Load Image
Advertisement

ஆய்வுங்கற பேருல அதிகாரிங்க 'டகால்டி' கிடுக்கிப்பிடி போடுறாங்க ‛ ஹெல்த்' லேடி!

வெளியூர் சென்றிருந்த மித்ராவை, பீளமேடு விமான நிலையத்தில் வரவேற்றாள் சித்ரா. 'பயணம் எப்படி இருந்தது' என கேட்டுக் கொண்டே, 'லக்கேஜ்'களுடன், பார்க்கிங் ஏரியாவுக்கு இருவரும் நடந்து சென்றனர்.

''என்னக்கா சி.எம்., வந்திருந்தாராமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா... காங்கயத்துல நடந்த, கொங்கு மண்டல பூத் கமிட்டி கூட்டத்துக்காக வந்திருந்தாரு. பிளைட்டுல இருந்து இறங்குன ஸ்டாலின், கார்ல ஏறாம நடந்தே வந்தார்; தொண்டர்களை பார்த்ததும் கை குலுக்குனதால, அவங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்,''.

''அப்படியா...'' என, ஆச்சரியப்பட்டாள் மித்ரா. ஸ்கூட்டரை ஓரங்கட்டி, பேக்கரிக்குள் நுழைந்தனர்.

சித்ரா, ''பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், நம்மூர்ல தான், நடைபயணம் போயிட்டு இருக்காரு. மக்கள் மத்தியில, பா.ஜ.,வுக்கு இவ்ளோ வரவேற்பு இருக்குறது இப்பதான் வெளியே தெரியுது. அவர் பேச்சை பலரும் ஆர்வமா கேட்குறாங்க. ஜன., 11ல் நடைபயணத்தை நிறைவு செய்யப் போறாராம். அப்போ, தமிழக அரசியல்ல எழுச்சி, புரட்சி ஏற்படும்னு பேசியிருக்காரு,'' என்றாள்.

''அக்கா... அதெல்லாம் இருக்கட்டும். 'மாஜி' தலைமையில் டில்லிக்கு போனாங்களே; என்னாச்சு. திரும்பி வந்தப்போ ரொம்ப 'டல்'லா இருந்ததா கேள்விப்பட்டேன்,'' என, நோண்டினாள் மித்ரா.

''ஆமா, மித்து! கொச்சி வழியா டில்லி போயிருக்காங்க. பா.ஜ., தலைவரை மாத்தச் சொல்றதுக்கு இவுங்களுக்கு 'ரைட்சே' இல்லாததுனால, 'கப்-சிப்'ன்னு இருக்கச் சொல்லிட்டாங்களாம். கூட்டணி இல்லைன்னு பகிரங்கமா அறிவிச்சதுல, டில்லிக்கு ஏகப்பட்ட கோபமாம். அதனால, 'அப்செட்'டுல திரும்பி வந்திருக்காங்க,''

''ஆமாப்பா... ஒரு விஷயத்தை சொல்றேன் கேளு! கூட்டணி இல்லைன்னு சொன்னதுக்கு மறுநாளே... ஒசூர் ரோட்டுல இருக்கற கட்சி ஆபீசுல, பூத் கமிட்டி கூட்டம் நடத்துனாங்க.

'மாஜி' தலைமையில தான் நடந்துச்சு. முக்கியமானவங்க மட்டும் பேசுனாங்க. எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துக்கிட்டாங்க,''

''மேடைக்கு பின்னாடி இருந்த பிளக்ஸ் பேனர்ல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்னு அச்சடிக்காம... 'பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்'னு மட்டும் எழுதியிருந்தாங்க...

இது... கட்சி நிர்வாகிகள் பலரையும் யோசிக்க வச்சது. இப்போ, கொச்சி வழியா டில்லி போயிட்டு வந்திருக்காங்க... எலக்சனுக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கலாம்னு பேசிக்கிறாங்க,''

இரண்டு காபி ஆர்டர் கொடுத்த மித்ரா, ''தி.மு.க., கூட்டணியில நம்மூர்ல கமல் போட்டியிடப் போறதா சொல்றாங்களே...'' என கேட்டாள்.

''அதுவா... தி.மு.க., கூட்டணியில் கமல் கட்சி இணையறது, 90 'பர்சன்டேஜ்' உறுதியாம்; கோவையை கமலுக்கு ஒதுக்குனா, திருப்பூரை கம்யூ.,க்கு கொடுப்பாங்களாம். பொள்ளாச்சியில் தி.மு.க.,வும், நீலகிரியில காங்கிரசும் போட்டியிடுறதுக்கு, 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''

''கோவையில் 'மேடம்' களமிறங்குவாங்கன்னு சொல்றாங்க. நீலகிரியில மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிடப் போறதா பேசிக்கிறாங்க,''

''கோவையில 'விக்ரம்' கூட நேருக்கு நேர் மறுபடியும் போட்டி போட்டா, தேர்தல் களம் ரண களமா மாறுமே,'' என்றவாறு, காபியை உறிஞ்சினாள் மித்ரா.

''ஆமா, மித்து! நீ சொல்றது உண்மைதான்! அவுங்க ரெண்டு பேரும் போட்டியிட்டா, நாடே நம்மூரை திரும்பிப் பார்க்கும்,'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சி அமைச்சர் ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம், 'கரூர் கேங்க்' என்ன செய்யுது,'' என கேட்டாள்.

''அதுவா... மறுபடியும் 'இல்லீகல் பார்' செயல்பட ஆரம்பிச்சிடுச்சு; 'பார்' நடத்துறதுல முக்கியமான ஆறு பேரை, ஈரோட்டுக்கு வரவழைச்சு 'மாமூல் ரேட்' பேசியிருக்காங்க. ரூரல் ஏரியாவுக்கு ஒரு பாருக்கு மாசத்துக்கு ஒன்றரை லட்சம்; சிட்டிக்குள்ள ரெண்டு லட்சம் கொடுக்கணும்னு வாய்மொழியா உத்தரவு போட்டிருக்காங்க. காந்திபுரத்துல ஓட்டல் நடத்துறவர் தலைமையில் பொறுப்பு ஒப்படைச்சிருக்காங்களாம்,''

''இதை கேள்விப்பட்ட கரூர் பொறுப்பாளர், சாயிபாபா காலனியில இருக்கற தன்னோட வீட்டுக்கு 'பார்' உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரு.

'அண்ணன், சீக்கிரமாவே வந்திருவாரு; என்கிட்டயே 'பார் மாமூல்' கொடுத்துட்டு, 'இல்லீகலா' நடத்திக்கோங்க. இப்ப, பொறுப்புல இருக்கிறவங்கள்கிட்ட நானே 'டீல்' செஞ்சுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. கரன்சியை யார்கிட்ட கொடுக்குறதுன்னு தெரியாம, 'பார்' நடத்துறவங்க, மண்டைய பிய்ச்சுக்கிட்டு இருக்காங்க,''

காபி குடித்து விட்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்களை, ஆபீசர்ஸ் மதிக்கறதே இல்லையாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வடக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆளுங்கட்சி பூத் கமிட்டி கூட்டம் நடந்திருக்கு; அதுல கலந்துக்கிட்ட நிர்வாகிகள் பலரும் பொங்கிட்டாங்களாம். கவர்மென்ட் ஆபீசுக்கு போனா, ஆபீசர்ஸ் எங்களை மதிக்கறதில்லை; எந்த வேலையும் செஞ்சு தர்றதில்லைன்னு புலம்பி இருக்காங்க. அவுங்களை, சமாதானம் செஞ்சிருக்காரு,''

ஓட்டல் ஒன்றில் 'ஷவர்மா' இறைச்சி தொங்கிக் கொண்டிருந்ததை கவனித்த சித்ரா, ''மித்து, நம்மூரு உணவு பாதுகாப்புத் துறையினர் சுத்த 'வேஸ்ட்'; கலெக்டர் சொன்னதுக்காக... சும்மா... சில ஹோட்டல்களுக்கு போயி, இறைச்சி பறிமுதல் செஞ்சுட்டு, பெயரளவுக்கு 'கணக்கு' காண்பிச்சிருக்காங்க,''

''உக்கடம் பக்கத்துல இருக்கற ஏரியாவுக்கு, ஆய்வுக்கு போறதுல சிக்கல் இருக்குன்னு, உணவு பாதுகாப்பு பிரிவு ஆபீசர் ஒருத்தரு, வெளிப்படையா பேட்டி கொடுத்த வீடியோ, சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு இருக்கு.

அதுக்குப்பிறகு கூட, எங்கயும் 'சீல்' வைக்கலை. ஓட்டல்காரங்களும், உணவு பாதுகாப்பு பிரிவினரும் ரொம்பவும் 'இணக்கமா' இருக்காங்களாம்.

இதே மாதிரி, மேட்டுப்பாளையம், காரமடை ஏரியாவுலயும் ஆய்வுங்கற பேர்ல, சில கடைகளுக்கு போயிட்டு, 'கவர்ன்மென்ட்'டை ஏமாத்திட்டாங்களாம்,''

''ஹெல்த் டிபார்ட்மென்ட்டுல இருக்குற, லேடி ஆபீசர் மேலயும் ஏகப்பட்ட புகார் வருதே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.

''ஆமாப்பா, மூன்றெழுத்து ஆபீசர் மேல, ஹெல்த் டிபார்ட்மென்ட் ஸ்டாப்ஸ், கவர்மென்ட் ஹாஸ்பிடல் சீனியர் டாக்டர்ஸ் பலரும், கம்ப்ளைன்ட்டுகளை அடுக்குறாங்க. என்னான்னு விசாரிச்சேன்.

பணி நிமித்தம் காரணமா, வெளியூர்ல குடும்பத்தை தங்க வச்சுட்டு, நம்மூர்ல வேலை பார்க்குற அலுவலர்கள், வாராவாரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஊருக்கு போவாங்களாம்.

ஏதாச்சும் காரணம் சொல்லி, அவுங்களை ஊருக்கு போக விடாம, சனிக்கிழமை சாயங்காலம் வரைக்கும் வேலை வாங்குறாராம்.

சனிக்கிழமை நைட் ஊருக்கு போயிட்டு, ஞாயித்துக்கிழமை நைட் மறுபடியும் கோவைக்கு திரும்ப வேண்டியிருக்குதாம். என்ன பொழப்புடா இதுன்னு, ஹெல்த் டிபார்ட்மென்ட்டுக்காரங்க கண்ணீர் வடிக்கிறாங்க... '' என்றபடி, ஸ்கூட்டரை ரேஸ்கோர்ஸ் செல்ல திருப்பினாள் சித்ரா.

பேக்கரி முன் கல்லுாரி மாணவர்கள் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை பார்த்த மித்ரா, ''அக்கா, போத்தனுார் சீனிவாசபுரம் ஏரியவுல, 'கஞ்சா சேல்ஸ்' பட்டையை கிளப்புதாம். சிலபேரு, புரோக்கரா செயல்படுறாங்களாம். எங்க பார்த்தாலும், கஞ்சா புகையா இருக்குதாம். சீனிவாசபுரம் சுற்றுவட்டார ஏரியாவுல போதை ஆசாமிகளின் மோதலுக்கு அளவேயில்லையாம். போலீஸ் ஸ்ட்ரிக்டா ஆக்ஷன் எடுத்தா தேவலை. இல்லாட்டி மர்டர் வரை போயிடும் அபாயமிருக்காம்...'

''போதைப் புழக்கம் தடுக்க பல்வேறு 'ரூட்டுல' புதுப்புது தலைப்புல, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திட்டம் அறிவிக்கிறாரு. ஆனா, கஞ்சா சேல்ஸ்ச மட்டும் தடுக்க முடியல,'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் குவார்ட்டர்ஸ் முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

''மித்து, வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் பலரும் பீதியில் இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''ஏன்க்கா... இப்பத்தானே... 13 பேரை வெவ்வேறு ஊருக்கு துாக்கி அடிச்சாங்க... மறுபடியும் ஏதாச்சும் வில்லங்கமா நடந்திருக்கா...''

''வாரியத்தை சேர்ந்த நிர்வாக அதிகாரி ஒருத்தரு, ஆய்வு செஞ்சிருக்காரு. வீடு அலாட்மென்ட்டுல குளறுபடி; தப்புத்தப்பா கணக்கீடு செஞ்சது சம்பந்தமா, ஆய்வு செஞ்சிட்டு போயிருக்காராம். அடுத்து என்ன நடக்குமோன்னு, பயத்துல இருக்காங்க,''

''ஆனா... சிங்காநல்லுார் ஹவுசிங் போர்டு வீடு வாங்குனவங்க, ரூ.46 லட்சம் சொத்து வரி செலுத்தலையாமே...''

''நானும் கேள்விப்பட்டேன். வழக்கமா, டேக்ஸ் கட்டலைன்னா வாட்டர் கனெக்சன் கட் பண்ணுற கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், ஹவுசிங் போர்டு குவார்ட்டர்ஸ்க்குள்ள போறதுக்கு யோசிக்கிறாங்க,'' என்றபடி, 'லக்கேஜ்'களை எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு படியேறினாள் மித்ரா.

அவளை பின்தொடர்ந்து சென்றாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement