Load Image
Advertisement

என் தோட்டத்தில் 300 மா ரகங்கள் உள்ளன!

கேரளாவை சேர்ந்த இயற்கை விவசாயி சங்கரன்: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வலம்பிலிமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது என் தோட்டம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து, பிரேசில், மலேஷியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மிகவும் அரிதான, 300க்கும் மேற்பட்ட மா ரகங்களை என் தோட்டத்தில் விளைவிக்கிறேன்.

நாங்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பம். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, 1976ம் ஆண்டில் இருந்து முழு நேரமாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.

தென்னை, மா, ஜாதிக்காய், பாக்கு, காபி, மிளகு, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, வாழை, டிராகன் புரூட், ரம்பூட்டான், ஸ்டார் புரூட், பப்பாளி, மல்பெரி, வெற்றிலை, ஏலக்காய், கோகோ உட்பட பலவிதமான பயிர்களையும் சாகுபடி செய்கிறேன்.

என் தோட்டம் காடு போல் இருக்க வேண்டும் என விரும்பியதால் பயிர்களை நெருக்கமாக உருவாக்கி உள்ளேன்.

ஜாதிக்காய்வெற்றிகரமாக விளைச்சல் கொடுக்க, அதிகமாக சூரிய ஒளி தேவை என்பதால், அதை வேலி ஓரத்தில் வைத்து உள்ளேன்.

மரத்துக்கு மரம் போதுமான இடைவெளி இருக்க வேண்டும் என்பது, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இயற்கை, அப்படி எந்தவொரு விதிமுறையையும் வரையறுக்க வில்லை. அதனால், இடைவெளியைப் பற்றி நான் கண்டு கொள்வதே இல்லை.

கேரளாவைச் சேர்ந்த 30 ரகங்கள், ஆப்ரிக்காவில் விளையும் கிரஹாம், அமெரிக்காவின் கெய்ட், பாகிஸ்தானின் சவுன்சா, சிந்தரி உட்பட, 300க்கும் மேற்பட்ட மா ரகங்கள் இங்கு உள்ளன.

தாய்லாந்து நாட்டில், 4 கிலோ எடையில் ஒரு மா ரகம் உள்ளது. அந்த ரகம் தற்போது என் தோட்டத்தில் உள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற, கேரளாவின் மிகவும் பழமையான குட்டியாட்டூர் மா ரகமும் இங்கு வைத்துள்ளேன். இந்தியாவில் மொத்தம், 16 மா ரகங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அதில், 10க்கும் மேற்பட்ட ரகங்கள் என் தோட்டத்தில் உள்ளன. தமிழகத்தின் மிகவும் பழமையான பஞ்சவர்ணம், பழனி மூவாண்டன், ராஜபாளையம் ஆகிய மா ரகங்களை என் தோட்டத்தில் விளைவிக்கிறேன்.

இந்த தோட்டத்தில் ஆழ்துளை கிணறு கிடையாது. 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி வைத்துள்ளோம்; 25 சென்ட்டில் குளம் வெட்டி உள்ளோம்.

மழை நீரை சேகரித்து தான் பாசனத்துக்கு பயன்படுத்துகிறோம். அடர்வனம் என்பதால், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். அதனால், தண்ணீருக்கு பஞ்சமே இல்லை!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement