Load Image
Advertisement

ஆவேசமும் ரௌத்திரமும் கடந்து பொறுப்புணர்வுக்கு நகர்வோம்

சத்குரு:

ஒரு ஏகாதிபத்திய, சர்வாதிகார அரசாங்கத்தில், இரத்தம் சிந்தாமல் ஆட்சிமாற்றம் சாத்தியப்படாது. ஒரு ஜனநாயக அரசில், மக்களின் விருப்பத்திற்கேற்ப, அதுவும் இரத்தம் மண்ணில் சிந்தாமல், மாற்றம் நிகழ்வதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.

இரத்தம் பாயவில்லை என்றாலும்கூட, நுரைத்துத் ததும்பிய எச்சில் சிதறலுக்குக் குறைவில்லை! கடந்த வாரங்களில் பெருகிய உமிழ்வெள்ளம் - எல்லா அரசியல் கட்சிக்கும் இதில் பங்கு உண்டு - தெளிவுபடுத்துவது என்னவென்றால், அடுத்த தேர்தலுக்கு முன்பு, நமக்குப் பக்கத்துணையாக ஒரு குடை அவசியம் தேவை!

தேர்தலில் பலரும் தங்களைத் தூக்கி நிறுத்தும் ஓட்டத்தில் வண்ணமயமான இந்தியர்தம் வாழ்க்கை மேன்மேலும் வர்ணஜாலம் காட்டியது. திரை நட்சத்திரங்கள் தங்கள் மீசையை முறுக்குவதையும், சன்னியாசிகள் தங்கள் முஷ்டி பலம் காட்டியதையும் நாம் கண்டிருந்தோம். அபரிமிதமான வாக்குமொழிகள் அள்ளி வீசப்பட்டன: கடன்கள் தள்ளுபடி, வாழ்வாதாரங்கள் மற்றும் இலவச மருத்துவ வசதி வழங்குவது (இலவச மதுபானமும் அடங்கலாக). ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட வார்த்தைச் சாடல்களில் பட்டப்பெயர்கள் சுதந்திரமாக வலம் வந்தன: ஔரங்கசீப்பிலிருந்து மொகாம்போ வரை, காவலாளி முதல் திருடன் வரை அனார்கலியிலிருந்து ப்ரஷ்தாச்சாரி வரை. சரமாரியான கேள்விக் கணைகளிலிருந்தும், வசைமாரிகளிலிருந்தும் மனைவியரும் தந்தையரும்கூட தப்பிக்கவில்லை. இந்த உரத்த உளறல்களில், நகைச்சுவை தெறித்த கணங்கள் இருந்தாலும், ஹாஸ்யத்தைவிட அதிகமான விஷத்தன்மையும், இதமற்ற உஷ்ணமும்தான் பரவிக் கிடந்தன.

இப்போது, நாம் இந்த விஷமச்சூழலைக் கைவிட்டு, நமக்கே உரிய பெருந்தன்மை, பரஸ்பர மரியாதைக்குத் திரும்புவோம். தேர்தல் காலத்தின் அலங்கார வார்த்தைகளை நமது தினசரி வாழ்வின் அகராதிக்குள் எதற்குச் சுமப்பது? பூமியின் மிகப் பழமையான நாகரீகங்களுள் ஒன்றை நிமிர்ந்தெழச் செய்வதற்கான ஒரு தேர்தல் வெற்றிகரமாக நடந்திருப்பதை நினைவில் நிறுத்துங்கள். வென்றவர், தோற்றவர் இருசாராரும் நாம் தலைமுறைகள்தோறும் கட்டிக்காத்து வந்த பண்பும் ஒருமையுணர்வும் இணைந்த கலாச்சாரத்தின் சிறப்புக்கு இசைவாக கைகள் கோர்த்து செயல்புரியவேண்டும்.

இந்தியா தனது அனைத்து முரண்பாடுகளுடனும், உலகப் பொருளாதாரத்தில் முதன்மை இடத்தைப் பிடிப்பதற்கு அலைபோல முன்னேறுவது மட்டுமல்லாது, ஞானத்தின் தலைசிறந்த உரைவிடமாகவும் இருக்கிறது. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களும் எதிர் வரிசையில் இருப்பவர்களும், இரண்டு அணியினருமே தங்களது எல்லா புகார்களையும் ஒதுக்கிவிட்டு, குற்றம் சுமத்தும் வார்த்தை விளையாட்டுகளை நிறுத்தி, இந்த மாபெரும் மண்ணின் பிரதிநிதிகள் என்னும் நிலைக்குப் பொருத்தமான வகையில் தங்களை தகவமைத்துக்கொள்ளல் வேண்டும்.

அரவணைத்துக்கொள்ளுதல் என்பது ஆன்மீக வழிமுறையின் சாரமாக இருக்கிறது. ஆட்டத்தை விளையாடுவதும், அவசியம் வரும்போது நிலைப்பாடு எடுக்கவேண்டியதும் முக்கியமானதாக இருக்கும் அதே வேளையில், இந்த அடிப்படையான உண்மையை ஒருபோதும் மறக்காமலிருப்பது மிக முக்கியமானது: பிரிந்திருத்தல் என்பது கட்டுக்கதை.

சகலத்தையும் இணைத்துக்கொள்ளும் தன் இயல்பை எந்தக் கணத்திலும் இழக்காமல், வாழ்வின் லீலையில் ஈடுபடும் இந்தத் திறனுக்கு கிருஷ்ணன் மகத்தான முன்னுதாரணமாக இருந்தான். விளையாட்டில் உள்ளதைப்போல, தேர்தலில்கூட, யாராவது இழக்க நேர்கிறது. முடிவைப் பொருட்படுத்தத் தேவையில்லை, நீங்கள் தேசத்திற்காக நின்றதுதான் முக்கியமானது. இந்த சேவை மனப்பான்மையை முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் உறுதியாக இருப்பதுதான் இப்போது உங்களுக்கான பணி.

பிரிவினை நாடகம், கோபம் மற்றும் சொற்போர் ஆகியவற்றுக்கான நேரம் முடிந்துவிட்டது. குறுகிய வகுப்புவாதம் மற்றும் கட்சிப் பாகுபாடு ஆகியவை கடந்து தேசத்தின் எதிர்காலத்துக்காகச் செயலாற்ற வேண்டிய நேரம் இது. வெற்றி பெற்றவர்கள் பணிவுடன் நடந்துகொள்வது, தோற்றவர்கள் தீர்ப்பினை மாண்புடன் ஏற்றுக்கொள்வது, அதே சமயம், இருவருமே தேசத்தின் முன்னேற்றத்துக்காக செயல்படும் பொறுப்பைக் கைவிடாமல் செயல்படுவது அவசியம்.

“எதிராளியின் குரலை நாம் கேட்கத் தயாராக இல்லையென்றால், ஜனநாயகத்தின் மாபெரும் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை,” என்றார் காந்தியடிகள். இது கேட்பதற்கான நேரம். எதிர்வினையாற்றுவதற்கான நேரம் அல்ல. உள்நோக்கிய பார்வையுடன் முன்னேற வேண்டிய நேரம் இது. கடந்த காலத்தின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியையும் தூக்கிச் சுமப்பதன் மூலம், ஜனநாயகத்தின் அற்புதமான மேன்மையை அற்பமாக்காமல் இருப்போம். குரோதம், காழ்ப்புணர்ச்சி எனும் கொடிய விஷத்தை நீங்கள் அருந்திவிட்டு, இறப்பது என்னவோ இன்னொருவராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். எது ஒன்றுக்கும் அடுத்தவர் மீதோ ஆண்டவன் மீதோ பழி போடும் பத்தாம்பசலித்தனமான போக்கிற்கு முடிவுகட்டும் நேரமிது. அப்போது மட்டும்தான் நாம் இந்த குரோதம், காழ்ப்புணர்ச்சியைக் கடந்து, ஒன்றிணைந்து, பொறுப்புணர்வை நோக்கிச் செல்லமுடியும்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement