Load Image
Advertisement

கனவுக்கு சிறகுகள் கொடுத்த உஷா

'ஆணுக்கு நிகர் பெண்களே என்ற மந்திரச்சொல் அறிவோம்' என்ற கூற்றிற்கு ஏற்ப ஆண்கள் கோலோச்சும் 'வைல்ட் லைப் போட்டோகிராபியில்' அசத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த போட்டோகிராபர் உஷா.

தனது 50 வயதிலும் காடு, மலை என பறவைகளை தேடி புகைப்படம் பிடித்து மனதால் மகிழ்ந்து வாழ்வின் இருப்பை அர்த்தமாக்கி கொண்டிருக்கிறார்.

புதுச்சேரியில் பிறந்த உஷா படிப்புகளை கோவையில் முடித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்டவர். திருமணம், குழந்தை, குடும்பம் என இவரின் வாழ்க்கையும் குறுகிய வட்டத்தில் சுருங்கி போய்விட்டது. ஆண்டுகள் செல்ல 40 வயதை தாண்டி கொண்டு போய் விட்டிருந்தது. அப்போது சிறு வயது கனவுகள் எட்டிப்பார்த்தது. உடனே கணவரிடமும், மகனிடம் தெரிவிக்க அவர்களும் அனுமதிக்க கனவுக்கு மீண்டும் உயிர் கிடைத்தது.

கட்டுக்கடங்காத ஆர்வம், உத்வேகம், விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையில்லை என்பதை உஷாவின் வாழ்வு உரக்கச் சொல்கிறது. கனவு மட்டும் போதுமா அதற்கு தகுந்த பயிற்சியும் முயற்சியும் வேண்டுமல்லவா. அதற்காக போட்டோகிராபியை முறைப்படி கற்றிருக்கிறார்.

நண்பர் சக்தி துளிர் என்பவரின் ஒத்துழைப்பால் பயணங்கள் தொடர்ந்தன. காடுகள், மலைகள் என ஒரு சிறு பறவையின் புகைப்படத்திற்காக அலைந்திருக்கிறார். வைல்ட் லைப் போட்டோகிராபி என்பது சாதாரணமல்ல. காடுகளில் உணவு, இருப்பிடம் எதுவும் கிடைக்காது. அதிலும் பெண் என்றால் சொல்லவா வேண்டும். தன்னால் முடியும் என்ற ஒற்றை நம்பிக்கையோடு, எல்லாவற்றையும் கடந்து தற்போது தன் புகைப்படத்தால் சாதித்துக் கொண்டிருக்கிறார் உஷா

அவர் கூறுகையில், 'காடுகளில் பயணிக்கும் போது ஆபத்துகள் வரலாம். காட்டிற்கு ஒரு மதிப்பளித்துதான் நாம் அங்கு நிற்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரும். ஒரு புகைப்படத்திற்காக எல்லாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் வரும். ஆனால் நாம் எதிர்பார்த்த பார்த்திராத அந்தக் காட்சியைப் படம்பிடிப்பதை மறக்கவே முடியாது. இப்படி எல்லாப் படங்களுக்குப் பின்னாடியும் அவ்வளவு கதைகள் இருக்கு. அந்த படத்தை எடுத்து பாக்குற போது கஷ்டமெல்லாம் பறந்து போகும்.

எந்த லட்சியமும் இல்லை. எனக்கு பிடித்திருக்கிறது. என் கனவு, ஆசைக்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை. இப்போதும் என்னாலும் காடு, மலை பாராது பயணிக்க முடியும். பெண்கள் முதலில் தன் கனவுகளை நோக்கி ஒரு அடியெடுத்து வைக்க வேண்டும். குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து விடாமல் பரந்த உலகை பார்க்க பறக்க வேண்டும்,'என்றார்.

தன் கனவுக்காக, அமைதிக்காக, நிம்மதிக்காக பிடித்த ஒன்றை எந்த வயதிலும் செய்ய முடியும் என பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் உஷா பாராட்டிற்குரியவரே.

இவரை வாழ்த்த 97874 13073



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement