Load Image
Advertisement

அ.தி.மு.க., உருவாக விதை போட்ட நாள் இன்று!

சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் பாராட்டாமல், சினிமாவை போலவே நிஜ வாழ்விலும், வாழ்ந்து வழிகாட்டிய எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான், அ.தி.மு.க., என்ற, வலிமையான இரும்பு கோட்டைக்கு விதை போட்டனர் என்பது வரலாறு. 51 ஆண்டுகளுக்கு முன், எம்.ஜி.ஆரை, அ.தி.மு.க.,வுக்கு அடித்தளமிட வைத்தது அக்டோபர், 1ம் தேதி தான். தமிழகத்தில் தி.மு.க.,வை பட்டிதொட்டி எங்கும் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்., 1953ல் தி.மு.க.,வில் இணைந்த அவர், தன் திரைப்படங்கள், பிரசாரம் மற்றும் நாடகங்கள் வாயிலாக, அந்தக் கட்சி வளர, முக்கிய காரணமாக இருந்தார்.
குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப் போட்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்தை, தமிழகமெங்கும் ஒட்டியே, 1967 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது.


அண்ணாதுரை மறைவுக்குப் பின், 1971 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 184 இடங்களை பிடித்து, மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணமும் எம்.ஜி.ஆர்., தான். அதன்பின், ஊழல் பெருகி விட்டது, குடும்பக் கட்சியாக, தி.மு.க., மாறி விட்டது என்றெல்லாம், காமராஜர் கடும் விமர்சனம் செய்தார்.
இந்த தருணத்தில், மு.க.முத்துவை, எம்.ஜி.ஆர்., போலவே நடிக்க வைத்து, திரைத்துறையில் இறக்கினர். எம்.ஜி.ஆர்., மன்றங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மு.க.முத்து பெயரில் ரசிகர் மன்றங்கள் துவக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் முதல் கிளைக்கழக செயலர்கள் வரை தீவிரம் காட்டினர். தி.மு.க., மாநாட்டிலும், மு.க.முத்துவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இதனால், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தீர்வு காண, எம்.ஜி.ஆர்., மன்றத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தாம்பரம் பாலுவின் வீட்டில் ஒன்று கூடினோம்.அதில், எம்.ஜி.ஆர்., மன்றங்களுக்கு தனிக்கொடி அடையாளமும், தென்னக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., புகழ் பரப்பும் கலைக்குழு அமைப்பது என்றும் முடிவானது.ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள சத்யா திருமண மண்டபம், அதாவது, இன்றைய அ.தி.மு.க., தலைமை கழகம் அமைந்துள்ள நுழைவு வாயிலில், எம்.ஜி.ஆருக்கு ராசியான தாமரை பூ இடம் பெற்றிருந்தது. அதையே மன்றக் கொடியில் பயன்படுத்தலாம் என்று நான் சொன்ன ஆலோசனையை, அனைவரும் ஏற்றனர். அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாட்டில், அக்டோபர் 1ல், சத்யா திருமண மண்டபத்தில், சென்னை - செங்கை மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற ஆலோசனை கூட்டம்
நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் தகவலை அறிந்த, அன்றைய முதல்வர் கருணாநிதி, புதுச்சேரி முதல்வராக இருந்த பரூக் மரைக்காயர் வாயிலாக, எம்.ஜி.ஆரிடம், 'இனி நேர்மையான ஆட்சியும், ஜனநாயக வழியில் கட்சியும் நடத்துகிறேன்' என, சமாதானம் பேசிவிட்டார்; இது, எங்களுக்குத் தெரியாது.
கருணாநிதியுடன் சமாதானம் ஆகிவிட்ட எம்.ஜி.ஆர்., அந்த தருணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், 'தாய் கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னை கேட்டால், தாய் கழகம் தான் வேண்டும் என்பேன். 'அண்ணா கண்ட இருவர்ணக் கொடி தான் நம் அடையாளம். தனித்த அடையாளம் தேவையில்லை' என்று கூறி, எங்களது கோரிக்கைகளை நிராகரித்தார். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது.நானும் அதிர்ச்சி அடைந்தாலும், மேடையிலிருந்து உடனே கீழே இறங்கி, எம்.ஜி.ஆரின் காருக்கு அருகில் நின்று கொண்டேன். காருக்கு வந்த எம்.ஜி.ஆரிடம் துணிச்சலுடன், 'வணக்கம் அண்ணே! எம்.ஜி.ஆர்., மன்றத்தை க்ளோஸ் பண்ணிட்டீங்க... இனி, ஒரு எம்.ஜி.ஆர்., மன்றம் கூட உருவாகாத வகையில், உங்கள் பேச்சு அமைந்து விட்டது' என்று நான் சொன்னவுடன், 'என்ன?' என்று கேட்டார்.
உடன் நான், 'எம்.ஜி.ஆர்., மன்றங்களுக்கு தி.மு.க., வட்டச்செயலர்கள் கூட அனுமதி கொடுக்காமல், பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து மன்றங்களை திறக்கச் சொல்லி
கட்டாயப்படுத்துகின்றனர்.

'அதுபற்றி கேட்டால், மேலிடத்து உத்தரவு என்கின்றனர். இப்போது, நீங்கள் பேசியது, அந்த வட்ட மற்றும் கிளைக்கழக செயலர்களுக்கு ஆதரவாக அமைந்து விட்டது. அதனால், இனிமேல் ஒரு எம்.ஜி.ஆர்., மன்றம் கூட உருவாகாது'
என்றேன். நான் கூறியதை கவனமாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பினார். அதன்பின், நான் கூறிய தகவல்கள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகள் நடப்பது பற்றிய தகவலை அறிந்தார்.
உடனடியாக அக்டோபர் 8ல், திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலை திறப்பு விழாவிற்கும், அன்றைய இரவு லாயிட்ஸ் காலனி பொதுக்
கூட்டத்திற்கும், தேதி கொடுத்து விட்டார்.

அக்டோர் 8 பொதுக்கூட்டத்தில், 'கிளைக் கழக செயலர் முதல் அமைச்சர்கள் வரை சொத்துக் கணக்கு காட்ட வேண்டும்' என்று புரட்சிக்குரல் எழுப்பினார். மேலும், 'நான் தான் தி.மு.க., - தி.மு.க., தான் நான்' என்றும் உரிமைக்குரல் எழுப்பி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இதையடுத்து, அக்டோபர் 10ல், தி.மு.க., விலிருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டார்; 17ல் அ.தி.மு.க., உருவானது. அக்டோபர், 1ல் சமாதானமான எம்.ஜி.ஆரை, காரில் ஏறும்போது இடைமறித்து நான் சொன்ன கருத்துக்கள் தான் அவரை மனமாற்றமடையச் செய்தன.


அதுவே, அ.தி.மு.க., உருவாகவும் காரணமாக அமைந்தது. அன்று எல்லோரையும் போல நானும் அமைதியாக இருந்திருந்தால், அ.தி.மு.க., அந்தத் தருணத்தில் உருவாகி இருக்காது என்பது மட்டும் உண்மை. அ.தி.மு.க., என்ற வலிமையான இயக்கம் தோன்றவும், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியவும் காரணமாக இருந்தவன் நான். அ.தி.மு.க., என்ற கட்சிக்கு விதை போட்ட தாம்பரம் மற்றும் அக்டோபர் 1ல் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற, அத்தனை எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகளையும் இந்நாளில் போற்றி வணங்கி மகிழ்கிறேன்.

- சைதை சா.துரைசாமி சென்னை பெருநகர முன்னாள் மேயர்வாசகர் கருத்து (1)

  • krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்

    நல்ல உள்ளங்கள் காட்டிய வழிமுறையில் ADMK 40 வருடத்தை கடந்து வந்தது. இனியும் அது வெற்றிகரமாக அமைய தன்னலமற்ற தொண்டர்கள் வரவேண்டும். பதவிக்கு ஏற்ற சம்பளம் மட்டும் வாங்கி ஆட்சி அமைத்தால் எந்த தீய சக்தி கட்சியும் தலை எடுக்க முடியாது. MGR நாமம் வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement