Load Image
Advertisement

போலி வீடியோக்கள் சர்ச்சை: கடும் விதிமுறைகள் அவசியம்

சமீப நாட்களாக, 'ஆர்டிபிஷியல் இன்டெலி ஜென்ஸ்' என அழைக்கப்படும், செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரபலங்களை போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களின் உடலில், பிரபலங் களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்படுகின்றன.

சில பிரபல நடிகையருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் ஓரிரு போலி வீடியோக்கள் வெளியாகி நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தின. பிரதமர் மோடி பாட்டு பாடுவது போலவும், போலி வீடியோ வெளியாகி உள்ளது.

இதனால், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து, பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். அதுமட்டு மின்றி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற, 'ஜி - ௨௦' மாநாட்டில் பேசிய அவர், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்துவதில், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, அதிகரித்து வரும் போலி வீடியோக்கள் அபாயத்தை ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக, புதிய விதிமுறைகளை உருவாக்கவும், அதை மீறி போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடுவது கண்டறியப்பட்டால், கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் மத்திய அரசு முற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த வாரத்தில், சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார்.

அப்போது, 'போலி வீடியோக்கள் ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. தனி நபர்கள், சமூகம் மற்றும் நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை, இவை சிதைக்கின்றன. எனவே, இத்தகைய வீடியோக்களை கண்டறிதல், அவை பரவாமல் தடுத்தல், உருவாகாமல் கட்டுப் படுத்துதல் போன்றவற்றில், அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என்றும் கூறிஉள்ளார். அதை, சமூக வலைதள நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் எங்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகமானாலும், அடுத்த சில நாட்களில் அவற்றை தவறாக பயன்படுத்தும் விஷமிகளின் செயல்பாடுகள் தலை துாக்குவது நடைபெறும். அதுபோலவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதும் துவங்கி உள்ளது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்.

அதாவது, சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானால், அது உண்மையானதா அல்லது போலியானதா என கண்டறிவது, அந்த போலி வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரவாமல் தடுப்பது, இதுதொடர்பாக புகார் தர ஒரு தெளிவான அமைப்பு முறையை உருவாக்குவது முக்கியம்.

அத்துடன் இதுபோன்ற வீடியோக்களை மக்கள் எளிதில் நம்பாமல் இருக்க, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில், மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்; அதையும் விரைவாக செய்ய வேண்டும்.

போலி வீடியோக்கள், தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். நம் நாட்டில் உள்ள மக்களில், ௮௦ கோடி பேர் தற்போது இணையதள சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதனால், தேர்தல் நேரங்களில் இதுபோன்ற வீடியோக்கள் பரவினால், அது அரசியல் ரீதியாக பெரிய தாக்கங்களையும், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அரசியல்வாதிகள், தங்களின் எதிரிகளை வீழ்த்த, போலி வீடியோ தொழில் நுட்பத்தை கருவியாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சமூகத்திற்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டியதை உறுதி செய்வது அவசியம்.

சமூக விரோத சக்திகளுக்கு, இது பலன் தரும் சூழ்நிலை உருவாகி விடக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியானால், அதனால் ஏற்படும் தாக்கத்தை உணராமல் பொதுமக்கள் வேகமாக பரப்புவதும் தடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.வாசகர் கருத்து (1)

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    இப்படி எல்லாம் ஆலோசனை நடத்தி காலம் தாழ்த்துவதை விட முதலில் தடை செய்து விட்டு கடுமையான தடுப்பு நடவடிக்கைகளுடன் அனுமதிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement