Load Image
Advertisement

கத்தாரில் மரண தண்டனை எட்டு இந்தியரை மீட்பது எப்படி?

கடற்படையில் முன்பு பணிபுரிந்த அதிகாரிகள் எட்டு பேருக்கு, மேற்கு ஆசிய நாடான கத்தாரில் உள்ள நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக அவர்கள் உளவு பார்த்ததாக, குற்றம் சாட்டப்பட்டு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தற்போது சண்டை நடந்து வரும் நிலையில், இந்த தண்டனை விவகாரம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, குறிப்பாக வெளியுறவு துறைக்கு தர்மசங்கடத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும், நன்கு படித்தவர்கள்; இந்திய கடற்படையில் சிறப்பாக பணியாற்றியவர்கள். வெளிநாட்டில் இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தும் வகையில் செயல்பட்டதற்காக, மத்திய அரசால் வழங்கப்படும், 'பிரவாசி பாரதிய சம்மன் விருதை'யும் பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து, இந்திய அரசோ, கத்தார் அரசோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

கத்தாரில் பாதுகாப்பு சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில், இவர்கள் எட்டு பேரும் பணியாற்றி வந்துள்ளனர். அந்த நிறுவனம், இத்தாலி நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் கத்தார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை, தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகள், இஸ்ரேல் நாட்டிற்கு தெரிவித்திருக்கலாம் என்பது, வழக்கு தொடர்பாக கசிந்த தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருவதுடன், அந்த அமைப்புக்கு பல வகையிலும் உதவியும் வருகிறது.

தற்போது, இஸ்ரேல் வசமுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை விடுவிக்கவும், காஸா பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்களுக்கு தேவையான மனிதாபிமான ரீதியான உதவிகள் கிடைக்கவும், இஸ்ரேல் அரசுடன் பேச்சு நடத்துவதிலும், கத்தார் நாட்டு நிர்வாகத்தினரே முன்னணியில் உள்ளனர். இதை, இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரே உறுதி செய்துள்ளார்.

எனவே, இஸ்ரேல் மற்றும் கத்தார் என, இரு நாடுகள் உடனும், நட்பு ரீதியான உறவுகளை கொண்டுள்ள இந்திய அரசு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களை காப்பாற்றும் விஷயத்தில், மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், கத்தார் நாட்டில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும், கத்தார் கச்சா எண்ணெய் வளமிக்க நாடு. இந்தியாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் நாடு. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் அன்ட் டூப்ரோ உட்பட பல இந்திய கம்பெனிகள், கத்தாரில் செயல்படுகின்றன.

நம் நாட்டில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு 2019ல் ரத்து செய்யப்பட்ட போது, கத்தார் ஆதரவோடு செயல்படும் செய்தி சேனல் ஒன்று, இந்திய அரசுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தது.

எனவே, கத்தாரில் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரையும் விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில், மோடி அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம். அதாவது, துாதரக ரீதியான நடவடிக்கைகள் வாயிலாகவே, அவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்ப உதவ வேண்டும். வழக்கு மறு விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக, முடிந்த அளவுக்கு அவர்களின் தண்டனையை குறைக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாசகர் கருத்து (3)

  • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

    இந்திய அரசா இந்த ஆஃபீசர்களை அனுப்பி வைத்தது? அவர்கள் வேலை ஒய்வு பெற்று அவர்களாகவே கட்டார் சென்று வேலை வாங்கி இருக்கிறார்கள். இதனால் எப்படி இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படும்? இந்த விவகாரத்தில் தலை இடாமல் இருப்பதே ஏற்றது.

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற அனைவரின் எண்ணமும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் கரணம் தப்பினால் மரணம் எனும் வேலையை செய்பவர்கள், தங்கள் வேலையின் மற்றும் உயிரின் மதிப்பை புரிந்துகொள்ள தவறி விட்டார்கள். தனியாக இந்த வேலையை செய்யும் போது ஒரு பயத்துடன் செய்வார்கள். பலர் ஒன்று கூடி செய்ததால் அந்த பயம் இல்லாமல் போய்விட்டது போலும்.. இதில் நம் அரசால் சில முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள். அதனால்....

  • beindian - doha,கத்தார்

    பொழைக்க போன இடத்தில் பொழப்பை பார்க்கணும் இப்படி இரண்டகம் செய்தால்... சும்மா விடுவதற்கு இது இந்தியா இல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement