிரான்ஸ்பர்' கெடைச்சிருக்கு. அவரு, ஆபீஸ்ல வேலை பார்க்கறவங்களுக்கும், பிரெண்ட்சுக்கும் 'கிடா வெட்டு' விருந்து வைக்கப் போறாராம்; அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்காரு,''

''பத்திரப்பதிவு அலுவலகத்துல, ஒரு லேடி ஆபீசர் வசூலை அள்ளுறாங்களாமே...'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். பெரியநாயக்கன்பாளையம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வேலைபார்க்குற அந்த ஆபீசர், வசூலுக்காகவே தனி டீம் போட்டு, கனகச்சிதமா பண்றாங்க. ஊர் நத்தம் பகுதிகளை பதிவு செய்றதை, இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்காங்க. ஆனா, 'கவனிப்பு' இருந்தா போதுமாம்; பத்திரப்பதிவு செஞ்சு கொடுக்குறாங்களாம்,'' என்ற மித்ரா, ''நம்மூர் போலீஸ் ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து தான் நடக்குதுன்னு சொல்றாங்க... போலீஸ் கமிஷனர், ஸ்டேஷன் விசிட் போகவே மாட்டாரா...'' என கேட்டாள்.

''ஆமாப்பா, ஸ்டேஷன்ல இருக்கற போலீஸ்காரங்களுக்கு. பயமே இல்லாம போச்சு. சிங்காநல்லுார் லேடி எஸ்.ஐ., ஒருத்தரு, புகார் கொடுக்க யாரு வந்தாலும், பேரம் பேசுறாராம். பேரத்துக்கு ஒத்துக்கிட்டா மட்டும்தான் கேஸ் பைல் பண்ணுறாங்களாம்; இல்லேன்னா, அலைய விடுறாராம்; லஞ்சமா வாங்குறதையும் யாருக்கும் பங்கு கொடுக்காம மொத்தத்தையும் லவட்டிட்டு போயிடுறாராம். அதனால, ஸ்டேஷன்ல இருக்கற மற்ற போலீஸ்காரங்க நமநமக்குறாங்க,''

''இதே மாதிரியே, போத்தனுார் ஸ்டேஷன் புலனாய்வு பிரிவுல இருக்குற எஸ்.ஐ., ஒருத்தரும், தனக்கு வருமானம் வர்ற மாதிரி இருந்தா, அந்த வழக்குல அக்கறை காட்டுறாராம். இல்லேன்னா... பெயரளவுக்கு விசாரிச்சுட்டு கண்டுக்கிறதில்லையாம்,''

''ஆனா, உயரதிகாரிகளுக்கு முன்னாடி, தன்னைப் போல வேலை செய்றதுக்கு வேரு யாரும் இல்லைங்கிறது மாதிரி காட்டிக்கிறதுல கில்லாடியாம். இவரால நகை, பணத்தை இழந்த பலரும் மன உளைச்சல்ல தவிக்கிறாங்க,''

''செல்வபுரம் லிமிட்டுல வேலை பார்க்குற, சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு, ரேஷன் அரிசி கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா கடத்துறவங்களுக்கு, 'சப்போர்ட்'டா இருக்காராம். பல வருஷமா இதே ஸ்டேஷன்ல இருக்கற இவரை மாத்துனா, இல்லீகல் கும்பலை ஈசியா பிடிக்கலாம்னு போலீஸ்காரங்க சொல்றாங்க,''

''குப்பையில கரன்சி அள்ளுறாங்களாமே...'' என்றபடி, தேங்காய் துருவ ஆரம்பித்தாள் மித்ரா.

''மித்து, கொஞ்ச நஞ்சமல்ல. கோடிக்கணக்குல அள்ளுறாங்க. மேட்டுப்பாளையம் முனிசிபாலிட்டியில, குப்பை அள்ளுற பொறுப்பை, ஆளுங்கட்சி முக்கியப்புள்ளி ஆசீர்வாதத்துல, ஒரு கம்பெனி கைப்பத்தி இருக்கு. 'சென்னை செல்வாக்கு' இருக்குற தைரியத்துல, கீழ்மட்டத்துல யாரையும் 'கவனி'க்கலையாம்,''

''அதனால, அ.தி.மு.க., கவுன்சிலர்களை துாண்டி விட்டு, பிரச்னையை பெருசாக்கிட்டாங்க. மேலிடத்துல இருந்து விசாரிச்சப்போ, ஆட்சிக்கு கெட்டப்பேரு வந்துரும்னு சொல்லி, ஒப்பந்தத்தையே 'கேன்சல்' பண்ணிட்டாங்க.

புது நிறுவனத்தை நியமிக்கற வரைக்கும், முனிசிபாலிட்டி குழுக்களை குப்பை அள்ளச் சொல்லி இருக்காங்க. இவுங்க, உள்ளூர் உடன்பிறப்புகளோட ஆதரவாளர்களாம். இப்போ, குப்பை அள்ளுறதுல கரன்சி மழை பொழியுதாம்,'' என்றபடி, குழா புட்டுக்கு, மாவு கிளறினாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement