Load Image
Advertisement

கஞ்சா பொட்டலங்களுடன் இன்ஸ்., 'அட்ராசிட்டி' 'மாஜி'க்கு 'செக்' வைக்கப்போகுது ஓ.பி.எஸ்., கோஷ்டி!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தோழியிடம் நலம் விசாரிக்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.

தோழியின் உடல்நிலை பற்றி, டாக்டரிடம் பேசி விட்டு வெளியே வந்த சித்ரா, ''தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு, டாக்டர்கள் 'ட்ரீட்மென்ட்' செய்றாங்க. ஆனா, அவுங்க கொஞ்ச நேரம் 'ரிலாக்ஸ்' செய்றதுக்கு, இங்க ஓய்வறை இல்லையாம்; 'குவார்ட்டர்ஸ்'சும் பயன்பாட்டில் இல்லையாம். மன ரீதியா ரொம்பவே கஷ்டப்படுறாங்க,''

''பெரும்பாலான டாக்டர்கள், டீ குடிக்கக்கூட வெளியேதான் போறாங்க. புறநோயாளிகள் பிரிவுல இருக்குற படுமோசமான கழிப்பறையையே, 'யூஸ்' பண்ண வேண்டிய அளவுக்கு இக்கட்டான நிலைமை தான் இருக்குது. சீனியர் டாக்டர்ஸ் பலரும், இது சம்பந்தமா டீன்கிட்ட சொல்லிருக்காங்க; அவர் கண்டுக்காம இருக்காராம்,''

அங்குள்ள புறக்காவல் நிலையத்தில், பணியில் இருந்த போலீசார், மைக்கில் வந்த அறிவிப்பை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதை கவனித்த மித்ரா, ''அக்கா, நம்மூரு பெரிய போலீஸ் ஆபீசர், மனிதாபிமானமாக நடப்பதிலும், எளிய அணுகுமுறையிலும் மக்களோட கலந்திருக்காரு. ஸ்டேஷனுக்கு வர்ற ஜனங்ககிட்ட கனிவா நடக்கணும்னு, 'அட்வைஸ்' செஞ்சிருக்காரு.

ஆனா, சில இன்ஸ்.,கள், சம்பாதிக்கிறதுல மட்டும் குறியா இருக்காங்க; சில பேரு எந்த எல்லையையும் கடக்குறதுக்கு ரெடியா இருக்காங்க,''

''ரத்தினபுரி ஏரியாவை சேர்ந்த இன்ஸ்., ஒருத்தரு, சினிமா பட ஸ்டைல்ல 'அட்ராசிட்டி' பண்றாராம். யாராவது எதிர்த்துப் பேசுனா, துப்பாக்கியை காட்டி மிரட்டுறாராம்; சம்பாத்தியத்திலயும் தட்டுறாராம்,''

''தன்னோட வண்டியிலேயே கஞ்சா பொட்டலங்களை 'ஸ்டாக்' வச்சிருக்காராம். யாராவது எதிர்த்து பேசினாலோ அல்லது கேட்டதை செஞ்சு கொடுக்கலைன்னாலோ... கஞ்சா கேஸ் பதிவு செஞ்சு, கம்பி எண்ண வைக்கிறதா போலீசாரே புகார் கிளப்புறாங்களாம்,''

''அப்படியா,'' என்ற சித்ரா, ''லாட்டரி அதிபர் மார்ட்டின் இடங்கள்ல 'ரெய்டு' நடந்துச்சே; பின்னணியை விசாரிச்சியா,'' என நோண்டினாள்.

''அவரு நம்மூருக்கு வரும்போதெல்லாம், காந்திபுரம் ஆபீசுக்கு வருவாராம்; வரவு - செலவை கேட்டு, 'அட்வைஸ்' பண்ணுவாராம். அவரோட 'மூவ்மென்ட்'டை உளவுப்பிரிவு போலீசார் கண்காணிச்சு, மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' அனுப்பி இருக்காங்க. நிறைய ஆவணங்கள் இப்போ சிக்கி இருக்கிறதுனால, 'அரெஸ்ட்' வரை போகலாம்ன்னு சொல்றாங்க,''

''நம்ம மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சரா செந்தில் பாலாஜி இருந்தாரே... எப்படி இருக்காராம்,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள் சித்ரா.

''அவருக்கென்ன... அமைச்சராச்சே. நம்மூர் உடன்பிறப்புகள் இன்னமும் அவர் மீது நம்பிக்கை வச்சிருக்காங்க. ஜாமின்ல வெளியே வந்தா, மீண்டும் பொறுப்புக்கு வருவார்னு நம்புறாங்க,''

''சேலத்துல நடக்கப் போற, இளைஞரணி மாநாடு சம்பந்தமா எழுதுற சுவர் விளம்பரத்துல கூட, செந்தில்பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. அவர் பெயருக்கு பின்னால தான், அமைச்சர் முத்துசாமி பெயரே எழுதுறாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, கவர்மென்ட் எம்பளத்தை, தன்னோட கார்ல பொருத்தி, 'மிடுக்'கா வலம் வர்றாராமே...''

''ஆமாக்கா, உண்மைதான்! திட்டக்குழு உறுப்பினரா இருக்குற கார்ப்பரேஷன் ஆளுங்கட்சி கவுன்சிலர், தன்னோட கார்ல, பெரிசா போர்டு மாட்டி இருக்காரு; கலெக்டர் வண்டியில இருக்கறதை விட, இரண்டு மடங்கு பெருசா, கவர்மென்ட் எம்பளத்தை மாட்டி, கட்சிக் கொடியை பறக்க விட்டிருக்காரு. ரெண்டெழுத்து கவுன்சிலரான அவரை பார்த்து, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பலரும் பயந்துக்கிறாங்க... கலெக்டராவது ஆக்சன் எடுக்கனும்,''

பேசிக்கொண்டே இருவரும், ஜி.எச்., வளாகத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, அ.தி.மு.க., கட்சிக் கொடி கட்டிய கார், உள்ளே நுழைந்தது.

அதை பார்த்த சித்ரா, ''நம்மூருக்கு வந்து மாநாடு நடத்தப் போறதா ஓ.பி.எஸ்., அறிவிச்சிருக்காரே... ஏனாம்,''

''அதுவா, இ.பி.எஸ்.,க்கு பிறகு வேலுமணி தான், கட்சியை வழிநடத்துவாருன்னு பேச்சு அடிபடுது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை தனனோட 'கன்ட்ரோல்'ல வச்சிருக்காரு; அவரை மீறி, கட்சிக்காரங்க எதுவும் செய்றதில்லை.

இதை பா.ஜ., மேலிடமும் கணிச்சு வச்சிருக்கு. அவுங்க நம்பிக்கையை பொய்யாக்குறதுக்கும், வேலுமணிக்கு 'செக்' வைக்கிறதுக்காகவுமே, நம்மூர்ல 'ஸ்டேட் லெவல்' மாநாடு நடத்தி, 'பவர்' காட்ட, ஓ.பி.எஸ்., கோஷ்டி நினைக்குதாம்,''

''இருந்தாலும், இ.பி.எஸ்., தரப்புல இருந்து, பொதுக்கூட்டங்கள்ல நாகரீ கமா பேசணும்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்களாம். ஆளுங்கட்சி தரப்பிலும், ஓ.பி.எஸ்., தரப்பிலும் அநாகரீகமா பேசினாலும் கண்டுக்காதீங்க; எந்த இடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது; சமூக வலைத்தளத்திலும் பதில் பதிவு போட்டு, கட்சி பெயரை கெடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்களாம்,''

இருவரும் பேசிக்கொண்டே, ஆர்ட்ஸ் காலேஜ் ரோாட்டில் நடந்து சென்றனர். கார்ப்பரேஷன் ஜீப் ஒன்று, அவர்களை கடந்து சென்றது.

உடனே, ''அக்கா, கார்ப்பரேஷனுக்கு உதவி கமிஷனரா, மூன்றெழுத்து லேடி ஆபீசரை நியமிச்சிருக்காங்களே... எந்த மண்டலத்துக்காம்...'' என, நோண்டினாள் மித்ரா.

''மித்து, நார்த், சென்ட்ரல்னு ரெண்டு ஜோன்ல போஸ்ட்டிங் காலியா இருக்கு. சென்ட்ரலை 'டச்' பண்றதுக்கு யோசிப்பாங்க; 'நார்த்'துக்கு தான் நியமிப்பாங்கன்னு கார்ப்பரேஷன்ல பேசிக்கிறாங்க...''

''கார்ப்பரேஷன்ல இன்னமும் இலைக்கட்சிக் காரங்க கொடிதான் பறக்குதா, ஆளுங்கட்சி மேயர், என்னதான் செய்றாங்க,''

''அவுங்க நிலைக்குழு கூட்டத்துல நிறைவேத்தி அனுப்புற தீர்மானமா இருந்தாலும், ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி, கெடப்புல போடுறாங்க,''

''கட்சி மேலிடமும் நடவடிக்கை எடுக்கலை; பொறுப்பு அமைச்சரும் கண்டுக்காம இருக்காரு. கவர்மென்ட் கவனத்தை ஈர்க்குறதுக்கு, நெல்லையில நடந்த மாதிரி, மன்ற கூட்டத்துல வெளிநடப்பு செய்யலாமான்னு, ஆதரவு திரட்டிட்டு இருக்காங்க...''

இருவரும் கோர்ட் எதிரே உள்ள பேக்கரிக்குள் நுழைந்தனர். காவல்துறையை சேர்ந்த இருவர், ஆலாந்துறை ஸ்டேஷனில் நடந்த சம்பவத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

லெமன் டீ ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு லேடி, விஷப்பவுடர் சாப்பிட்டு உயிரிழந்தாங்களே... அந்த சம்பவத்தை முதலில் மூடி மறைக்க முயற்சி செஞ்சாங்களாம்... எப்படியும்... பிரேத பரிசோதனை அறிக்கையில தெரிஞ்சிரும்னு சொன்னதும், வெளிப்படையா சொன்னாங்களாம்.

உள்துறை செயலர் அமுதா கவனத்துக்கு, இந்த பிரச்னை போயிருக்கிறதுனால, நீதிபதி விசாரணை அறிக்கை கொடுத்ததும், ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்காரங்க மேல, துறை ரீதியான நடவடிக்கை பாயும்னு சொல்றாங்க,'' என்றாள்.

''அக்கா, அதே ஸ்டேஷன்ல அஞ்சு மாசமா இன்ஸ்., போஸ்டிங் காலியா இருக்குதாம்; அதனால, ஸ்டேஷன்ல வேலை பார்க்குற மத்த ஆபீசர்ஸ் ஜாலியா இருக்காங்க; இல்லீகல் நடவடிக்கைக்கு தாராளமா அனுமதி கொடுத்துட்டு, கல்லா கட்டுறாங்களாம்,'' என்றபடி, டீயை உறிஞ்சினாள் மித்ரா.

''மித்து, உள்ளாட்சி அமைப்புகளில் ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்கிறதா, சொல்றாங்களே... உண்மையா,''

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். உள்ளாட்சி தேர்தல் நடக்குறதுக்கு முன்னாடியும், கொரோனா சமயத்திலும் தனி அலுவலர் கட்டுப்பாட்டுல உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டுச்சு. அந்த சமயத்துல ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்கு. நிதியை இஷ்டத்துக்கு கையாண்டு, தங்களை 'வளப்படுத்தி' இருக்காங்க,''

''ஊராட்சியில ஆரம்பிச்சு மாவட்டம் வரைக்கும் 'நெட் ஒர்க்' வச்சு கையாடல் செஞ்சிருக்கிறது வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு; இதுல, சூலுார் யூனியன்ல நடந்த விவகாரம் வெளியே கசிய ஆரம்பிச்சிருக்காம்,''

டீ சாப்பிட்டு விட்டு, ரேஸ்கோர்ஸ் நோக்கி, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

ஜி.எஸ்,டி., பவனை பார்த்த சித்ரா, ''நம்மூரு ஜி.எஸ்.டி., ஆபீசர்ஸ் சிலர், 'ரெய்டு'க்கு போன இடத்துல எல்லை மீறி நடந்துக்கிட்டாங்களாம். வரி கட்டுனாங்களா; இல்லையான்னு 'செக்' பண்றதோட, சொத்து பத்திரத்தையும் ஆய்வு செஞ்சிருக்காங்க. டென்ஷனான கம்பெனிக்காரங்க, கோர்ட்டுக்கு போயிருக்காங்க.

கோர்ட்டுல இருந்து, ஜி.எஸ்.டி., ஆபீசர்களுக்கு 'டோஸ்' விழுந்துருக்கு. யாரு சொல்லி, ஆபீசர்ஸ் இப்படி நடந்துக்கிறாங்கன்னு உளவுப்பிரிவு போலீசார் விசாரிச்சிட்டு இருக்காங்களாம்,'' என்ற படி, சாரதாம்பாள் கோவிலை நோக்கி நடந்தாள்.

பின்தொடர்ந்த மித்ரா, ''அக்கா, வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துல, லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் நடக்காதாமே... லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்க... என்னதான் செய்றாங்கன்னு தெரியலை... ''

''மித்து, வட்டார போக்குவரத்து துறையில் பீளமேட்டுல இருக்குற ஆபீசுல நிலைமை ரொம்ப மோசம். பாட்டம் டூ டாப் வரை, ஒவ்வொரு டேபிளுக்கும் கவர் கொடுத்தா தான், வேலை செய்வாங்களாம்,''

''சில வருஷத்துக்கு முன்னாடி வேலை செஞ்சவங்க, ஆர்.சி., புத்தகத்தை சரியா பதிவு செய்யாம, குளறுபடி செஞ்சிருக்காங்க. பாதிக்கப்பட்டவங்க, இப்ப போயி முறையிட்டா, 'எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை; மனு கொடுத்தா, சரி செஞ்சு தர்றோம்'னு சொல்றாங்க. ஆனா, மாசக்கணக்குல அலைஞ்சாலும் செஞ்சு தர்றதில்லை,''

''இது சம்பந்தமா, உயரதிகாரிகள் 'என்கொயரி' செஞ்சா, டிரைவிங் ஸ்கூல், வாகன கடன் கொடுக்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து, இதுக்கு முன்னாடி செஞ்ச, ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் வெளிச்சத்துக்கு வரும்னு சொல்றாங்க,'' என்றாள்.

மொபைல் போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டு, இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement