Load Image
Advertisement

எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி!

இந்த வருட தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டதே என்ற சில புலம்பல்களுக்கு மத்தியில், தீபாவளி அதற்குரிய வழக்கமான கொண்டாட்ட மனநிலையை நம்மிடையே பதித்துச்செல்ல மறக்கவில்லை.

மனம்கவர்ந்த நடிகர்களின் புதுப்பட ரிலீஸ்கள், அடுத்த வருடமாவது தலை தீபாவளி கொண்டாடுவோமா என எதிர்பார்த்தபடி காத்திருக்கும் 90's கிட்ஸ்கள், இந்த தீபாவளியை எப்படியும் குடும்பத்துடன் கொண்டாடிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் இளைஞர் கூட்டம், கணவனின் தீபாவளி போனஸில் போத்தீஸையே வாங்கும் கனவில் இருந்துவிட்டு கடைசியில் தள்ளுபடியில் புடவை வாங்கும் குடும்பத்தலைவிகள், பட்டாசைப் பார்த்து பரவசமடையும் குட்டீஸ்கள், பலகாரம், டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என தீபாவளி அதற்கே உரிய கோலாகலத்துடன் களைகட்டுகிறது.

வரலாற்றில் தீபாவளிநம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் தனித்துவமும் வண்ணமும் இருப்பதை நம்மால் பார்க்கமுடியும். அந்த வகையில், தீபாவளி பண்டிகை மத்தாப்பு சிதறுவது போன்ற வண்ணத்துடனும் சரவெடி அதிர்வதைப் போன்ற பரபரப்புடனும் ஒவ்வொரு வருடமும் நம்மை ஆட்கொள்கிறது.

தீபங்களின் அணிவகுப்பு என்ற பொருள்படும் வகையில் பெயர்க்காரணம் கொண்ட தீபாவளிப் பண்டிகை, நம் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துவிட்ட கொண்டாட்டமாய் உள்ளது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை நாளினை தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம். பொதுவாக, ஐப்பசி மாதம் அடைமழை பெய்யும் என்பதால் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைக்கும்போது, அந்த சுடர்களின் வெப்பத்தில் சுற்றுச்சூழலில் உண்டாகும் கிருமிகள் அழிந்துவிடுகிறது என்ற கருத்தும் உள்ளது.

நரகாசுரன் என்ற அசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுவதாக பரவலாக சொல்லப்பட்டாலும், தீபாவளி கொண்டாட்டத்திற்கு பல்வேறு பார்வைகளும் கோணங்களும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இராவண வதத்திற்குப் பின்னர் ராமர் சீதையுடன் அயோத்தி திரும்பிய நாளை கொண்டாடும் விதமாக அங்கே தீபங்கள் ஏற்றியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடிய நாளே தீபாவளி என்று கூறுபவர்களும் உண்டு.

1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சமணர்கள், மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இப்படி நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கலாச்சாரங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியும் சமூகச்சூழலும்நம் கிராமங்களில் ஐப்பசி மாதத்தில் வயல்களில் நெல், கரும்பு போன்ற பயிர்கள் வளரும் பருவத்தில் இருப்பதால், கையில் பணப்புழக்கம் இருக்காது என்பதால், நம் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும்பாலும் தீபாவளி பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும், வணிகம் மற்றும் தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு தீபாவளி என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தீபாவளிக்கு முந்தைய 2 அல்லது 3 நாட்கள் விற்பனையை மட்டுமே கணக்கிட்டபடி, அதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் வியாபாரிகள் ஏராளம்.

கூலி வேலை பார்ப்பவர்கள் முதல் கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள் வரை தீபாவளி போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்திருப்பதும், கையில் பணம் கிடைத்தவுடன் குடும்பத்துடன் புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கி கொண்டாடும் மகிழ்ச்சியே தனியொரு ரகம்தான்.

பட்டாசுகளை சீனாதான் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்டாலும், நம் சிவகாசியின் கந்தக மண்ணின் பட்டாசுகளே நம் தேசம்முழுக்க பெயர் சொல்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் தட்பவெட்பம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்திக்கு மிகவும் உகந்ததாக இருப்பதால் அதனைப் பயன்படுத்தி நம்மவர்கள் பட்டாசு தொழிலை இங்கே செழிக்கச் செய்தனர். வருடத்தின் ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வருடம் முழுவதும் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்தத் தொழிலில் ஈடுபடும் மக்களின் நிலை இன்றளவும் கேள்விக்குறியாக இருப்பது ஒருபுறம் கசப்பானதாக இருந்தாலும், தீபாவளி எனும் ஒற்றை வார்த்தை அவர்களின் வாழ்விலும் ஆனந்தத்தை கொண்டு வந்து, துயர்களை ஓட்டிவிடுகிறது.

தீபாவளியும் எண்ணெய் குளியலும்தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து தலைமுழுகுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.

முகநூல் பதிவுகள், வாட்ஸப் செய்திகள் என தீபாவளி வாழ்த்து செய்திகளை இன்றைய யுவதிகள் பகிர்ந்துகொண்டு மகிழும் அதேவேளையில், இந்த தீபாவளியை கொண்டாடும் விதமாக மரங்களை நட்டு ஒரு பசுமை தீபாவளியைக் கொண்டாடலாம். நரகாசுர வதத்தைக் கொண்டாடும் திருநாளாக கருதப்படும் போதிலும், வரும் தலைமுறை இந்த தேசத்தை நரகமாக உணராமல் இருப்பதற்கும் விவசாயமும் சுற்றுச்சூழலும் சிறப்பதற்கும் நம் நதிகளை மீட்டெடுப்பது அவசியமாகிறது.

தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் ஆச்சா…? என அந்தக்காலத்து ஆட்கள் கேட்பதுண்டு. இன்று கங்கையும் காவேரியும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீபாவளிப் பண்டிகையை நம்மைப் போலவே வரும் சந்ததிகளும் குதூகலத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்திட கங்கையும் காவேரியும் மீண்டும் பொங்கிவருவது அவசியமாகும்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement