Load Image
Advertisement

ஜாதிவாரி கணக்கெடுப்பு: நிதீஷ் பற்ற வைத்த தீ

'நாடு முழுதும், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என, சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இவற்றில், தமிழக அரசியல் கட்சிகளும் உண்டு. பீஹார் மாநில முதல்வரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதீஷ்குமாரும், மத்திய அரசிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தார். அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

ஆனாலும், பீஹார் மாநில அரசு சார்பில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்த நிதீஷ்குமார், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டார். அதில், பீஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோரும், இதர பிற்படுத்தப்பட்டோரும், ௬௩ சதவீதம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

பீஹார் மாநில அரசின் இந்தச் செயலால், மற்ற மாநில அரசியல் கட்சிகள் எல்லாம், குறிப்பாக, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் பல, ஜாதிவாரியான கணக்கெடுப்பை தங்கள் மாநிலங்களிலும் நடத்த வேண்டும் என, தீவிரமாக வலியுறுத்த துவங்கி உள்ளன. அதுமட்டுமின்றி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுலும், இந்த கோரிக்கையை தற்போது முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., முன்னிறுத்தும் கொள்கை ரீதியான அரசியலுக்கு எதிராக, ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரமே, அதிக முக்கியத்துவம் பெறும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, அம்மாநில உயர் நீதிமன்றம் முதலில் தடை விதித்தாலும், பின் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கிலும், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, மாநில அரசுகள் முடிவு எடுப்பதை தடுக்க முடியாது. மேலும், இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை, நீதிமன்றம் ஆராயும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் போது, அது அரசியல் ரீதியாக பல அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.

பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர், சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, அதில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சி, தற்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பையும், அரசியல் ஆயுதமாக கையில் எடுத்து, வலியுறுத்த துவங்கி உள்ளது.

அதே நேரத்தில், 'ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களை பிரிப்பது, எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஜாதி ரீதியாக மக்களை முன்னேற்ற வேண்டும் என்று சொல்வது, நாட்டை பின்னோக்கிய நிலைமைக்குத் தான் கொண்டு செல்லும்.

'அதுமட்டுமின்றி, ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம். அது, ஜாதி ரீதியான பாகுபாடுகளை ஒழிக்க உதவாது; அதற்கு மாறாக அதை அதிகரிக்கவே உதவும். சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, சமூகத்தில் பிரிவினைகளையே அதிகரிக்கும். தேசிய ஒருமைப்பாடு மேலோங்க வேண்டும் எனில், ஜாதி ரீதியான கணக்கெடுப்பை தவிர்ப்பதே அவசியம்' என்கிறது, மற்றொரு தரப்பு.

இருப்பினும், வெவ்வேறு ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை அந்தந்த மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி, தற்போது, பீஹார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக, அது தீவிரம் அடையத் துவங்கி விட்டது. ஜாதி ரீதியான கணக்கெடுப்பு வாயிலாகவே, இட ஒதுக்கீட்டின் பலன்கள் மிகவும் பின்தங்கியவர்களை சென்றடையும் என்ற கோஷமும் ஓங்கி ஒலிக்கத் துவங்கி விட்டது.

பீஹார் அரசு கொளுத்திப் போட்ட தீ பற்றி எரியத் துவங்கி விட்டது. இதன் விளைவுகள் அடுத்த சில ஆண்டுகளில் தெரியத் துவங்கி விடும்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement