Load Image
Advertisement

'நாவடக்காத' அதிகாரிக்கு நாமக்கல்லு! மதுவிலக்கு போலீசுக்கு மாமூல் தள்ளு

பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர்.

கருவூலம் அருகே ஸ்கூட்டரை ஓரம் கட்டிய சித்ரா, ''மருதமலையில் நடந்த கந்தசஷ்டி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு போயிருந்தியே, ஏற்பாடு எப்படி இருந்துச்சு,'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.

''சுவாமி தரிசனம் நல்லபடியா இருந்துச்சு. கோயிலைச் சேர்ந்த கட்டளைதாரர்கள், உபய தாரர்களுக்கு மட்டும் 'பர்மிஷன்' கொடுத்திருந்தாங்க. பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த சிட்டி போலீசார், அவுங்களுக்கு வேண்டப்பட்டவங்கன்னு பலரையும் குடும்பத்தோடு அழைச்சுட்டு வந்து, திருக்கல்யாணம் நடந்த இடத்துக்கு அனுப்பிட்டாங்க,''

''அதுக்கப்புறமும், பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்தாம, அவுங்களும் சுவாமி தரிசனம் செய்றதுக்கு கெளம்பி போயிட்டாங்க. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு அதிகமாயிடுச்சு. அதையெல்லாம் போலீஸ்காரங்க கண்டுக்கவே இல்லை. அதை கவனித்த போலீஸ் உதவி கமிஷனர் எழுந்து சென்று, மைக்கில் பேசி, ஓரளவுக்கு சீரமைச்சாரு,''

நாவடக்காததால் நாமக்கல்லு!''பெண் எஸ்.ஐ., பத்தி தரக்குறைவா பேசுன சிறப்பு எஸ்.ஐ.,யை நாமக்கல்லுக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! கோவை மாவட்ட ஆயுதப்படையில பணிபுரிந்து வந்த சிறப்பு எஸ்.ஐ., ஒருத்தரு, தன்னுடன் பணிபுரியும் லேடி எஸ்.ஐ., பார்ட்டிகளுக்கு போயி 'சரக்கு' போடுவதாக, பலரிடமும் வத்தி வச்சிருக்காரு; சம்பந்தப்பட்ட லேடி எஸ்.ஐ., காதுக்கும் இந்த தகவல் எட்டியிருக்கு,''

''கோபத்தில் கொந்தளித்த லேடி எஸ்.ஐ., நேரா எஸ்.பி., ஆபீசுக்கு போயி, அதிகாரியை பார்த்து, புகார் கொடுத்திருக்கிறாரு. சிறப்பு எஸ்.ஐ.,யை கூப்பிட்டு 'என்கொயரி' நடத்தி இருக்காங்க. மதுபோதையில் இஷ்டத்துக்கு அள்ளி விட்டது தெரியவந்ததும், அவரை நாமக்கல்லுக்கு துாக்கி அடிச்சிருக்காங்க,''

'டாஸ்மாக் பார்' போலீஸ் 'டாஸ்க்'இருவரும் பேசிக்கொண்டே, கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்கு வந்தனர். அப்போது, உளவுத்துறை போலீசார் கடந்து சென்றனர்.

அவர்களை பார்த்த சித்ரா, ''மதுவிலக்கு போலீசார் மீது எக்கச்சக்கமா புகார் வருதே. போலீஸ் கமிஷனர் என்னதான் செய்றாரு...'' என கேட்டாள்,

''ஆமாக்கா, ஏகப்பட்ட புகார் வந்துட்டு இருக்கு. வழக்கமா, மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வருஷம் தான் பணி வாய்ப்பு கொடுப்பாங்க. இப்போ, ஒரு வருஷத்தை தாண்டி, அதே டீம் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு,''''ஒரு நாளைக்கு பார்களில் இருந்து மட்டும் ரூ.25 ஆயிரம் வரைக்கும் மாமூல் வசூல் பண்றாங்களாம்.

ஒவ்வொரு பார்-க் கும் வசூலிக்கிற தொகையை இப்போ 'டபுள்' ஆக்கிட்டாங்களாம். மாமூல் கொடுத்தாலும் கேஸ் போடணுங்கிறதுக்காக, ஒன்னு அல்லது ரெண்டு கேஸ் பைல் பண்ணுறாங்களாம். எத்தனை பேத்துக்கு தான், மாமூல் கொடுக்குறதுன்னு, பார் உரிமையாளர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,''

''டாஸ்மாக் பார்-ன் னதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. முன்னாள் எம்.எல்.ஏ., ஒருத்தரு, நிறைய 'டாஸ்மாக்' கடைகளை கேட்டு, அடம் பிடிக்கிறதா கேள்விப்பட்டேனே,''

''ரெண்டு முறை எம்.எல்.ஏ.,வா இருந்து பதவி சுகத்தை அனுபவிச்ச அவரு, அ.தி.மு.க., வுல இருந்தப்போ, தொகுதி லிமிட்டுக்குள்ள இருந்த டாஸ்மாக் 'பார்' அத்தனையையும் தன்னுடைய கட்டுப்பாட்டுல வச்சிருந்து, கரன்சி மழையில குளிச்சிருக்காரு. இதே மாதிரி, இப்பவும் சம்பாதிக்க ஆசைப்பட்டு, எல்லா கடைகளையும் தனக்கே ஒதுக்கணும்னு அடம் பிடிக்கிறாராம். அதனால, ஆளுங்கட்சிக்குள்ள புகைச்சல் ஓடிட்டு இருக்குதாம்,''

கோவிலிலும் 'ஆட்டம்'பழைய பத்திரப் பதிவு அலுவலக வளாகத்துல இருந்த விநாயகர் கோவிலை பார்த்த சித்ரா, ''நம்மூரிலும் கோவில் நிர்வாகத்துல அரசியல் தலையீடு வர ஆரம்பிச்சிட்டதா சொல்றாங்களே... உண்மைதானா,'' என கேட்டாள்.

''ஆமாக்கா... உண்மைதான்! அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல சூலுார் ஏரியாவுல ஏகப்பட்ட கோவில் இருக்கு. கருமத்தம்பட்டியில இருக்குற, சென்னியாண்டவர் கோவில்ல அ.தி.மு.க.,வை சேர்ந்தவங்களும், சூலுார் பெருமாள் கோவில்ல தி.மு.க.,வை சேர்ந்தவங்களுக்கு தலையிடுறாங்களாம்,''

''நிர்வாகத்திலும், பூஜை நடைமுறையிலும் தலையிட்டு அதிகாரம் செலுத்துறதுனால ஏகப்பட்ட குளறுபடி நடக்குதாம். அறங்காவலர் பதவியை கைப்பத்துறதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்க செய்ற அலம்பல்களால், இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோன்னு, பக்தர்கள் ரொம்பவும் மனக்கஷ்டத்துல இருக்காங்க,''

அப்போதும் இப்போதும்!''கார்ப்பரேஷன்ல புரோக்கர்கள் கை ஓங்கியிருக்காமே. புரோக்கர்கள் மூலமா பைல் போனாத்தான், உயரதிகாரிகள் கையெழுத்து போடுறதா சொல்றாங்க...'' என, 'ரூட்' மாறினாள்

''அதுவா... பில்டிங் அப்ரூவல், லே-அவுட் அனுமதி வாங்கிக் கொடுக்குறதுக்கு ஏடிஎம்கே., ஆட்சியில புரோக்கர் கும்பல் செயல்பட்டுச்சு. அதே ஆட்கள் இப்போதும் ஆளுங்கட்சியில இருக்குற முக்கிய நிர்வாகிகளை வசப்படுத்திட்டாங்க,''

''கார்ப்பரேஷன் அதிகாரிகளையும் தனியா சந்திச்சு, அவர்களின் 'தேவை'யை பூர்த்தி செஞ்சு, பைல்ல கையெழுத்து வாங்கிடுறாங்க. கவர்மென்ட் உத்தரவுப்படி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிச்சா, மாதக்கணக்குல அலைக்கழிக்கிறாங்க. புரோக்கர் மூலமா போனா, அப்ரூவல் கெடைச்சிடுது. கோடிகளில் புரளும் புரோக்கர்கள், தங்களது கார்களில் எப்போதும் பெருந்தொகையை வச்சிருந்து, கார்ப்பரேஷன் ஆபீசர்களை கரன்சி மழையில் குளிக்க வைக்கிறாங்களாம்,''

'சுளுக்கு' கமிஷனர் மிரளும் அதிகாரிகள்''புதுசா வந்திருக்கிற கார்ப்பரேஷன் கமிஷனர், அதிகாரிகளை 'சுளுக்கு' எடுக்குறாராமே...''

''கார்ப்பரேஷன்ல நிறைய ஆபீசர்களுக்கு வேலையே தெரியறதில்லை. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் முடிஞ்சவங்களும், செல்வாக்கை பயன்படுத்தி, வார்டு இன்ஜினியராகி, ரோடு போடுறாங்க. அவுங்களிடம் எப்படி தரமா வேலை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், சின்னப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்குற மாதிரி, 'பாடம்' நடத்துறாராம். இருந்தாலும், பொதுவெளியில், ஒரு முறையில் பேசுறதுனால, சில ஆபீசர்ஸ் மனக்கசப்புல இருக்காங்க,''

''திட்டு வாங்கி நொந்து போன ஒரு அதிகாரி, ரிடையரான ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் போயி, கண்ணீர் விட்டு, கதறி அழுதிருக்காரு. பரிதாபப்பட்ட அவர், சென்னைக்கு போன் போட்டு, துறையை கவனிக்கும் சீனியரிடம் பக்குவமா சொல்லியிருக்காரு. சீனியரும் நம்மூரில் பணிபார்த்தவர் என்பதால், 'கோயமுத்துார்க்காரங்க நல்லா பழகுவாங்க; மரியாதை எதிர்பார்ப்பாங்க; யாரையும் மதிப்பு குறைவா பேசக் கூடாது'ன்னு சொல்லி இருக்காராம். அதுல இருந்து, கொஞ்சம் மாற்றம் தெரியுதாம்,''

ஆடுற மாட்ட... 'ஆடி கறக்கணும்'''இருந்தாலும், சுகாதார அலுவலர்களிடம் கெடுபிடி காட்டிய பிறகுதான் வேலையே நடந்துச்சாமே...''

''அதுவும் உண்மைதான்! குப்பை அள்ளுறதுக்கு மட்டும் நம்மூருக்கு சென்ட்ரல் கவர்மென்ட் கோடிக்கணக்குல நிதி ஒதுக்குது. அதை, முறையா செலவழிக்கிறதில்லை. நம்மூரு குப்பையா கெடக்குறதுக்கு கார்ப்பரேஷன் ஹெல்த் டிபார்ட்மென்ட்டுக்காரங்களும் ஒரு காரணம்னு சொல்றாங்க,''

''அவுங்களை கூப்பிட்டு, 'மீட்டிங்' போட்டு, குப்பை அள்ளிட்டு போற வாகனங்களுக்கு 'ரூட் சார்ட்' ரெடி பண்ணி தரச் சொல்லியிருக்காரு. சிலர் மட்டும் தராம இருந்திருக்காங்க; அவங்களை பார்த்து, 'பத்திரிகை வச்சா தான் தருவீங்களா'ன்னு கேட்டிருக்காரு. இதுக்கு மேல டைம் வாங்குனா, வார்த்தை தடிச்சிருமோன்னு பயந்து, அன்னைக்கு சாயாங் காலம் அஞ்சு மணிக்கு, 'ரூட் சார்ட்' போட்டுக் கொடுத்திருக்காங்க,''

நாங்கள் அடிமையில்லை!''அதெல்லாம் இருக்கட்டும். பாரதியார் பல்கலை பேராசிரியர்கள் பலரும் கொந்தளிப்புல இருக்காங்களாமே... என்ன மேட்டர்... விசாரிச்சியா..''

''விசாரிக்காம இருப்பேனா... பாரதியார் பல்கலையில என்ன நிகழ்ச்சி நடந்தாலும் சிண்டிகேட் மெம்பர்களுக்கு தகவல் சொல்லணும்னு சுற்றறிக்கை அனுப்பி இருக்காங்க. அவுங்களுக்கு தகவல் சொல்றதுக்கு பி.ஆர்.ஓ., இருக்காரு. நாங்க எதுக்கு சொல்லணும்னு துறை தலைவர்களும், பேராசிரியர்களும் கொந்தளிக்கிறாங்க. அவுங்களுக்கு நாங்க என்ன அடிமைகளான்னு சமூக வலைதளத்துல பதிவு வெளியிட்டு, எதிர்ப்பை காண்பிச்சிருக்காங்க,''

விளையாட்டிலும் 'விளையாட்டு'''பாரதியார் பல்கலை பத்தி எனக்கொரு விஷயம் தெரியும் சொல்லட்டுமா...'' என்ற சித்ரா, ''ஆந்திராவுல நடந்த தென்மாநில அளவிலான கபடி போட்டிக்கு, நம்மூர்ல இருந்து கல்லுாரி மாணவர்கள் 'டிரெய்ன்'ல போனாங்க. வழக்கமா, பாரதியார் பல்கலையில இருந்து, டிக்கெட் முன்பதிவு செஞ்சு, தினப்படி, பயணப்படி கொடுத்து அனுப்புவாங்க. விளையாடுறதுக்கு தேவையான யூனிபார்ம் கொடுக்குறது வழக்கமாம்,''

''இந்த தடவை, அவுங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செஞ்சு கொடுக்கலை; டீம் மேனஜர்ல இருந்து வீரர்கள் அத்தனை பேரும் பொதுப்பெட்டியில பயணமாகி இருக்காங்க; அவுங்களுக்கு சரியான சாப்பாடும் கெடைக்கலை.

போட்டி நடந்த இடத்துக்கு போயி சேர்றதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்காங்க. அதனால், ஸ்டூடன்ஸ் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. விளையாட்டுத் துறையை சேர்ந்தவங்களோ, நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை; பல்கலை நிர்வாகம் சம்பந்தப்பட்டதுன்னு, இந்த மாதிரி விஷயத்துல கவனம் செலுத்துறதில்லையாம்,''

அவரோ 'சைலன்ட்' இவரோ 'வைலன்ட்'கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கல்வித்துறை சேர்ந்த அலுவலர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த மித்ரா,''திருப்பூர்ல இருந்து டிரான்ஸ்பராகி வந்தாரே, கல்வி அதிகாரி எப்படி இருக்காரு... சத்தம் இல்லாம இருக்காரே... என்னாச்சு...'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.

''ஆமாப்பா... உண்மையே அதுதான்! நம்மூர்ல வேலை பார்க்குறதுக்கு அவருக்கு இஷ்டமில்லையாம். தலைமை ஆசிரியர்களிடம் பேசிக்கிறதே இல்லையாம். மூன்றெழுத்து உதவியாளரே 'தாட் பூட்'டு உத்தரவு பிறப்பிக்கிறாராம்.

ஜூனியரான இவர், தலைமை ஆசிரியர்களை ஒருமையில் பேசுறாராம். அலுவலக பணியில் மட்டும் கவனம் செலுத்துற சி.இ.ஓ., கொஞ்சம் தலைமை ஆசிரியர்களிடமும் பேசணும்னு விரும்புறாங்க. அவங்களிடம் பேசினா, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கெடைக்கும்னு நினைக்கிறாங்க,''

கார்டுக்கு இல்ல புறாவுக்கு இருக்கு''காளப்பட்டியில இருக்குற ரேஷன் கடையில இருந்து மூட்டை மூட்டையா அரிசியும், கோதுமையும் விக்கிறாங்களாமே...'' ''ஜனங்க... அரிசி கேட்டு போனா, லோடு வரலை; ஸ்டாக் இல்லைன்னு சொல்றாங்களாம்.

ஆனா, கார்டே இல்லாம வட மாநிலத்தைச் சேர்ந்தங்வங்களுக்கு மூட்டை மூட்டையா அரிசி கொடுக்குறாங்களாம்.

புறா வளர்க்குறவங்களும் பணம் கொடுத்து அரிசி, கோதுமை வாங்கிட்டு போறாங்க... ஆனா, கார்டுதாரர்களுக்கு பொருள் கெடைக்கறதில்லை,'' என்ற மித்ரா, கலெக்டரிடம் மனு கொடுக்க காத்திருந்த பெண்களிடம், அவர்களின் குறையை கேட்க ஆரம்பித்தாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement