மாணவர்களை வைத்து, பள்ளிக்கு என தனியாக, 'டெலஸ்கோப்' வடிவமைத்துள்ள, கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், துடியலுார் நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை சித்ரா:
'இஸ்ரோ'வின் தலைமைப் பொறுப்புகளை அப்துல் கலாம், சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டதைப் பார்த்தோம். இன்னும் பல விஞ்ஞானிகளை, அரசுப் பள்ளிகளில் இருந்து நாம் அனுப்பி வைக்க வேண்டும்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற எனக்கு, ஆசிரியப் பணியில் இது 18வது ஆண்டு.
என் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 'ஹைலைட்'டாக, அவர்களை பள்ளிக்கு என ஒரு பிரத்யேக தொலைநோக்கியையே வடிவமைக்க வைத்தேன்.
அடுத்த நகர்வாக, ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளின் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் பள்ளிகளுக்கும் பிரத்யேக தொலைநோக்கியை வடிவமைக்க வைத்துள்ளேன்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எங்கள் பள்ளியில், 'நம்ம டெலஸ்கோப்' என்ற தொலைநோக்கியை உருவாக்கும் ஒர்க் ஷாப்பை நடத்தினோம். இந்தப் பயிற்சிப் பட்டறையில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் விளக்கங்கள், கோட்பாடுகளை எல்லாம் செயல்முறைக் கல்வியில் தெளிவாகப் புரிந்து கொண்டு, தொலைநோக்கி செயல்படும் முறை, உதிரி பாகங்களைக் கையாளும் விதத்தை எல்லாம் கிரகித்துக் கொண்டு, அவர்களே தொலைநோக்கியை உருவாக்கினர்.
அதன் மூலமாக நிலவில் உள்ள பள்ளங்கள், வீனஸ், ஜூபிடர் போன்ற கோள்களை எல்லாம் கண்டு ரசித்தனர்.
அந்த தொலைநோக்கி வெற்றியால் எங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையும், விண்வெளித் தேடலும் இன்னும் பெருகிஉள்ளது.
டெலஸ்கோப் செய்றதுக்கான வொர்க் ஷாப் துவங்கியபோது, நாம என்ன செய்யப் போறோம், எப்படி செய்யப் போறோம்னு ஒரே த்ரில்லிங்கா இருந்தது.
ஆனால், கத்துக்கிட்டதையும், பயிற்சியில் சொன்னதையும் பின்பற்றி, மாணவர்கள் உதிரிபாகங்களை எல்லாம் ஒன்று சேர்த்தபோது மிகவும் சந்தோஷமாக, உற்சாகமாக, பெருமையாக இருந்தது.
பொதுவாக, பள்ளி குழந்தைகளுக்கு விண்வெளி படிப்பு பத்தியெல்லாம் அதிகம் தெரியாது. ஆனால், இப்பவே, அவங்களுக்கு அந்த ஆர்வத்தை உண்டு பண்ணிட்டோம்.
இதுக்கான பண உதவியை நிறைய ஆசிரியர்கள், நல்ல உள்ளங்கள் எல்லாருமாக சேர்ந்து செய்திருக்கின்றனர். இந்த மாணவர்களில் பலரும் விஞ்ஞானிகளாகி, நிச்சயமாக இந்தப் பள்ளிக்கு பெருமை தேடித் தருவர்.
ஆட்டோ ஓட்டுவது தான் என்னை தினமும் உற்சாகமா வச்சிருக்கு! ஆட்டோ ஓட்டுவது தான் என்னை தினமும் உற்சாகமா வச்சிருக்கு!
புதுக்கோட்டையில்
ஆட்டோ ஓட்டி வரும் சுசீலா: எனக்கு ஆரம்பத்தில், சைக்கிள் கூட ஓட்டத்
தெரியாது. இன்னிக்கு, புதுக்கோட்டையில் பலருக்கும் தெரிஞ்ச ஆட்டோ டிரைவர்
நான். நோயால் முடங்கிய வீட்டுக்காரர், மூன்று பொம்பளப் புள்ளைங்கனு என்னோட
எல்லா கஷ்டங்களுக்கும், பிடிமானமாக என் ஆட்டோ தான் இருந்தது.
ஆர்வத்தில்
கத்துக்கிறது, தேவைக்குக் கத்துக்கிறது வேற. கைவிடப்பட்ட நிலையில், 'இதை
கத்துக்கிட்டா தான் வாழ்க்கையில் கரையேற முடியும்'ங்கிற ஒரு சூழலில் ஒரு
விஷயத்தை கத்துக்கும் போது, அதில் வைராக்கியம் நிறைய இருக்கும். அது தான்,
என்னையும் ஆட்டோ ஓட்ட வைத்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். புதுக்கோட்டையின் பிரதான சாலைகள் முதல் சந்துகள் வரை அத்துப்படி.
கணவர்
உடல்நிலை பாதித்து வீட்டில் முடங்கிய போது, ஒரு அழுத்தமான சூழலில் தான்
ஆட்டோ ஓட்ட வந்தேன். ஆனால், இன்னிக்கு தினம் தினம் என் வேலை தான் என்னை
உற்சாகமாக வைத்திருக்கிறது.
அவசரத்துக்கு என்னைக் கூப்பிடும்போது
நேரம், காலம் பார்க்காமல் ஓடுவேன். யார் எப்போது கூப்பிட்டாலும், வீட்டில்
என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு,
காக்கிச் சட்டையை மாட்டிக்கிட்டு கிளம்பிடுவேன்.
அதனாலேயே, எங்க
அசோக் நகர் ஏரியாவில் பலருக்கும் என் மேல் நல்ல மதிப்பு இருக்கிறது.
வெளியில் எங்கு போக வேண்டும் என்றாலும், என்னை தான் முதலில் கூப்பிடுவர்.
கர்ப்பிணியருக்கு நம்ம ஆட்டோ எப்போதும் இலவசம்.
சவாரி போனதுக்கு
இணையாக, என் கணவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருக்கேன்.
ஆனாலும், சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இறந்து போயிட்டாரு.
அவர்
நல்லாயிருந்த வரைக்கும், எங்களை எல்லாம் நல்லா பாத்துக்கணும்னு நினைத்தார்.
அதனால், அவர் வீட்டில் முடங்கிய ஐந்து ஆண்டுகளும் நான் ஆட்டோ ஓட்டி, அவரை
முடிஞ்ச வரை நல்லா பார்த்துக்கிட்டேன். முடிஞ்சதுக்கு மேலயும் வைத்தியம்
பார்த்த திருப்தியும் இருக்கு.
துவக்கத்தில் வாடகை ஆட்டோ ஓட்டிய
நான், இப்போது சொந்த ஆட்டோ ஓட்டுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்,
மகளிர் திட்டத்தில் லோன் போட்டு ஆட்டோ எடுத்தேன். ஆட்டோ ஓட்டி லோனையும்
கட்டி, என் மூன்று பொண்ணுங்களையும் படிக்கவும் வெச்சுட்டேன்.
மூத்த பொண்ணுக்கு கல்யாணத்தையும் முடிச்சாச்சு. மிச்ச லோனையும், என் இரண்டு பொண்ணுங்களையும் பார்த்துக்க... இதோ என் ஆட்டோ இருக்கே!
இரு நல்ல உள்ளங்களையும் வாழ்த்துகிறேன் , நம்ம டெலெஸ்கோப் ஆசிரியை சித்ராவுக்கு தனி ஷொட்டு