Load Image
Advertisement

பழைய கிரைண்டரை திருடிய லேடி எஸ்.ஐ., மூனு மணி நேரம் வகுப்பெடுத்த கமிஷனர்

சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்காக, பூஜையறையை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் சித்ரா.

மார்க்கெட்டுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வந்த மித்ரா, ''என்னக்கா, பதார்த்தம் செய்யலாமா,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.

தண்ணீரில் ஊற வைத்த, வெள்ளை சுண்டலை குக்கரில் வேக வைத்த சித்ரா, ''என்னப்பா, 'மாஜி' அமைச்சர் வேலுமணி வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தியே... விருந்து உபசாரம் தடபுடலா இருந்துச்சுன்னு சொன்னாங்க...'' என கேட்டாள்.

''ஆமாக்கா, கல்யாணத்துக்கு வந்தவங்க யாரும், சாப்பிடாம போகக்கூடாதுன்னு, தனித்தனியா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, மனைவியோட வந்திருந்தார். 'மாஜி' அமைச்சர்கள் பலரும் குடும்பத்தோட வந்திருந்தாங்க. கல்யாணத்துக்கு வந்த சில பேரு, ஒரு நாள் தங்கியிருந்து, வரவேற்பு நிகழ்ச்சியிலும் தலையை காட்டி, தங்களுக்குள்ள நெருக்கத்தை காட்டியிருக்காங்க.

''விழாவுக்கு வந்திருந்த பலரும், மணமக்களுக்கு வாழ்த்து சொல்றதை காட்டிலும், 'மாஜி'க்கு முன் நின்று, வணக்கம் சொல்லி தங்களது வருகையை பதிவு செஞ்சிருக்காங்க.

மேடையில அவருக்கு பக்கத்துலயே வாரிசும் நின்றிருந்தார். கட்சி நிர்வாகிகள் பலரும், மறக்காம வாரிசுக்கும் வணக்கம் சொல்லியிருக்காங்க. இதைப்பார்த்து எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிர்ந்து போயிட்டாங்களாம்,''

''ஆளுங்கட்சி வாரிசு அமைச்சரும், நம்மூருக்கு வரப்போறாராமே...''

''உதயநிதி வரப்போறதை பத்தி கேக்குறீங்களா... நேரு ஸ்டேடியத்துல 'சிந்தடிக் டிராக்' அமைச்சிருக்காங்க. அவரு தான், பணியை துவக்கி வச்சாரு; அவரே பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப் போறாராம்; நவ., முதல் வாரம் வர்றதா உறுதி சொல்லியிருக்காராம்,''

''ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிற மாதிரி, கட்சி விழாக்கள்லயும் கலந்துக்கப் போறாராம். சேலத்துல நடக்கப்போற இளைஞரணி மாநாடு சம்பந்தமா, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்கிட்ட பேசப்போறாராம்,''

''கூட்டுறவு தேர்தல்ல பதவியை கைப்பத்துறதுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க இப்பவே காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என்றபடி, சர்க்கரை பொங்கலுக்கு கருப்பட்டியை உடைக்க ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாக்கா... ஒவ்வொரு சங்கத்திலயும் உறுப்பினர் பட்டியலை சரிபார்க்குற வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அ.தி.மு.க., ஆட்சியில முறைப்படி தேர்தல் நடக்கலை; ஏற்கனவே தேர்வு செஞ்சவங்க பெயர் பட்டியலை மட்டும், சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டிட்டு, ஆபீசர்ஸ் பலரும் தலைமறைவானாங்க,''

''இப்போ, அப்படி நடக்காது போலிருக்கு. ஏன்னா... ஒவ்வொரு சங்கத்திலயும் ஆளுங்கட்சிக்காரங்களே ரெண்டு, மூணு கோஷ்டியா இருக்காங்க.

எந்த கோஷ்டிக்கு, எந்த 'போஸ்ட்டிங்' கொடுக்குறதுன்னு தெரியாம, வடக்கு மாவட்ட தி.மு.க., பெருமூச்சு வாங்குதாம். கூட்டுறவு எலக்சன் அறிவிச்சத்துக்கு அப்புறம், கோஷ்டி சண்டை பலமா நடக்கும்; கடத்தல் சம்பவம் கூட அரங்கேறலாம்னு, உடன்பிறப்புகள் மத்தியில் பேசிக்கிறாங்க,''

''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''நம்மூரு கார்ப்பரேஷனுக்கு புது கமிஷனர் வந்திருக்காரே... எப்படியாம்... விசாரிச்சியா...'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''விசாரிக்காம இருப்பேனா... பதவியேத்த முதல் நாளே வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு போயிருக்காரு. குப்பை பொறுக்கிட்டு இருந்த லேடிகிட்ட, குடும்ப பின்னணியை பத்தி கனிவா கேட்டிருக்காரு. கார்ப்பரேஷன் ஊழியர்கள்கிட்டயும் பண்பா பேசுறாராம். அதேநேரம், பதில் சரியா சொல்லாத அதிகாரிகள்கிட்ட கடுமையா நடந்துக்கிறாராம்...''

''செட்டிபாளையம் ரோட்டுல, திடுதிப்புன்னு ஒரு வீட்டுக்கு போயி, பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்திருக்காங்களான்னு, 'செக்' பண்ணி இருக்காரு. கனெக்சன் கொடுக்கிறதுக்கு யாராச்சும் காசு வாங்கறாங்களான்னு விசாரிச்சதும், ஆபீசர்ஸ் ஆடிப்போயிட்டாங்களாம்,''

''கார்ப்பரேஷன் இன்ஜினியருன்னு சொல்லிக்கிட்டு, ஊருக்குள்ள 'கெத்து' காட்டிட்டு இருந்த ஒவ்வொருத்தருக்கும், இன்ஜினியரிங் சம்பந்தமா ஒரு புக் கொடுத்திருக்காரு.

ரோடு போடுறது சம்பந்தமா, ஒரு 'பிடிஎப்' பைல் அனுப்பி, கார்ப்பரேஷன் ஆபீசுல உட்கார வச்சு மூன்றரை மணி நேரம், 'கிளாஸ்' நடத்தியிருக்காரு,''

''அப்போ, ரோடு போடுறது சுத்தமாவே சரியில்ல; அதை சரி செய்றதுக்குதான், வந்திருக்கேன். இன்ஜினியரிங் சம்பந்தமா புதன்கிழமை எல்லாத்துக்கும், 'டெஸ்ட்' வைக்கப் போறேன்னு சொல்லியிருக்காரு. இதைக்கேட்டு, ஆபீசர்ஸ் பலரும் துாக்கம் இல்லாம தவிச்சிட்டு இருக்காங்க,''

''மித்து... நம்ம கார்ப்பரேஷன்ல இன்ஜினியரா இருக்குற பலருக்கும் கல்வித்தகுதியே இல்லையாம். அவுங்களை மாத்துனாலே, 'ஒர்க்' தரமா நடக்கும்னு சொல்றாங்க. புது கமிஷனர் என்ன செய்றாருன்னு பார்ப்போம்,''

''அதெல்லாம் சரி... உக்கடம் லேடி எஸ்.ஐ., பத்தி கிசுகிசுக்கிறாங்களே... என்னவாம்,''

''அதுவா, உப்பிலிபாளையத்துல இருக்குற, போலீஸ் குவார்ட்டர்ஸ்ல அந்த எஸ்.ஐ., குடியிருக்காங்க. பக்கத்து வீட்டுல வசிச்ச இன்னொரு எஸ்.ஐ., கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டை காலி செஞ்சிருக்காங்க. அப்போ, இன்னொரு நாளைக்கு எடுத்துக்கலாம்னு, சில பொருட்களை மட்டும் விட்டுட்டு போயிருக்காங்க,''

''இது தெரியாம, கிரைண்டரை 'லவட்டிய' உக்கடம் எஸ்.ஐ., பழைய இரும்புக் கடைக்காரன்கிட்ட வித்துட்டாங்களாம். வீட்டை காலி செஞ்ச எஸ்.ஐ., ஒரு நாள் கழிச்சு வந்து பார்த்ததும், கிரைண்டரை காணாமல் அதிர்ச்சியாகிட்டாங்க.

அக்கம் பக்கத்துல விசாரிச்சிட்டு, உக்கடம் எஸ்.ஐ., யிடம் நேருக்கு நேராவே கேட்டுட்டாங்களாம். அதுக்கு, 'வித்தது உண்மைதான்; 500 ரூபாய்க்குதான் போச்சு; இந்தா பணம்னு, 500 ரூபாயை நீட்டியிருக்காங்க'

''டென்ஷனான எஸ்.ஐ., நாலாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரைண்டரை திருட்டிட்டு, விளையாடுறீயான்னு சண்டை போட்டதோட, மேலதிகாரியிடம் 'கம்ப்ளைன்ட்' பண்ணி இருக்காங்க.

உக்கடம் லேடி எஸ்.ஐ.,க்கு மேலிடத்துல இருந்து 'செம டோஸ்' விழுந்திருக்கு. அதுக்கப்புறம் கடைக்கு கூட்டிட்டு போயி, புது கிரைண்டர் வாங்கிக் கொடுத்திருக்காங்க,''

இதை கேட்டு நொந்து போன சித்ரா, ''நம்மூர்ல லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க இருக்காங்களான்னே தெரியலையே... '' என புலம்பினாள்.

''ஏன்க்கா... இப்படி கேட்டுட்டே... 'கணக்கு' காட்டுறதுக்காக... எப்பவாச்சும் ஒரு தடவை யாரையாவது பிடிப்பாங்களே...''

''மித்து, கவுண்டம்பாளையத்துல வடக்கு கோட்டாட்சியர் ஆபீஸ் இருக்கு. இந்த ஆபீசுக்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க ஒரு தடவை போயிட்டு வந்தா நல்லா இருக்கும். எந்த வேலை செய்றதுக்கும் லஞ்சம் கேக்குறாங்களாம். பணம் கொடுக்காம எந்த காரியமும் நடக்காதாம். பணத்தை யாருமே அலுவலகத்துல வச்சு வாங்க மாட்டாங்களாம்,''

''லஞ்சம் வாங்குறதுக்காகவே ஒரு கார் வச்சிருக்காங்க. அந்த கார், மூவிங்லேயே இருக்குமாம்; அவுங்க சொல்ற இடத்துக்கு வந்து, லஞ்சப் பணத்தை கொடுத்துட்டு போகணுமாம். காரில் இருந்து சிக்னல் வந்ததும் பைலில் கையெழுத்து போடுவாங்களாம்.

கோட்டாட்சியர் இதையெல்லாம் விசாரிக்காம, அப்பாவியா இருக்காராம். பெரிய தொகை கை மாறியதால, போன வாரத்துல ரெண்டு முக்கியமான பைல் கையெழுத்து ஆகியிருக்காம்,''

''திடுதிப்புன்னு தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா வந்திருந்தாரே... எதுக்காம்...''

''குடும்பத்தோட ஊட்டிக்கு போயிருக்காரு. போற வழியில, பில்லுார் 'வாட்டர் ஸ்கீம்' பத்தி 'இன்ஸ்பெக்சன்' செஞ்சிருக்காரு. அப்போ, மேட்டுப்பாளையத்துல யு.ஜி.டி., ஸ்கீம் அஞ்சு வருஷமா இழுத்துக்கிட்டு இருக்குன்னு சொல்லியிருக்காங்க.

உடனே, ஆபீசர்களை வரவழைச்சு ஆய்வு கூட்டம் நடத்தி, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கி இருக்காரு. இது தெரியாம, 'தலைமை செயலர் வந்த விஷயத்தை எங்களுக்கு ஏன் சொல்லாம மறைச்சீங்க'ன்னு கவுன்சிலர்கள் பலரும், அதிகாரிகள்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்களாம்,''

குக்கர் விசில் சத்தம் கேட்டதும், அடுப்பில் இருந்து இறக்கிய மித்ரா, 'கவுன்சிலருன்னு சொன்னதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ஆளுங்கட்சியை சேர்ந்த ரெண்டெழுத்து கார்ப்பரேஷன் கவுன்சிலர் ஒருத்தரு, கள்ளிமடையில இருக்கற கவர்மென்ட் இடத்தை, ஆக்கிரமிக்க முயற்சி செய்றதா, அந்த ஏரியாக்காரங்க பிரச்னை பண்ணியிருக்காங்க,''

''ஆவேசப்பட்ட ஒருத்தரு, திடீர்னு மண்ணெண்ணெய் ஊத்தி தீக்குளிக்க முயற்சி செஞ்சிருக்காங்க. பொதுமக்கள் காப்பாத்திட்டாங்க. 'ஸ்பாட்'டுக்கு வந்த போலீஸ்காரங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை வச்சு அளவீடு செஞ்சு பார்த்துக்கலாம்னு சொன்னதும், சமாதானமா கலைஞ்சு போயிருக்காங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... கோவில் அறங்காவலர் பதவியை கைப்பத்துறதுக்கு போட்டி கடுமையா இருக்காமே...''

''அக்கா... அன்னுார்ல இருக்குற குமரன் குன்று கோவிலுக்கு, புதுசா அறங்காவலர் குழு நியமிக்கப் போறாங்களாம். தலைவர், அறங்காவலர் பதவியை கைப்பத்துறதுக்கு சிலர், ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகியிடம், அஞ்சு லட்சம் வரைக்கும் கொடுத்திருக்காங்களாம்,''

''இதே மாதிரி கட்டுக்கட்டா கரன்சியை, அள்ளிக் கொடுக்க முடியாத நிலையில இருக்கற, 30 வருஷமா கட்சியில இருக்கிற சீனியர்ஸ், 'நம்ம கட்சி ஆட்சியில இருந்து என்ன பிரயோஜனம்; துட்டு கொடுத்தா தான் பதவியே கொடுக்குறாங்க'ன்னு, புலம்பிட்டு இருக்காங்க,''

''அதை விடுப்பா, ரோடு போடுறதிலும் ஆபீசர்ஸ் கல்லா கட்டுறாங்களாமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! அன்னுார் ஏரியாவுல அதிகமான பஸ் ஓடுற, மோசமான ரோடுகளை புதுப்பிக்காம... எப்பவாச்சும் ஒரு தடவை போற ரூட்டுல, 'நபார்டு' ஸ்கீம்ல ரோடு போடுறதுக்கு ஏரியாக்களை தேர்வு செஞ்சிருக்காங்களாம். இதனால மக்களுக்கு பிரயோஜனமோ... இல்லையோ... ஆபீசர்களும், கவுன்சிலர்களும் 'பலன்' அடைஞ்சிருக்காங்களாம்,''

''அதிருக்கட்டும்... 'லியோ' படம் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே...'' என, கடைசி சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''ரசிகர்கள் கொண்டாடுறாங்க. அதனால, அன்னுார் ஏரியாவுல முதல் காட்சி திரையிட்டப்போ, அரசு விதிமுறையை மீறி, ரூ.500க்கும், ரூ.1,000க்கும் டிக்கெட் வித்திருக்காங்க. கவர்மென்ட் ஆபீசர்கள் கண்டுக்காம விட்டுட்டாங்களாம்,'' என்றபடி, சுவாமி படங்களுக்கு மாலை அணிவிக்க ஆரம்பித்தாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement