ஏழை குடும்ப பெண்கள் அதிகம் நுழையாத, 'அபார்ட்மென்ட்'டுகளில், கயிறு கட்டிய பலகையில் தொங்கியபடி, 'பெயின்ட்' அடிக்கும் தொழிலில் மாதம், 25,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் மரியா, மரகதம் மற்றும் கோமதி, தங்கள் அனுபவங்களை கூறுகின்றனர்:
மரியா: சென்னையை சேர்ந்த நான், எட்டாவது படிச்சிருக்கேன். வீட்டுக்காரர் டெய்லர்; ராப்பகலா தச்சுட்டு இருப்பாரு. அவரோட சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே சரியா இருந்துச்சு.
வேலைக்குப் போகணும்னு ஆசை வந்துச்சு. ஆனா, எட்டாவது படிச்ச நமக்கு என்ன வேலை கிடைக்கும்னு தயங்கினேன். நான், எங்க ஏரியாவுல இருக்கிற மகளிர் சுய உதவிக் குழுவுல உறுப்பினரா இருந்தேன்.
அந்தக் குழு வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி பத்தின தகவல்கள் வந்துட்டே இருக்கும். அப்படித் தான், 'நிப்பான்' பெயின்ட் நிறுவனத்துலேருந்து, 'என் சக்தி திட்டம் வாயிலாக, பெயின்டர்களுக்கான பயிற்சி கொடுத்து, அவங்களே வேலைவாய்ப்பும் தர்றாங்க'ன்னு ஒரு, 'மெசேஜ்' வந்துச்சு.
அதை பார்த்ததும், பயிற்சிக்கு விண்ணப்பித்து, அதில் சேர்ந்தேன். 'ப்ரீ டிரெயினிங்' முடிச்சதும் அவங்களே, 'கான்ட்ராக்ட்' எடுத்துக் கொடுக்கறதா சொன்னாங்க.
என் வீட்டுக்காரரை, ரெண்டு நாள் தொடர்ந்து வற்புறுத்திய பின் சம்மதிச்சாரு. பட்டி பார்க்கிறதுல இருந்து, பெயின்ட் அடிக்கிறது வரை எல்லாத்தையும் முறையா கற்று, வேலைக்கும் போக ஆரம்பித்தேன்.
'பெயின்டர் வேலைக்குப் போறியா'ன்னு ஆரம்பத்தில் கிண்டல் பண்ணாங்க. 'கிண்டல் பண்ணா பண்ணிட்டுப் போங்க... நான், என் குடும்பத்துக்காக உழைக்கிறேன்'னு ஓட ஆரம்பித்தேன். முதலில், 300 ரூபாய் சம்பளத்துல வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.
இப்போ நானே கான்ட்ராக்ட் எடுத்து பண்ணிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு, 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் பிள்ளைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன். யார், நம்மள பத்தி என்ன பேசுவாங்களோன்னு ஏன் யோசிக்கணும்... பிடிச்சதைப் பண்ணிட்டுப் போயிட்டே இருப்போம்.
கோமதி: சென்னை வியாசர்பாடியில இருக்குற நான், பத்தாவது படிச்சிருக்கேன். என் வீட்டுக்காரர் மெக்கானிக்.
நானும், மகளிர் சுயஉதவிக்குழு மூலமா தான் பெயின்டர் வேலைக்கு வந்தேன்.
நிப்பான் பெயின்ட்ல, 12 நாள் டிரெய்னிங் எடுத்தேன். அப்புறம் வேலைக்கு வர ஆரம்பிச்சிட்டேன். முதல்ல, சுவர்ல, கட்டடத்துல ஏற பயமா இருந்துச்சு. அப்புறம் பழகிருச்சு. இப்போ மாசம், 20,000க்கு மேல சம்பாதிக்கிறேன்.
மரகதம்: நானும் சென்னை பொண்ணு தான். என் வீட்டுக்காரர் கடையில வேலை பார்க்கிறார். நான், பெயின்டர் வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆகுது.
சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வெளியிடங்களுக்குப் போகும்போது எனக்கே ரொம்ப நம்பிக்கையா இருக்கு. பொண்ணுங்களுக்கு வருமானம் ரொம்ப முக்கியம்!
தன்னம்பிக்கை துளிர் விட்டு பிரகாசிக்கிறது.