தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வேலைவாய்ப்பு துறையால், 100 சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். அதன் வழியாக, இந்த ஆண்டு இறுதிக்குள், ௨ லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்ற இலக்கை எட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வாங்கி தர, அரசு ஏன் இடையில பாலமாக செயல்படணும்... உங்க கட்சியின் சட்டசபை தேர்தல் வாக்குறுதியில, '௩.௫௦ லட்சம் அரசு பணியிடங்களில் தகுதி யான நபர்கள் நியமிக்கப்படுவர்' என குறிப்பிட்டதை மறந்தே போயிட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
மத்திய நிதித் துறை செயலர், டி.வி.சோமநாதன்: பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2047ல், நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற, பல்வேறு இலக்குகளை பிரதமர் மோடி நிர்ணயித்து, அதற்கு, 'அமுத காலம்' என்று பெயரிட்டு உள்ளார். இப்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உயர்ந்து உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்; அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
டவுட் தனபாலு: ஆனா, அப்படி எந்த அமுத, வசந்த காலமும் இந்தியாவுக்கு வந்துடக் கூடாதுன்னு தானே, இங்க இருக்கிற சில எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன... அதே நேரம், மக்கள் தெளிவாக இருப்பதால, எதிர்க்கட்சிகளின் கனவு, கானல் நீராகவே முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ.,வைச் சேர்ந்த, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்: நம் அண்டை நாடான சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து, விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயத்தை விவாதிப்பதற்கான துணிச்சலும், தைரியமும் உள்ளது; இது குறித்து விவாதிக்க தயார்.
டவுட் தனபாலு: பார்லிமென்டுக்கு வெளியில தான், விவாதிக்க தைரியம் இருக்கான்னு கேட்பாங்க... உள்ளே வந்ததும், ஏதாவது நொண்டி சாக்குகளை சொல்லி, வெளிநடப்பு செய்வாங்க அல்லது சபையை நடத்த விடாம அமளியில ஈடுபடுவாங்க... ஒரு நாளும் ஆரோக்கியமான விவாதத்துக்கு வரவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
சத்திர சாப்பாட்டுக்கு சிபார்சுகடிதம் எதற்கு ? தனியார் வேலைக்கு, விளம்பரம் பார்த்து தகுதி இருந்தால் சேர்ந்துவிட்டுப் போகிறார்கள் .