Load Image
Advertisement

ஆ.ராசாவுக்கு சில கேள்விகள்!

ஆ.ராசாவுக்கு சில கேள்விகள்!ப. பழனியாபிள்ளை, நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து மதம் குறித்து, வன்மமாக கேள்வி கேட்கும், தி.மு.க., - எம்.பி., ஆண்டிமுத்து ராசாவே... உங்களுக்கு சில கேள்விகள்...

 உங்கள் கட்சித் தலைவரின் குடும்பம், எந்த மத கோவிலுக்கு போகிறது என கேட்டீர்களா ராசாவே...?

 உங்கள் தேர்தல் வேட்பு மனுவில், மதம் என்பதில் எதை குறிப்பிட்டீர்கள் ராசாவே...?

 சமூக நீதி பேசும் உங்கள் தி.மு.க.,வில், மாவட்டச் செயலர்களில் எத்தனை பேர் பட்டியல் இனத்தவர் என சொல்ல முடியுமா ராசாவே...?

 பட்டியலின ஊராட்சி தலைவர் மேலவளவு முருகேசனை, கண்டந் துண்டமாக வெட்டிக் கொன்றவர்கள் யார்? முழு தண்டனை காலம் முடிவதற்குள், அந்த கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டது யார் ஆட்சியில் ராசாவே...?

 முதுகுளத்துாரில், பட்டியல் இன அதிகாரியை ஜாதியை சொல்லி திட்டிய அமைச்சரை கேள்வி கேட்டீர்களா ராசாவே...?

 ஊராட்சி தலைவரை, தரையில் அமர வைத்து அவமதித்தது எந்த கட்சி என கேட்டீர்களா ராசாவே...?

 சமூக நீதி பேசும் உங்கள் கட்சியில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளை பட்டியல் இனத்தவருக்கு ஏன் வழங்கவில்லை என தலைமையிடம் கேட்டீர்களா ராசாவே...?

'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா' என, எகத்தாளம் பேசிய தயாநிதியிடம் விளக்கம் கேட்டீர்களா ராசாவே...?

 இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களான உ.பி., பீஹாரில் கூட பட்டியல் இனத்தவர்கள் முதல்வராகி உள்ளனரே. ஆனால், ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில், இதுவரை ஏன் பட்டியல் இனத்தவரை முதல்வர் பதவிக்கு முன்மொழியவில்லை எனக் கேட்டீர்களா ராசாவே...?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் நியாயமான பதில் கிடைத்தால், அதன்பின் ஹிந்து மதத்தை விமர்சிக்க வாருங்கள். தாரளமாக வரவேற்கிறோம்.

ரூ.9,000 கோடி பின்னணியில் யார்?க.சோணையா, திருமங்கலம், மதுரைமாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும் அவ்வப்போது நடக்கும் பண மோசடிகளுக்கு, சில வங்கி நிர்வாகங்களும் உடந்தையாக இருக்கின்றன என்பதை, தமிழத்தில் ஒரு சாமானியனின் வங்கிக் கணக்கில் வரவான, 9,000 கோடி ரூபாய் பரிவர்த்தனை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

சென்னையில் வாடகை கார் ஓட்டுனராக உள்ள, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில், 9,000 கோடி ரூபாய், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின், துாத்துக்குடி தலைமையகத்தில் இருந்து டிபாசிட் ஆனதாக, குறுந்தகவல் வந்துள்ளது.

முதலில் அதிர்ந்து போன ராஜ்குமார், அதை உறுதி செய்ய, 'போன் பே' வாயிலாக தன் நண்பருக்கு 21,000 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பிறகே, வங்கிக்கு விபரம் தெரிந்து, அவரது கணக்கில் இருந்த பணம் திரும்ப பெறப்பட்டிருக்கிறது.

மேலும், 'இதை கண்டுகொள்ள வேண்டாம்... நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றிய, 21,000 ரூபாயை தரவும் வேண்டாம்' எனவும், அவரிடம் சமரசம் பேசியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அப்படி என்றால், இதில் மிகப்பெரிய ஊழல் அல்லது மோசடி இருப்பதாகவே யூகிக்க முடிகிறது. 9,000 ரூபாய் கடன் தவணை கட்ட தவறிய ஒரு விவசாயியின் டிராக்டரை ஜப்தி செய்யும் வங்கி நிர்வாகம், அனாமத்தாக போன, 21,000 ரூபாயை எப்படி விட்டுக் கொடுக்கும் என்ற கேள்வி எழுகிறது?

அதேநேரம், தனி நபர் ஆண்டு வருமானம், 5 லட்சத்தை தாண்டுகிறதா என, கண்கொத்தி பாம்பாய் கண்காணிக்கும் வருமான வரித்துறை, இப்படியான வங்கிகளின் போலி பணப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும்.

ஒருவேளை இச்சம்பவம் சமீபத்தில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது. ஏனெனில், இதுபோன்ற பெரிய அளவிலான கருப்புப் பண பரிமாற்றங்கள், இதற்கு முன் கன்டெய்னர் லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் வாயிலாகவும் நடந்திருக்கின்றன; இப்போது, 'ஆன்லைன்' பரிவர்த்தனைகளில் நடக்கின்றன.

எது எப்படியோ, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதில் இப்படியான மோசடி பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசின் உளவுத்துறை, ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் தலையிட்டு, இதன் பின்னணியை தீர விசாரிக்க வேண்டும்.

இன்னுமா வைகோவை ஊரு நம்புது?சோ.பிரதீப் பாப்புராஜ் வெனிஸ், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ --மெயில்' கடிதம்: மதுரையில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில் பேசிய ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தன் மகன் துரை வையாபுரி பதவிக்காக கட்சியில் இல்லை என பேசியுள்ளார். 'கேட்பவன் கேனயனாக இருந்தால், கேப்பையில் நெய் வடிகிறது' என்ற சொலவடைக்கு இந்தப் பேச்சு சிறந்த உதாரணமாகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து, குமரி துவங்கி சென்னை வரை நடைபயணம் சென்ற வைகோ, பின் அவரோடு கைகோர்த்துக் கொண்டார். தி.மு.க.,வையும், அதன் தலைமையையும் உலகத்தில் உள்ள அனைத்து கேவலமான வார்த்தைகளாலும் வசைபாடி, இப்போது அதன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சீமானை பலமுறை விமர்சித்து, தற்போது அமைதியாகி விட்டார்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக, 10 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருந்த தே.மு.தி.க., வையும், அதன் தலைவர் விஜயகாந்தையும், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் வீதிக்கு இழுத்து விட்டு, தற்போது வெறும் 0.5 சதவீத ஓட்டு வங்கியாக மாற்றி, தே.மு.தி.க.,வின் கதையை முடித்த பெருமை வைகோவையே சாரும்.

'ஸ்டாலினை வாரிசாக களம் இறக்க பார்க்கிறார் கருணாநிதி' என்ற முக்கிய குற்றச்சாட்டை வைத்து புதிய கட்சி துவங்கிய வைகோ, இப்போது தன் மகனுக்கே முதன்மை பதவி கொடுத்து வைத்திருப்பதை, வாரிசு அரசியல் இல்லை என்று சொலவதை நம்புவதற்கு மக்கள் ஏமாளிகள் இல்லை.

இப்படியான சூழலில், தன் பேச்சையும் மக்கள் செவி மடுக்கின்றனர் என்று வைகோ நம்புவது அறியாமையாகும். தி.மு.க.,விடம் இருந்து வைகோ எதிர்பார்ப்பது, ஒன்றிரண்டு சீட்கள் மட்டுமே. அதில் ஒன்றை, தன் மகன் துரைக்கும், மற்றொன்றை வசதி வாய்ப்புள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கும் தாரை வார்ப்பது தான், தற்போது வைகோவின் ஒரே லட்சியமாகும்.

'இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு' என்ற வடிவேலின் காமெடி டயலாக் போலவே, இருக்கும் சொற்ப தொண்டர்களை வைத்து, வைகோ வண்டி ஒட்டிக் கொண்டு இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி தலையிடுமா?எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரில் ஏற்கனவே கார்ப்பரேஷன் வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வந்த வங்கியை, தற்போது யூனியன் வங்கியுடன் இணைத்து விட்டனர். நான் சமீபத்தில் காலை, 10-:05க்கு இந்த வங்கிக்கு சென்றேன்.

ஐந்து நிமிடங்கள், வங்கி ஊழியர்கள் அனைவருமே தங்கள் கண்களை மூடி மவுனமாக எழுந்து நின்றனர். தமிழ் அல்லாத வேறு மொழியில் பக்தி பாடல் ஒன்று ஒலித்தது; பாடல் முடிந்தவுடன் தான், அனைவரும் அமர்ந்தனர்.

அங்கு பணியில் இருந்த, 10 ஊழியர்களிடமும், 'இது என்ன பாடல், ஏன் எழுந்து நின்றீர்கள்' எனக் கேட்டேன். யாருக்கும் அதன் விளக்கம் தெரியவில்லை. அட, அது என்ன மொழி என்றே அவர்களுக்கு புரியவும் இல்லை.

'வங்கியின் மேலாளர் கூறியதை நடைமுறைப்படுத்துகிறோம்' என்று மட்டும் கூறினர். வங்கி மேலாளரின் அறிவுறுத்தலின்படி, ஐந்து நிமிடங்கள் பணி நேரத்தை வீணடித்துள்ளனர் என்பது தெரிகிறது.

அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், 'இது ஹிந்தி பாடல். சிவன் கோவில்களில் பாடப்படும் ஸ்லோகம்' என்று கூறினார். இதற்கு பதிலாக, நம் தேசிய கீதத்தை பாடி, அதற்கு மரியாதை செலுத்தியிருக்கலாம் அல்லது ஊழியர்கள் அனைவரும் அறிந்த அழகு தமிழில் பாடியிருக்கலாம்.

இதுபோன்று ஹிந்தி தெரியாத மாநிலங்களில் உள்ள பல ஆயிரம் ஊழியர்களின் ஐந்து நிமிடங்கள் என்ற வகையில், பல மணி நேர மனித உழைப்பு வீணடிக்கப்படுகிறது.

மேலும், நம் தேசம் மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்து ஜாதி, அனைத்து மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். மேலும், அனைத்து வங்கிகளிலும், அனைத்து மதத்தினரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

வங்கியில் இருக்கும் அனைத்தும், மத்திய அரசு பணமல்ல; அனைத்து மதத்தினரின் மக்கள் பணம். இந்த பணத்தில் மட்டுமே ஊழியர்கள் மாத ஊதியம் பெறுகின்றனர். எனவே, அனைத்து வங்கிகளும் அனைத்து ஜாதி, மதத்தினரின் ஒன்றிணைப்பால் மட்டுமே நடக்கின்றன.

அனைத்து ஜாதி, மதத்தினரும் வங்கியின் ஊழியர்களாக உள்ளனர். இந்தச் சூழலில், ஹிந்தி தெரியாத, அந்த மொழியை விரும்பாத வங்கி ஊழியர்களை, அந்த பாடலை நின்று கேட்டு விட்டு தான் அமர வேண்டும் என கட்டாயப்படுத்துவது, அந்த வங்கி மேலாளரின் சர்வாதிகாரப் போக்கு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, இந்த பிரச்னையில், ரிசர்வ் வங்கி உடனே தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.

கனிமொழியின் கருத்து வரவேற்கத்தக்கது!என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜெயலலிதா பலம் வாய்ந்த தலைவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அவர் தைரியம் மிக்க தலைவர் என்பதையும் நான் ஏற்கிறேன்' என்று, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பார்லிமென்டில் பாராட்டியுள்ளார்.

இந்த அம்மையார் சொன்னாலும், சொல்லா விட்டாலும், ஜெயலலிதா ஒரு துணிச்சல் மிக்க, பலம் வாய்ந்த தலைவர். சாகும் வரை, கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீராங்கனை.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள், தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் ஆட்சியை பிடித்தனர். ஆனால், 2014 லோக்சபா தேர்தல்; 2016 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்தார் ஜெயலலிதா.

அதிலும், தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைத்த வரலாற்றை, 1984க்கு பின், 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா சாதித்து காட்டினார். இந்தியாவிலேயே ஒரு சினிமா நடிகை, அரசியல்வாதியாகி, ஆட்சியை பிடித்து முதல்வரான பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அவர் எதிர்க்கட்சியினருக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இல்லை...

வேலை நிறுத்தம் செய்த, 2 லட்சம் அரசு ஊழியர்களை மொத்தமாக, 'டிஸ்மிஸ்' செய்து கதற விட்ட இரும்புப் பெண்மணி. தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த சென்னையை, அ.தி.மு.க., கோட்டையாக மாற்றிய வீரமங்கையும் அவர் தான்.

மாபெரும் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரால் கூட, சென்னையில் தி.மு.க.,வை தோற்கடிக்க முடியவில்லை என்பதே வரலாறு.

அகில இந்திய அரசியலில் இந்திராவும், தமிழக அரசியலில் ஜெயலலிதாவும் இரும்புப் பெண்மணிகளாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவை துணிச்சல் மிக்க, பலம் வாய்ந்த தலைவர் என்று பாராட்டிய கனிமொழியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியதே!

மேட்டூர் அணை துார்வாருவது அவசியம்!பொ.ருக்மணி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மேட்டூர் அணையில், 93 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையை துார் வாரினால், கொள்ளளவை மேலும், 30 டி.எம்.சி.,யாக உயர்த்தலாம். இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது...

'அணையின் கொள்ளளவு அதிகரிப்பதால் கிடைக்கும் பயன்களுடன் ஒப்பிடுகையில், இந்த செலவு மிகவும் குறைவு தான். எனவே, அரசு இத்திட்டத்தை பரிசீலித்து, நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்க முன்வர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை மிகவும் நியாயமானதே.

பருவமழை நன்றாக பொழியும் ஆண்டுகளில், நீர் நிலைகள் நிறைந்த பின், ஏகப்பட்ட மழைநீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. கடந்தாண்டு, 400 டி.எம்.சி., வரை மழை நீர், வீணாக கடலுக்கு சென்றது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை இதுவரை சரியாக பொழியாததால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பயிர்கள் கருகுவதுடன், வயல்கள் பாளம் பாளமாக வெடிக்க ஆரம்பித்துள்ளன.

எனவே தான், கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் என்று தண்ணீர் கேட்டு பல்வேறு இடங்களிலும், மன்றாட வேண்டிய அவலம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. எனவே தான், நீர் மேலாண்மைக்காக, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அதன் பின் வந்த எந்த அரசும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுடன், இருந்த நீர்நிலைகளை பேணிக் காக்கவும் மறந்து விட்டனர்.

உதாரணத்துக்கு சொல்வதென்றால், 50 ஆண்டுகளில் சென்னையில் இருந்த குளங்கள், ஏரிகளை மூடிவிட்டு கான்கிரீட் கட்டடங்களாக கட்டி விட்டனர். அதன் பலனாக, மழைநீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இப்போது, கடல் நீரை குடிநீராக்க கோடி கோடியாக செலவிடுகின்றனர். தற்போது, 4,400 கோடி ரூபாய் செலவில், புதிதாக கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க போகின்றனராம்.

இந்த செலவுடன் ஒப்பிடுகையில், பலன் அதிகம் என்பதால், மேட்டூர் அணையை துார் வார, 3,000 கோடி ரூபாய் செலவிட்டால் கூட, அது எந்த வகையிலும் நஷ்டமே கிடையாது.வாசகர் கருத்து (7)

 • Narayanasamy - Chennai,இந்தியா

  ஏனென்றால் அங்கும் பல மதத்தினரின் பணத்தில் தான் அங்கு வேலை செய்யும் நபர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். மேலும் அரசு கிருத்துவர்களுக்கு தரும் புனித பயண சலுகை மானியம் யாருடைய பணம் என்றும் தெளிவுபடுத்துங்கள். அது இந்து கோவில் மூலம் பெறப்பட்டால் அதை முதலில் நிறுத்த சொல்லி வழக்கு போடுங்கள்.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  ஆண்டிப்பட்டிக்கு கேட்ட கேள்வி எல்லாம் தெரிந்திருக்கும். இருந்தாலும் பிழைப்பு நடக்கணும். ரொம்ப கேள்வி கேட்டு துளைத்தெடுத்தால் ஓரம் ஓரம் போ..கதை தான். அப்புறம் RS பாரதி மாதிரி புலம்ப வேண்டியது தான்.

 • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

  சிவகாசி செபாஸ்டியன் ஹிந்துஸ்தானில் இருக்கிறார்யென்பதை மறந்து விட்டார் போல. மதசார்பற்ற என்ற வார்த்தை இந்திரா கான் போலி காந்தியால் நமது அரசியல் சாசனத்தில் இடை சொருகப்பட்டது. ஒரு தலைமுறைக்கு முன்பு மதம் மரிய செபாஸ்டியனின் அந்நிய மத பற்று வியக்க வைக்கிறது. இந்து மத வழக்கத்தை கேள்வி கேட்கும் இவர், தினமும் ஐந்து முறை பாலைவன மதத்தின் கொடூர வாக்கியங்கள் புரியாத மொழியில் நமது தூக்கத்தை கெடுகிறதே அதை பற்றி கேள்வி கேட்ட்க மாட்டார் ஏனென்றால் அவர் அதன் பிறகு உயிருடன் இருப்பாரா என்ற பயம். மதத்தின் அடிப்படியில் நாடு பிரிக்க பட்டபோது, மோகன்தாஸ் காந்தி செய்த தவறால் இன்று இது போன்ற சொத்துக்கு மதம் மாறியவர்களின் இது போன்ற பேச்சை கேட்க வேண்டி உள்ளது.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  எந்த கணக்குக்கு அந்தப் பணம் உண்மையில் சேரவேண்டும் என்ற ரிஷிமூலம் தோண்டப்பட்டால் பெரிய தலைகள் எத்தனை மாட்டுமோ ? திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல அந்த ட்ரைவரை நயந்து கொள்ளும் நிலை

 • Guna - Chennai,இந்தியா

  எம்ஜியார் இறுதிவரை சமஉ மற்றும் முதல்வர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement