Load Image
Advertisement

சீக்கிரமே நாறப்போகுது நம்ம ஊரு... மேடத்துக்கு ரத்தத்தின் ரத்தம் ஆதரவு!

கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நுழைவாயிலில் ஏகப்பட்ட கூட்டம்; பலரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

மரத்தடியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.

கூடியிருந்தவர்களிடம் விசாரித்து வந்த மித்ரா, ''மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி, தொழில்துறையினர் மனு கொடுக்க வந்திருக்காங்க,'' என்றாள்.

''ஆமாப்பா, அவுங்க படுற கஷ்டத்தை, இந்த கவர்மென்ட் இன்னும் புரிஞ்சுக்காம இருக்கு. வழக்கமா, மின்சார தட்டுப்பாடு ஏற்படுற சமயத்துல, 'பீக் ஹவர்ஸில்' தொழில்துறைக்காரங்க 'யூஸ்' பண்றதுக்கு கட்டுப்பாடு விதிப்பாங்க. இப்போ, 15 சதவீதம் கட்டணம் நிர்ணயிச்சதுனால, கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. இதெல்லாம், எம்.பி.,எலக்சன்ல கடுமையா பாதிக்குமேன்னு, ஆளுங்கட்சிக்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும். காங்கிரஸ் கட்சி மாதிரியே... தி.மு.க.,விலும் ஏகப்பட்ட கோஷ்டி உருவாகிடுச்சாமே...''

''ஆளுங்கட்சின்னா அப்படித்தாம்பா இருக்கும். செல்வாக்கா இருக்கறவுங்க பின்னாடி, நுாறு பேரு போவாங்க. ஆனா, வசூல் விஷயத்துல மட்டும், பொறுப்புல இருக்குற மும்மூர்த்திகளும் ஒன்னா இருக்காங்களாம்.

தலைமை பெயரைச் சொல்லி, அந்தந்த 'மாவட்ட' ஏரியாவுல இருக்குற டாஸ்மாக் 'பார்' களில், ஒரு 'பார்'க்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமா, ஒரு ரவுண்டு வசூலை முடிச்சிட்டாங்களாம். ஆனா, தலைமையில இருந்து எந்த ஒப்புதலும் வழங்கலையாம்,''

''மும்மூர்த்திகளும் கூடிப்பேசி, ஒரே மாதிரியா பொய் சொல்லி, ஒரு 'பார்'க்கு ஒரு லட்சம் வீதமா, 300க்கும் அதிகமான 'பார்'களில் வசூலைப் போட்டிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னே, கட்சியில இருக்குற வெவ்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கறதா, பொறுப்புக்கேற்ப தொகை நிர்ணயிச்சு, ஆளுக்கு 3சி, 4சி வரை அள்ளியிருக்கிறாங்க. அடுத்ததா, 'பார்' வசூல் ஆரம்பிச்சிருக்காங்க,''

''வசூலில், 'மாஜி' முதலிடத்துல இருக்காராம்; ஊர் பெயரை அடைமொழியாய் வைத்திருப்பவர் இரண்டாமிடம்; போரை வழி நடத்தும் பெயர் கொண்டவர், மூன்றாமிடத்தில் இருக்காராம்,''

''அ.தி.மு.க.,வுல இப்பவே எலக்சனுக்கு தயாராகிட்டாங்க போலிருக்கு,'' என கேட்டாள் மித்ரா.

''கூட்டணியில் முறிவு ஏற்பட்டாலும், பா.ஜ., வேட்பாளர் யாருங்கறதை பொறுத்து, ரத்தத்தின் ரத்தங்கள் செயல்பாடு இருக்குமாம். மேடம் களத்துல இறங்குனா, மறைமுகமா 'சப்போர்ட்' பண்ணுவாங்களாம். வேற யாராச்சும் போட்டி போட்டா, தனக்கு விசுவாசமா இருக்கக் கூடியவரை நிறுத்த, 'மாஜி' திட்டம் போட்டிருக்காராம்,''

''அதுக்காக, தொகுதி வாரியா பூத் கமிட்டி அமைச்சதோட, தனித்தனியா 'வாட்ஸ் ஆப்' குழுவும் உருவாக்கப் போறாங்களாம். இக்குழுவோட செயல்பாட்டை, மாநில நிர்வாகிகள் கண்காணிக்கற அளவுக்கு, ஐ.டி., விங் அணி படுஜோரா வேலை பார்த்துட்டு இருக்குது,''

''அக்கா, அ.தி.மு.க.,வை பத்தி சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. கார்ப்பரேஷன்ல அ.தி.மு.க., ஆட்சியிலும் 'பவர் புல்'லா இருந்த, 'உலக நாயகன்' பெயர் கொண்ட இன்ஜினியர், தி.மு.க., ஆட்சியிலயும் கெத்தா இருக்காராம். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல கரன்சியை அள்ளுறாராம். தன்னோட சாமர்த்தியத்தால, உயரதிகாரிகளை கைக்குள் போட்டுக்கிறாராம்,''

''கவர்மென்ட் மாறியதும், ரொம்ப வருஷமா பசையுள்ள பதவியில ஒட்டியிருந்த பல இன்ஜினியர்களுக்கு, அ.தி.மு.க., ஆதரவாளர்கள்னு முத்திரை குத்தி, வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கியடிச்சாங்க. ஆனா, இவர் மட்டும் இன்னும் அசையாம இங்கேயே இருக்கறதுக்கு, பெரிய ஆபீசரின் பலமான ஆதரவுதான் காரணமாம்,''

இருவரும் பேசிக் கொண்டே, கலெக்டர் அலுவலக புது கட்டடத்துக்குள் சென்றனர். தரைத்தளத்தில் இருந்த கழிப்பறையில் துர்நாற்றம் வீசியது; மனு கொடுக்க வந்த பலரும், மூக்கைப் பொத்திச் சென்றனர்.

அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, கார்ப்பரேஷன் துாய்மை பணியாளர்கள், மறுபடியும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போறாங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நெருங்குற நேரத்துல, போராட்டம் நடத்தப் போறதா அறிவிப்பு வெளியிட்டிருக்காங்க. கான்ட்ராக்ட் எடுத்திருக்கிற நிறுவனம், ஒழுக்கமா குப்பை அள்ளுறதே இல்லை. பண்டிகை நேரத்துல தொழிலாளர்கள் போராட்டத்துல இறங்குனா ஊரே நாறிடும். தீபாவளி சமயத்துல போனஸ் பிரச்னை வேற வரும். கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் இப்பவே 'அலார்ட்'டா நடவடிக்கை எடுக்கலைன்னா அவ்ளோதான்,''

''குப்பை அள்ளுற கம்பெனி மேல, ஏகப்பட்ட புகார் வந்திருக்காமே...''

''அதுவா, இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்கிற தொழிலாளர்களை புதுசா பேங்க் அக்கவுன்ட் துவங்கச் சொல்றாங்களாம். அதனால, சீனியாரிட்டியை கட் பண்றதுக்கு இப்படி செய்றாங்கன்னு நினைக்கிறாங்களாம்.

அப்புறம், பேங்க் பாஸ் புக்கை அடமானம் வச்சிட்டதா, கம்பெனிக்காரங்க கேவலப்படுத்தி பேசுறாங்களாம். அதனால, கொதிப்புல இருக்குற தொழிலாளர்கள், கம்பெனி மேல கார்ப்பரேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க,''

''அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் குளுகுளு அறையில சுகமா இருக்காங்க போலிருக்கே... பீல்டு இன்ஸ்பெக்சனுக்கு வர மாட்டாங்களா...''

''ஏன்க்கா... என்னாச்சு...''

''வாரக்கடைசியில... ஸ்பெஷல் பஸ் விடுறதா, அறிவிப்பு மட்டும் வெளியிடுறாங்க. ஆனா, பஸ் இயக்குறதே இல்லை. பஸ் ஸ்டாண்ட்டுகள்ல பயணிகள் கூட்டம் அலைமோதுது. ஒவ்வொரு பஸ்சிலும் படிக்கட்டுல தொங்குற அளவுக்கு பயணிகள் போறாங்க. 'ரெண்டு டிபார்ட்மென்ட்' அதிகாரிகளும் கண்டுக்கறதே இல்லை,''

''போன மாசம் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, உக்கடத்துல இருந்து காந்திபுரம் வர்றதுக்கு, கட்டணம் அதிகமா வசூலிக்கிறாங்கன்னு பலரும் புகார் சொன்னாங்க. அப்போதைக்கு, கலெக்டர் 'நோட்' பண்றாரு; இன்னும் நடவடிக்கை எடுக்கலைன்னு சொல்றாங்க,''

''மித்து, இன்னொரு விஷயம் சொல்றேன், கேளு! போன வாரம் தொடர்ச்சியா லீவு வந்ததுனால, சொந்த ஊருக்கு ஏகப்பட்ட பேரு போனாங்க. சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுல கூட்டம் அலைமோதியிருக்கு,''

'பெர்மிட்' வாங்காமலேயே, பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி, ஏகப்பட்ட ஆம்னி பஸ், வேன் வரிசையா நின்னுச்சு. போக்குவரத்து கழக ஆபீசர் ஒருத்தர், மைக்கில் 'வார்னிங்' செஞ்சும் கூட, பயணிகளை ஏத்திக்கிட்டு தான் கெளம்புச்சு. 'பெர்மிட்' இல்லாம பஸ் ஓட்டுறதுக்கு இந்தளவுக்கு 'தில்' இருந்தா, ஆக்சன் எடுக்குறதுக்கு ஆபீசர்களுக்கு தைரியம் இல்லைன்னு தானே அர்த்தம்,''

''அக்கா, இதே மாதிரி தான், கனிம வளத்துறை அதிகாரிகளும் செயல்படுறாங்க. இல்லீகலா செயல்படுற குவாரிகளை பத்தி, ஏகப்பட்ட புகார் வந்ததும், வேற வழியில்லாம, ஆய்வு செஞ்சு, 'பைன்' போட்டுருக்காங்க. யார் யாருக்கு எவ்ளோ அபராதம் போட்டாங்கன்னு, வெளிப்படையா அறிவிக்கிறதுக்கு தயக்கம் காட்டுறாங்க,''

''மாசத்துக்கு ஒரு தடவை ஸ்டேட்மென்ட் கொடுங்கன்னு கலெக்டர் சொல்லியும், அந்த டிபார்ட்மென்ட்டுக்காரங்க கேட்கவே மாட்டேங்கிறாங்க.

அந்த ஆபீசர், மாசந்தவறாம சென்னைக்கு போயி, 'கப்பம்' கட்டிட்டு வர்றதுனால, எதைப்பத்தியும் கவலைப்படுறதில்லையாம். உங்க துறையில இன்னென்ன பிரச்னை இருக்குன்னு, யாராச்சும் மிரட்டுனா... அவுங்களுக்கும் கரன்சியை தட்டி விடுறாங்களாம்,''

இருவரும் பேசிக்கொண்டே, கலெக்டர் அலுவலகத்தை சுற்றிப் பார்த்தனர்.

சுகாதாரத்துறை வாகனத்தை பார்த்த சித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சூலுார் பக்கத்துல மயிலம்பட்டியில டாக்டரே இல்லாத கிளினிக் நடத்தியதை கண்டுபிடிச்சு, ரெண்டு பேரை 'அரெஸ்ட்' பண்ணுனாங்கள்ல. இந்த விவகாரத்துல, கவர்மென்ட் டாக்டர் ஒருத்தரு, சுகாதாரத்துறை அதிகாரிக்கு போன் போட்டு, 'வழக்கமா, நான் போயிட்டு வர்ற கிளினிக்குதான்; ஆக்சன் எதுவும் எடுக்காதீங்க'ன்னு கேட்டிருக்காரு,''

''அதிர்ச்சியடைந்த ஹெல்த் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ், நிஜமாவே அந்த டாக்டர் வந்துட்டு போறாரான்னு ஆதாரம் தேடிப்பார்த்திருக்காங்க; எதுவும் சிக்கலை. அதுக்கப்புறம் நடவடிக்கையில இறங்கியிருக்காங்க. அந்த டாக்டர் மேல எந்த நடவடிக்கை எடுக்காம காப்பாத்திட்டாங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும்... போதையில்லா தமிழகம்னு பேசுறாங்க. ஆனா, ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்களுக்கு எப்படி போதை பொருட்கள் கெடைக்குது,'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.

''மித்து, சிட்டி லிமிட்டுல மட்டுமில்ல, கோவில்பாளையம், குரும்பபாளையம், கணேசபுரம், அன்னுார் ஏரியாவுலயும் 'போதை புகையிலை' அதிகமா 'சேல்ஸ்' ஆகுது.

ஸ்கூல்களுக்கு பக்கத்துல இருக்குற கடைகள்ல விக்கிறாங்க. ஹெல்த் டிபார்ட்மென்ட், போலீஸ்காரங்களுக்கு தகவல் சொன்னாலும், நடவடிக்கை எடுக்கறதில்லைன்னு பெற்றோர் புலம்புறாங்க,''

''டவுன் பிளானிங் பிரிவு ஆபீசர் ஒருத்தரை மாத்துங்கன்னு, உதவி கமிஷனர் ஒருத்தரு கமிஷனருக்கு கடிதம் எழுதி இருக்காராமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.

''ஆமா... உண்மைதான்! அந்த ஆபீசரை ஏற்கனவே வேற ஊருக்கு மாத்தி, கவர்மென்ட் ஆர்டர் போட்டிருக்கு. வேற ஆபீசர் நியமிக்காததால, அவரை, கமிஷனர் 'ரிலீவ்' செய்யாம இருக்காரு. அந்த ஆபீசர் மேல ஏகப்பட்ட புகார் வருதுன்னு, உதவி கமிஷனரே கடிதம் அனுப்பி இருக்காரு. கமிஷனர் நடவடிக்கையில, மத்த ஆபீசர்ஸ் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க...''

''ஏன்... என்னாச்சு..''

''ஒரு அதிகாரியை வேற எடத்துக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சு கவர்மென்ட் ஆர்டர் போட்டா, உடனடியா, 'ரிலீவ்' பண்ணனும். ஆனா, அந்த போஸ்ட்டிங்கிற்கு அதிகாரி நியமிக்கலைன்னு பெரிய ஆபீசர் காரணம் சொல்லிட்டு இருக்காராம். இதுவே, அவருக்கு பெரிய ஆபத்தா முடியும்னு கார்ப்பரேஷன்ல பேசிக்கிறாங்க,''

பேசிக்கொண்டே சித்ரா, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள். பின் இருக்கையில் மித்ரா அமர்ந்ததும், கலெக்டர் ஆபீஸில் இருந்து புறப்பட்டனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement