Load Image
Advertisement

கூட்டுறவு பதவி ஆசை காட்டும் ஆளுங்கட்சி கந்தலா மாறிக்கிட்டிருக்கு கதர் சட்டை கட்சி!

பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு சென்றிருந்தனர்.

காந்தி சிலைக்கு மேயரும், கவுன்சிலர்களும் மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்.

அதை கவனித்த சித்ரா, ''நம்ம கார்ப்பரேஷனுக்கு 'ஸ்மார்ட் சிட்டி அவார்டு' கெடைச்சிருக்கு; ஜனாதிபதி முர்மு சிறப்பு விருந்தினரா பங்கேற்று, விருது கொடுத்திருக்காங்க. அதை வாங்குறதுக்கு கமிஷனரும் போகலை; மேயரும் போகலையே... ஏனாம்...''

''சென்ட்ரல் கவர்மென்ட் அவார்டுங்கறதுனால, கமிஷனருக்கு தயக்கம் போலிருக்கு. கடைசி நேரத்துல, புரோகிராமை மாத்தி, ஜெர்மனியில நடந்த கருத்தரங்கிற்கு போயிட்டாரு.

மற்ற மாநகராட்சிகள்ல இருந்து மேயர்களும் போயிருக்காங்க. ஆனா, நம்மூரு மேயரை அழைச்சிட்டு போகாம, 'ஸ்மார்ட் சிட்டி' ஆபீசர்ஸ் கண்டுக்காம விட்டுட்டாங்களாம்,''

''மித்து, நம்மூர்ல தான் மேயர் தரப்புக்கும், ஆபீசர்ஸ் தரப்புக்கும் 'லடாய்' நடந்துக்கிட்டு இருக்குதே... அப்புறம் எப்படி அழைச்சிட்டு போவாங்க...'' என்ற சித்ரா, ''வெள்ளலுார் குப்பை கிடங்குல என்ன நடந்துச்சு... ஒரே மர்மமா இருக்குதே...'' என, நோண்டினாள்.

''அக்கா... விபத்து நடந்ததை கேள்விப்பட்டு, கவுன்சிலர்கள் சில பேரு 'ஸ்பாட்'டுக்கு போயிருக்காங்க; கான்ட்ராக்ட் எடுத்த கம்பெனிக்காரங்க, அவுங்களை உள்ளே நுழைய விடலையாம். மேயர் தரப்புல இருந்தும், தொலைபேசியில் தொடர்பு செஞ்சிருக்காங்க; 'ரெஸ்பான்ஸ்' பண்ணலையாம்,''

''இப்போ, நடந்த சம்பவத்தை மாத்தி, மாத்தி சொல்றாங்களாம். குப்பை கிடங்கிற்கு நியமிச்சிருக்கிற கார்ப்பரேஷன் அலுவலர்கள் மேல, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காம, உயரதிகாரிகள் மவுனம் சாதிக்கிறாங்களாம். ஜெர்மனியில இருந்து கமிஷனர், திரும்பி வந்ததுக்கு அப்புறம்தான், இந்த பிரச்னைக்கு விடை கிடைக்கும்னு சொல்றாங்க,''

''கார்ப்பரேஷன் திமிங்கலம் தப்பிச்சிருச்சாமே...'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''அதுவா, 'ரிடையர்மென்ட்' ஆகுற அன்னைக்கு 'சஸ்பெண்ட்' ஆவாங்க. 'கம்ப்ளைன்ட்' நிரூபிக்கப்பட்டு விட்டது; ஓய்வூதிய பலன் எதுவும் கெடைக்க வாய்ப்பில்லைன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.

தணிக்கைத்துறையில முன்னரே பேசி, 'டீல்' முடிச்சிட்டாங்களாம். ஏகப்பட்ட முறைகேடு செஞ்சிருந்தும், அதற்கான ஆவணங்கள் இருந்தும், எந்த தண்டனையும் கொடுக்காம, ஓய்வு கொடுத்திருக்காங்க. அந்த 'லேடி ஆபீசர்', 'மாஜி'க்கு நெருக்கமானவராம்...'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீஸ் எதிரே இருந்த, பேக்கரிக்குள் நுழைந்தாள் சித்ரா.

பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''ஆளுங்கட்சியில என்ன செய்றாங்கப்பா...'' என, கேட்டாள்.

''சேலத்துல நடத்தப்போற, இளைஞரணி மாநாட்டுக்கு முன்னோட்டமா, இந்த மாசக்கடைசியில நம்மூர்ல பிரமாண்டமா இளைஞரணி கூட்டம் நடத்தி, கெத்து காட்ட இருக்காராம். தொகுதிக்கு ரெண்டாயிரம் பேரை திரட்டணும்னு மேலிட உத்தரவாம். அதற்கான ஏற்பாடுகளை இப்பவே செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம்...''

''கூட்டுறவு தேர்தல் நடத்தி, தி.மு.க.,வுல பதவி கொடுக்கப் போறாங்களாமே...''

''ரூல்ஸ்படி, டிசம்பர் மாசம் கூட்டுறவு தேர்தல் நடத்தணும். பதவி கெடைக்காதவங்க, லோக்சபா தேர்தலில் கவுத்தி விட்டுறலாம்னு நினைக்கிறாங்க. தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம், அதிக ஓட்டு வாங்கிக் கொடுத்தவங்களுக்கு பரிசு கொடுக்குற மாதிரி, கூட்டுறவு பதவி கொடுக்கறதுக்கு 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''

''ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவர் ஒருத்தரு, ஏடா கூடாம பேசுறாராமே...'' என, வம்புக்கு இழுத்தாள்.

''கிழக்கு பகுதியில இருக்கற பேரூராட்சியை சேர்ந்த அந்த சேர்மன் எப்பவுமே அப்படித்தானாம். சர்ட்டிபிகேட், அப்ரூவல் கேட்டு வர்றவங்களை மரியாதை குறைவா பேசுறாராம். அரசு ஊழியர்களையும், ஆபீசர்களையும் தகாத வார்த்தையில் வசைபாடுறாராம்,''

பேக்கரியில் இருந்து வெளியே வந்த சித்ரா, ''ஆளுங்கட்சி கூட்டணி கட்சியான காங்கிரசிலும் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்குதாமே...'' என, கேட்டாள்.

''ஆமாக்கா... கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியையே, மாநில நிர்வாகி ஒருத்தரு தன்னுடைய கட்டுப்பாட்டுல வச்சிருக்காரு. அவருடைய விசுவாசியான வக்கீலை மாவட்ட பொறுப்புல வச்சிக்கிட்டு, சீனியர்களை, ஓரங்கட்டி வச்சிருக்காராம்,''

''இப்போ, சார்பு அணி தலைவர் பதவிக்கும் தனக்கு வேண்டியவர்களை நியமிச்சு, அந்தந்த அமைப்புகளையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கோவை மாவட்ட காங்கிரசை ஆட்டிப்படைக்கிறாராம்,''

''அதனால, காங்., கட்சியை சேர்ந்த வக்கீல்கள் ஒன்னு சேர்ந்து, மாநில நிர்வாகிகளை அழைக்காமல், மண்டல மாநாடு நடத்துறதுக்கு, ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

''இதை கேள்விப்பட்டதும், மாநாடு நடத்த விடாம தடுத்துட்டாராம். இவுங்களுக்குள்ள இருக்குற கோஷ்டி சண்டையால, கதர் சட்டை கட்சி கந்தலாகிட்டு இருக்குதாம்,''

இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர். ஒப்பணக்கார வீதியில் சென்று, ராஜவீதியில் திரும்பியபோது, ''மித்து, சி.இ.ஓ., யாரா இருந்தாலும், எஜூகேசன் ஆபீசுல இருக்கற சிலரே அதிகார மையங்களா செயல்படுறாங்க. கரன்சி கொடுக்காம, டீச்சர்ஸ் கொடுக்கற எந்த கோரிக்கையும் நிறைவேறாதாம்; சி.இ.ஓ., டேபிளுக்கு பைல் போறதுக்கு கரன்சி வெட்டணுமாம். புதுசா வந்திருக்கிற ஆபீசர், அலுவலக ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கணும்னு, டீச்சர்ஸ் புலம்புறாங்க,'' என்றாள்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்த போது, அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீஸ்காரர், உயரதிகாரி வருகைக்காக, வாகனங்களை நிறுத்தினார்.

சற்று நேரம் நின்று விட்டு, கிரீன் சிக்னல் கிடைத்தும் ஸ்கூட்டரை முறுக்கிய சித்ரா, ''போலீஸ் கமிஷனர் வேகம் குறைஞ்சு போச்சு போலிருக்கே. ஸ்டேஷன்ல நடக்குற பிரச்னை எதுவுமே இவர் காதுக்கு வர மாட்டேங்குதே,'' என, 'ரூட்' மாறினாள்.

''என்னாச்சுக்கா... எங்கே தப்பு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குறாரே...''

''மித்து, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பீளமேடு பகுதியில ஒரு வீட்டுல திருடு போயிருக்கு. ஸ்பாட்டுக்கு போன சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், திருடுபோன பொருட்களின் மதிப்பை கேட்டிருக்காரு.

இரண்டரை பவுன் தங்க நகை, 80 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை காணலைன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு, 50 ஆயிரம் ரூபாய் திருடு போனதா, மதிப்பை குறைச்சுப் போட்டு, புகார் எழுதி வாங்கியிருக்காங்க,''

''இதே மாதிரி, ஆர்.எஸ்.புரம் ஸ்டேஷனிலும், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் காணலைன்னு, புகார் கொடுக்க வந்தவரிடம், 10 ஆயிரம் ரூபாய் போன் காணலைன்னு எழுதி வாங்குனாங்களாம். ஸ்டேஷனுக்கு வர்ற ஜனங்க, நம்பிக்கை இழந்து திரும்பிப் போறாங்க,''

''அக்கா... என்னிடமும் போலீஸ் மேட்டர் நிறைய்யா இருக்கு. சொல்லட்டுமா...'' என்ற மித்ரா, ''பேரூர் லிமிட்டுல ஒரு நம்பர் லாட்டரி, சீட்டாட்டம் ஜோரா நடக்குது. மாசந்தவறாம மாமூல் வர்றதுனால, அந்த திசை பக்கம் போலீஸ்காரங்க, ரோந்து கூட போறதில்லை,''

''இன்னொரு தகவல் என்னென்னா... போலீஸ் உளவுத்துறையில் 'க்யூ பிராஞ்ச்' ரொம்ப முக்கியமானது. இந்த பிரிவிலும் போலீஸ்காரங்க குறைவா இருக்காங்க. டூட்டியில் இருக்கற சிலருக்கு எக்கச்சக்கமா வேலை கொடுக்குறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, உளவுத்துறையை சேர்ந்த மற்ற பிரிவுக்கு ஆட்கள் நியமிச்சாங்க; 'க்யூ பிராஞ்ச்'க்கு மட்டும் நியமிக்காததால, அந்த பிரிவை சேர்ந்தவங்க, 'அப்செட்டு'ல இருக்காங்க,''

''கடைசியா, இன்னொரு தகவல் சொல்றேன் கேளுங்க. காருண்யா ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்காரர் வீடு, நீலாம்பூர்ல இருக்குறதுனால, டூட்டிக்கு டெய்லி லேட்டா தான் வருவாராம். இதுசம்பந்தமா, அதே ஸ்டேஷன்ல வேலை பார்க்குற மூனு போலீஸ்காரங்க, அவரை தொடர்ச்சியா கேட்டிருக்காங்க. அவரும் தினமும் ஒரு காரணத்தைச் சொல்லியிருக்காரு,''

''திடுதிப்புன்னு, எஸ்.பி., ஆபீசுக்கு, தன்னுடைய தாயை அழைச்சிட்டு போயி, மூனு பேரு 'டார்ச்சர்' செய்றதா, கண்ணீர் விட்டு அழுதுருக்காரு. உடனே, மூணு பேரையும் ஆயுதப்படைக்கு மாத்திட்டாங்க.

இனி, சரியான நேரத்துக்கு வேலைக்கு வர்றாறான்னு பார்க்குறதுக்கு, கம்ப்ளைன்ட் சொன்னவருக்கு எஸ்.பி., ஆபீசுக்கு டூட்டி போட்டிருக்காங்க,'' என்றாள்.

மித்ரா சொல்வதை கேட்டுக் கொண்டே, ரேஸ்கோர்ஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement