பச்சோந்திகள் சூழலுக்கு ஏற்ப தங்களுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்று படித்திருப்போம். ஆனால், ஆப்ரிக்காவின் தென்மேற்குப் பாலைவனங்களில் வாழும் 'நமாகுவா' பச்சோந்தி, வெப்பநிலைக்கு ஏற்ப தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
பாலைவனங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது இவை சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பம் குறைந்து, குளிர் அதிகரிக்கும் போது அடர் பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். இதனால் பகலில் உடலைக் குளிர்ச்சியாகவும், இரவில் வெப்பமாகவும் வைத்துக் கொள்ள முடிகிறது.
இதை ஆய்வு செய்த சீனாவின் ஹார்பின் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள், இதே தொழில்நுட்பத்தை மனிதர்கள் வாழும் கட்டடங்களிலும் பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் டி.ஏ.ஆர்.சி.சி., (TARCC) எனும் ஒரு பூச்சை தயாரித்துள்ளனர். இதில் பாலிவினைலீடின் ப்ளோரைடு எனும் ஒரு வேதிப்பொருள் நிரம்பி இருக்கும். இதுதான் இந்த நிற மாற்றத்திற்குக் காரணமானது.
இந்தப் பூச்சை சோதிப்பதற்காக ஒரு கட்டடத்தின் மீது பூசி, அதை நான்கு பருவங்களும் தொடர்ந்து கண்காணித்தனர்.
வெப்பம் 30 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் போது இந்தப் பூச்சு சாம்பல் நிறத்திற்கு மாறி தன்மீது படும் 93 சதவீத சூரிய வெளிச்சத்தை பிரதிபலித்தது.
வெப்பம் 20 டிகிரி செல்ஷியஸ்க்கு குறைந்த போது பூச்சு அடர் பழுப்பு நிறத்திற்கு மாறி வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டது. இது விரைவில் வணிக பயன்பாட்டுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!