* வழக்கமாக சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கற்களை 1400 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திற்கு சூடாக்க வேண்டும். சூடாக்கும் போது அதிகளவு கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்குக் கெடுதி. அமெரிக்காவில் உள்ள 'சப்லைம் சிஸ்டம்ஸ்' என்னும் நிறுவனம் மின்னாற்பகுப்பு முறையைப் பயன்படுத்தி சுண்ணாம்பை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சுண்ணாம்பை சூடாக்காமல் அப்படியே சிமென்டில் கலந்து பயன்படுத்தலாம்.
* ஆஸ்பர்டேம் எனும் செயற்கை இனிப்பூட்டி பற்பசை, பாக்கெட் உணவுகள் உள்ளிட்ட 6,000க்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படுகிறது. அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலை நடத்திய ஆய்வில், இந்த இனிப்பூட்டியை உட்கொண்ட எலிகளின் சந்ததிகளுக்கு நினைவுக் குறைபாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களுக்கு இது ஆபத்து என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
* அமெரிக்காவின் கார்னகி மெலன் ரோபோடிக் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானி அகில் பத்மநாபா என்பவர் அரிப்பு நோயால் அவதிப்படுவோருக்காகப் புது கருவியை வடிவமைத்துள்ளார். இதை ஆள்காட்டி விரலில் மோதிரம் போல் அணிய முடியும். உடலில் எந்த இடத்தில், எத்தனை முறை, எந்த அளவு அரிப்பு உணர்வு ஏற்படுகிறது என்பதை இது பதிவு செய்யும்.
* பொதுவாக பெரும்பாலான பசைகள், நீருக்கடியில் ஒட்டும் தன்மையை இழக்கும். அமெரிக்காவின் இன்டியானா பல்கலை நீருக்கடியில் ஒட்டும் தன்மையை அதிகரித்துக் கொள்ளும் ஓர் அரிய பசையை உருவாக்கியுள்ளனர். இதை உருவாக்க ஓக் மரங்களின் டானிக் அமிலத்தையும், மக்காசோளத்தில் உள்ள ஜெய்ன் (Zein) எனும் புரதத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!