Load Image
Advertisement

அரசு விழாக்களுக்கு ரெண்டு தடவை பூசை ரிட்டையர் ஆன ஏ.சி.,க்கு அடங்காத ஆசை!

வெளியூர் சென்றிருந்த சித்ரா, லக்கேஜ்களுடன் காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினாள்.

அவளை அழைத்துக்கொண்டு, ஸ்கூட்டரில் புறப்பட்ட மித்ரா, எதிரே இருந்த சிறைத்துறை நடத்தும் பங்க்கில் பெட்ரோல் நிரப்பினாள்.

அங்கிருந்த ஊழியர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இந்த பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்த போக்சோ கைதி தப்பிச்சு ஓடிட்டானாமே...'' என்றாள்.

''ஆமாக்கா உண்மைதான்! தப்பிச்சு ஓடினவன், 10 வருஷம் சிறை தண்டனை வழங்கப்பட்டவன். அவனை எப்படி, நன்னடத்தை கைதியா கருதி, பங்க்கில் வேலைக்கு நியமிச்சாங்கன்னு ஒரு சர்ச்சை ஆரம்பிச்சிருக்கு. இது சம்பந்தமா விசாரிச்சப்போ, மூணு அல்லது நாலு வருஷம் ஜெயில்ல ஒழுங்கா இருந்தா, நன்னடத்தை கைதியா கருதி, மறுவாழ்வு திட்ட பணிகளுக்கு நியமிக்கிறாங்களாம்,''

''தப்பிச்சு போன 'போக்சோ' கைதிக்கு, இன்னும் ஆறு வருஷம் சிறை தண்டனை இருக்கு. 'போக்சோ' கைதியா இருந்தாலும் சில சமயம், சிறைத்துறையில இருந்து முன்கூட்டியே விடுதலையும் செய்றாங்களாம்.

இதெல்லாம் பிரச்னையா வெடிக்க ஆரம்பிச்சிருக்கு. இது சம்பந்தமா, சிறைத்துறைக்கு நீதித்துறையில இருந்து, கடிதம் எழுதுவாங்கன்னு பேசிக்கிறாங்க,''

காந்திபுரம் சிக்னலை கடந்து, 'யூ டேர்ன்' எடுத்து திரும்பும் போது, அங்கிருக்கும் காவலர் குடியிருப்பை கவனித்த சித்ரா, ''போலீஸ் அதிகாரிகளும் உள்வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாங்களாமே...'' என கேட்டாள்.

''அதுவா, காந்திபுரம், உப்பிலிபாளையம், சிங்காநல்லுார், போத்தனுார், வெரைட்டி ஹால் ரோட்டில் போலீசாருக்கு, பிரத்யேகமாக குடியிருப்பு கட்டியிருக்காங்க. போலீசாரின் தகுதிக்கு ஏற்ப வீடு ஒதுக்குறாங்க; சம்பள அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கறது வழக்கம்,''

''இந்த வீடுகளில் போதிய வசதி இருக்காது; அதனால, போலீஸ் அதிகாரிகள் பலரும், அவங்களுக்கு ஒதுக்குன வீட்டை, வேற போலீஸ்காரங்களுக்கு உள்வாடகைக்கு விட்டிருக்காங்க.

'அலாட்மென்ட்' கெடைக்காம 'வெயிட்டிங் லிஸ்ட்'டுல இருக்கற ஜூனியர் போலீசார் பலரும், உள்வாடகைக்கு அந்த வீடுகள்ல குடியிருக்காங்க; வாடகை கட்டடங்கிறதுனால, பராமரிப்பு படுமோசமா இருக்குதாம்; மழை காலத்துல இடிஞ்சு விழாம இருக்கணும்னு, போலீஸ்காரங்க கடவுளை வேண்டிக்கிட்டு இருக்காங்க,''

''மித்து, இதுக்கெல்லாம் ஈசியா தீர்வு காணலாம். ஆதார் அட்டை நகல் வாங்கி, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செஞ்சு, இது மாதிரியான ஒதுக்கீடுகளை ஆய்வு செஞ்சா போதும்; உண்மையான பயனாளிகள் பயனடைவாங்க; உள்வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறது யாருன்னு கண்டுபிடிக்கலாம்,'' என்ற சித்ரா, ''லாட்டரி சேல்ஸ், மசாஜ் சென்டர் அதிகமாகிட்டு போகுதாமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''யெஸ்! நீங்க சொல்றது சரிதான்! வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனை, சிட்டி லிமிட்டுக்குள்ள சேர்த்ததும், சட்ட விரோத செயல்களே இல்லாம பண்ணிடுவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா, தலைகீழா மாறிடுச்சாம். சிட்டி லிமிட்டுக்குள்ள வடவள்ளியை சேர்த்ததும், 'இல்லீகல்' 'டபுளா'கிடுச்சாம்; அதே மாதிரி, போலீசுக்கு கொடுக்க வேண்டிய மாமூலையும் அதிகமாகிட்டாங்களாம்,''

''அடக்கொடுமையே,'' என்ற சித்ரா, பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்த கார்ப்பரேஷன் நார்த் ஜோன் ஆபீசை பார்த்ததும், ''விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் போலீஸ்காரங்க கண்காணிப்பை துவக்கிட்டதா, கார்ப்பரேஷன் ஊழியர்கள் சொல்றாங்களே...'' என, கேட்டாள்.

''அதுவா... தீபாவளி பண்டிகை நெருங்கிடுச்சே... அதனால, முக்கியமான அரசு துறை அலுவலகங்களை, விஜிலென்ஸ் போலீசார் தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்காங்க. தீபாவளிக்குள்ள ஏதாவது ஒரு ஆபீசுல, யாரையாச்சும் துாக்குறதுக்கு 'பிளான்' பண்ணிட்டு இருக்காங்க,''

''போதாக்குறைக்கு, கலெக்டரும் அவரு பங்குக்கு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்காரு. உணவு பாதுகாப்பு அலுவலருன்னு சொல்லிட்டு, யாராச்சும் கலெக்சனுக்கு வந்தா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சொல்லுங்கன்னு சொல்லி இருக்காரு. பார்ப்போம்... இவுங்க விரிச்சிருக்கிற வலையில யாரு சிக்குறாங்கன்னு,''

''அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு கெடைச்ச ஒரு தகவலை சொல்றேன் கேளு. கார்ப்பரேஷன்ல நிர்வாக அலுவலர் பதவியில இருக்கறவங்க, உதவி கமிஷனர் பதவி உயர்வுக்கு காத்திருக்காங்க. இவுங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து, சென்னைக்கு போயி, துறையை சேர்ந்த 'முக்கியமானவரை' சந்திச்சு முறையிட்டு இருக்காங்க,''

''அப்போ, அ.தி.மு.க., ஆட்சியில இருந்து, 'அன்பானவர்' செல்வாக்கில் உதவி கமிஷனரா கூடுதல் பொறுப்பில் இருக்குற ஒரு ஆபீசர், துறையின் முக்கிய புள்ளியை சந்திச்சு பேசியிருக்காரு; அவரை மட்டும், வெளியூருக்கு மாத்தாம, நம்மூரிலேயே நியமிக்கறதுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்காராம்,''

''ரிடையரான உதவி கமிஷனர் ஒருத்தரு, பழைய செல்வாக்கை வச்சுக்கிட்டு, மண்டலம் வாரியா, அப்ளிகேஷனை துாக்கிட்டு அலையுறாராமே...''

''அவரா... கார்ப்பரேஷன் வெஸ்ட் ஜோன்ல கல்லா கட்டுனவரு; ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவரு.

'டாஸ்மாக்'குல மாவட்ட மேலாளர் பொறுப்புல இருந்து, கரன்சி மழையில குளிச்சவரு. கவர்மென்ட் உத்தரவுப்படி, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை சேர்ந்த துணை கலெக்டர் அந்தஸ்துல உள்ள அதிகாரிகளுக்கு, ஒரு வருஷத்துக்கு கார்ப்பரேஷன்ல உதவி கமிஷனர் பொறுப்பு கொடுக்குறாங்க,''

''அவுங்களும், கார்ப்பரேஷன்ல நல்லா துட்டு பார்த்து பழகிடுறாங்க. ஏற்கனவே லட்சக்கணக்குல கரன்சி அள்ளுன, அந்த 'ரிடையர்' அதிகாரிக்கு, வீட்டுல சும்மா இருக்க முடியலை.

சொத்து வரி புத்தகம் போடுறது; பில்டிங் அப்ரூவல் வாங்கிக் கொடுக்குறது; குடிநீர் கனெக்சன் கொடுக்குறதுன்னு, 'புரோக்கர்' வேலைய ஆரம்பிச்சிருக்காரு. இதே மாதிரி, ஒவ்வொரு மண்டல ஆபீசுக்கும், தாலுகா ஆபீசுக்கும் போறாராம்,''

பாலசுந்தரம் ரோட்டில் வந்த மித்ரா, அவிநாசி ரோடு வழியாக, அண்ணாதுரை சிலை சந்திப்பை கடந்து, கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஜோன் பின்புறம் உள்ள, டேன் டீ பேக்கரி அருகே ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

அவ்வழியாக, ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம் அணிந்த ஸ்டூடண்ட்ஸ் கடந்து சென்றனர். அவர்களை கவனித்த சித்ரா, ''மித்து, நம்மூர்ல கால்பந்து சங்கத்துக்காரங்க ரெண்டு பிரிவா செயல்படுறதுனால, விளையாட்டு வீரர்கள் ரொம்பவும் குழப்பத்துல இருக்காங்க,''

''ரெண்டு குரூப்பும் ஆளுக்கொரு சங்கம் நடத்துது; ரெண்டு சங்கத்துக்காரங்களும் போட்டி போட்டுக்கிட்டு, போட்டி நடத்துறாங்களாம்; தமிழ்நாடு கால்பந்து சங்கத்தை சேர்ந்தவங்களும் இதை ஒழுங்குபடுத்தாம இருக்காங்க.

அதனால, கால்பந்து விளையாட்டுல ஆர்வம் இருக்கற இளம் வீரர்கள், அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாம தவிக்கிறாங்க.

இதெல்லாம், 'வாரிசு மினிஸ்டர்' கவனத்துக்கு போனா நல்லாயிருக்கும்னு பேசிக்கிறாங்க,'' என்ற படி, லெமன் டீ ஆர்டர் கொடுத்தாள்.

ராகி வடையை எடுத்து மென்ற மித்ரா, ''அக்கா, பாரதியார் பல்கலை செயல்பாடுகள் மீது, அடிக்கடி கம்ப்ளைன்ட் வருது,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''ஏம்ப்பா... என்னாச்சு...'' என, சித்ரா ஆர்வமுடன் கேட்டாள்.

''பாரதியார் பல்கலையில துணைவேந்தர் பொறுப்புக்குழு செயல்படுது. அதுல இருக்கற ஒரு உறுப்பினர் எம்.எஸ்சி., மட்டுமே படிச்சிருக்காங்களாம். கவுரவ டாக்டர் பட்டம் வாங்கியதை, 'பி.எச்.டி.,'ன்னு சொல்லிட்டு இருக்காங்க. இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, சில பேராசிரியர்கள், கவர்னருக்கு புகார் கடிதம் எழுதி இருக்காங்களாம்,''

''மித்து, கேரளாவுக்கு கனிம வளம் கடத்த முற்பட்டதா, எட்டு லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செஞ்சிருக்காங்க; அவுங்களுக்கு ரோஷம் வந்துருச்சா... எப்படி?

''அடப்போக்கா, அதெல்லாம் கேரள பதிவெண் கொண்ட லாரிங்க. மேலிடத்துல இருந்து சொன்னதும், அந்த வண்டிகளை மட்டும் தடுத்து நிறுத்தி, கோர்ட்டுல நிறுத்தியிருக்காங்க''

''இப்பவும் சூலுார், சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்துல இருந்து கூட, கனிம வளங்களை லோடு லோடா கடத்திட்டு போறாங்க. ரெண்டெழுத்து கம்பெனி கொடுக்கற ரசீது இருந்தா போதுமாம்; யாரும் தடுக்க மாட்டாங்களாம்,''

''குவாரியில அனுமதிச்ச அளவை விட, அதிகமாவே தோண்டி எடுத்துட்டாங்க; இப்பவும் எடுத்துட்டு இருக்காங்க. சட்ட விரோதமா வெடி வைக்கிறாங்க. ஆபீசர்ஸ் யாரும் கண்டுக்கறதில்லை; போலீஸ்காரங்க எட்டியே பார்க்கறதில்லை. வெடிச்சத்தத்திலும், புழுதியிலும் ஜனங்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க,''

''ஒரு விழாவுக்கு ரெண்டு தடவை பூஜை போடுறாங்களாமே... அதென்ன...''

''அதுவா... மேட்டுப்பாளையம் தொகுதியில, ஏ.டி.எம்.கே., - எம்.எல்.ஏ., இருக்காரு. அரசு நிகழ்ச்சி எதுவா இருந்தாலும், கரெக்டா வந்துடுறாரு; அவர் முன்னிலையில பூஜை நடக்குது. அவரு கெளம்பி போனதுக்கு அப்புறம்... கொஞ்ச நேரம் கழிச்சு ஆளுங்கட்சிக்காரங்க வர்றாங்க; மறுபடியும் திறப்பு விழா நடத்துறாங்க. ஒரே நிகழ்ச்சிக்கு ரெண்டு தடவை விழா நடக்குது''.

''அதெல்லாம் சரி... நம்மூருக்கு தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் வந்துச்சே; கலெக்டர் ஆபீசுல 'மீட்டிங்' நடந்ததா சொன்னாங்களே... அதைப்பத்தி சொல்லவே இல்லையே...''

''ஆமாப்பா... அந்தக் கூட்டத்துல, சங்கத்துக்காரங்க ஏகப்பட்ட கேள்வி கேட்டு துளைச்சு எடுத்திருக்காங்க. மேயர் தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்துல, துாய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியா ரூ.648 கொடுக்குறதுக்கு தீர்மானம் நிறைவேத்துனாங்க; ஆனா, 415 ரூபா தான் கொடுக்குறாங்க.

தீர்மானம் நிறைவேத்துனதுல ஏமாத்து வேலையான்னு, பகிரங்கமா கேள்வி கேட்டிருக்காங்க. பதில் சொல்ல முடியாம திணறுன கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், இன்னும் நடைமுறைக்கு வரலைன்னு சொல்லி நழுவியிருக்காங்க,''

''ஆணைய தலைவரான வெங்கடேசன், மைக்கை பிடிச்சதும் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளியிருக்காரு. மேடையில் இருந்த ஆபீசர்ஸ் பலரும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிருக்காங்க,''

''அப்படியா...'' என கேட்டபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement