ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் மற்றும் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்பாக, ஆய்வு ஒன்றை நடத்தின. அதன் முடிவுகள், 'இந்திய முதியோர் அறிக்கை - 2023' என்ற பெயரில் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
அதில், 2022 ஜூலை, 1ம் தேதி நிலவரப்படி, இந்திய மக்கள் தொகையில், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக இருந்தது. அது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 10.5 சதவீதம். இந்த எண்ணிக்கை, 2050ம் ஆண்டில், 20.8 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது, 34.7 கோடியாக அதிகரிக்கும். இந்த நுாற்றாண்டின் இறுதியில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், முதியோர் எண்ணிக்கை, 35 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நம் நாட்டின் முதியோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நுாற்றாண்டின் மத்திய பகுதியில், குழந்தைகளின் எண்ணிக்கையை விட, முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 2050க்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, நம் நாட்டின் முதியோர் எண்ணிக்கை, 0 - 14 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகி விடும். அத்துடன், 15 - 59 வயதுடையவர்களின் எண்ணிக்கை சரிவை காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் முதியோர் வளர்ச்சி வீதம், 41 சதவீதமாக உள்ளது. இப்போது, 35 வயதிற்கு உட்பட்ட, 65 சதவீத இந்தியர்களுடன், உலகிலேயே இளம் வயதினர் மற்றும் வாலிபர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்ற நிலைமையில், மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள முதியோரில், 40 சதவீதத்திற்கும் அதிகமானோர், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். குறிப்பாக, 18.7 சதவீதத்தினர் வருமானம் இல்லாமல் வாழ்கின்றனர். இந்த நிலவரம், 17 மாநிலங்களில் உள்ளது. 2022 மற்றும் 2050க்கு இடைப்பட்ட காலத்தில், 80வயதிற்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை, 279 சதவீதம் உயரும். முக்கியமாக விதவைகள், மற்றவர்களை சார்ந்து வாழும் முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
இது, முதியோரின் வாழ்க்கைத் தரம் மற்றும் உடல் நலன் தொடர்பான விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். பல சவால்களை, மத்திய, மாநில அரசுகள் சந்திக்க நேரிடும். அதனால், முதியோர் ஆரோக்கியமாகவும், கண்ணியமாகவும் வாழ தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அதாவது, முதியோர் உடல் நலன் தொடர்பான சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். அவர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை, குறிப்பாக, சமூக பாதுகாப்பு திட்டங்களை வகுத்து, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். முதுமை காலத்தை, அவர்கள் மகிழ்ச்சியாக கழிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடி செயல்கள் நடப்பதையும் தடுக்க வேண்டியது அவசியமாகும்.
இன்றைய வாலிபர்கள், நாளைய முதியோர் என்பது உண்மை நிலவரம். எனவே, உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் வாயிலாக, இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். முதியோர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
தங்களின் பணிக்கால சேமிப்புகளை நம்பித் தான், ஓய்வு பெற்ற பின், முதியோர் வாழ்ந்தாக வேண்டிய நிலைமை உள்ளது. அப்படியே பலர் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை கொண்டிருந்தாலும், அவற்றுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் குறைவாக இருப்பதால், அது, நோயால் அவதிப்படும் பலருக்கு மருந்துகள் வாங்கக் கூட போதுமானதாக இல்லை. எனவே, இவற்றிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். மொத்தத்தில், முதியோர் நலன் காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை, இப்போதிருந்தே எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!