குண்டு துளைக்காத ஆடைகளை உருவாக்க கேவ்லர் (Kevlar) என்ற ஒரு வகை நார் பயன்படுகிறது. இதைவிட ஆறு மடங்கு கடினமான பட்டு நுால் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.
பல்வேறு பயன்பாடுகளை உடைய பட்டு நுால் பொதுவாக பட்டுப்புழுக்களின் கூடுகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஆனால், இவை மிகவும் மிருதுவானவை, எளிதில் கிழியக்கூடியவை. சிலந்திகளின் வலையில் உள்ள நுால் கடினமானது. ஆனால், அதை வணிக ரீதியாக பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்வது கடினம். இதனால் சீனாவின் டோங்குவா பல்கலை ஒரு புது வழியைக் கண்டுபிடித்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் அரேனியஸ் வென்ட்ரிகோசஸ் (Araneus ventricosus) என்னும் சிலந்தியின் உடலில் இருந்து Mi Sp என்னும் ஒரு புரதத்தைப் பிரித்து எடுத்து அதை பட்டுப்புழுவின் மரபணுவில் பொருத்தினர். இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட பின்பு, பட்டுப்புழுக்கள் உருவாக்கிய பட்டு, சிலந்தியின் வலை போல மிகவும் கடினத் தன்மையுடனும், உறுதியுடனும் இருந்தது.
இந்தப் புதிய வகை பட்டை, மனித உடலில் காயங்களைத் தைப்பதற்குப் பயன்படுத்த முடியும். இது மிகவும் உறுதியாக இருப்பதால், இவற்றால் உருவாக்கப்பட்ட உடைகள் அல்லது பொருட்கள், ராணுவம், வானுார்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்த முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!