தேனீ பண்ணை வைத்து நடத்தி வரும், நாமக்கல்லைச் சேர்ந்த வித்யாஸ்ரீ:
தேசிய கைப்பந்து வீராங்கனையான நான், நாமக்கல்லில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் இளங்கலை வரலாறு பயின்றேன்.
கடந்த, 2020ல், உலகை கொரோனா தொற்று உலுக்கிய நேரம், பலர் வேலை இழந்தனர். வேறு சிலர், தங்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டனர்.
சிறு வயதிலேயே, இயற்கை மீது அலாதி பிரியம் கொண்ட எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் அல்லது தோட்டம் வைக்க வேண்டும் என்பது ஆசை.
ஆரம்பத்தில், பஞ்சகவ்யம் போன்ற வற்றை தயாரித்து, காய்கறி தோட்டம் பராமரித்து வந்தேன். ஆனால், நான் நினைத்த படி அது கைகூடி வரவில்லை.
சரி ஒரு முறை தோற்றாலும், வேறு ஏதாவது முயற்சி செய்யலாம் என நினைத்தபோது தான், 'தேனீக்கள் அழிந்து விட்டால் கூடிய சீக்கிரம் உலகமும் அழிந்துவிடும்' என்ற ஒரு வீடியோவை பார்த்தேன்.
அது, எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தேனீ பெட்டிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும், எந்த மாதிரியான பெட்டிகளை வாங்க வேண்டும், தேனீக்கள் நம்மை கொட்டாமல் இருக்க அவற்றை எவ்வாறு கையாள வேண்டும், எதை எல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதையும் கற்று, அதன் பிறகே, 15 பெட்டிகளை வாங்கினேன். வீட்டிலேயே தேனீக்களை வளர்க்கத் துவங்கினேன்.
தேனீக்கள் வளர்ப்பை பிசினஸ் ஆக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முதலில், எங்களுக்கு சுத்தமான தேன் வேண்டும் என்பதற்கான தேடலில் துவங்கியது, இப்போது தேனீக்கள் பண்ணை வைக்கும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதைத் துவங்குவதற்கான முதலீட்டை அம்மா தான் தந்தார். எல்லா நேரங்களிலும் நமக்கு அதிக அளவில் தேன் கிடைத்து விடாது.
ஜனவரியில் துவங்கி அடுத்த ஐந்தாறு மாதங்கள் தேனீக்களுக்கான சீசன். அப்போது தான் அதிக அளவில் தேன் கிடைக்கும்.
தேனில் இருந்து கிடைக்கக்கூடிய மதிப்புமிக்க மெழுகு மூலமாகவும் மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. இது, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
'ராயல் ஜெல்லி' என்பது, தேனீ வளர்ப்பில் கிடைக்கும் மிகவும் மதிப்புள்ள மற்றொரு பொருள். அதில், நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
அந்த வகையில், தேனில் இருந்து கிடைக்கும் வேறு பொருட்களையும் சந்தைப்படுத்தும் முயற்சியில், அடுத்து இறங்கப் போகிறேன்.
கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று, தேனீ வளர்ப்பு குறித்து மேலும் கற்றுக் கொள்ளும் ஆசையும் இருக்கிறது.
தேனீக்கள் நமக்கு ஒற்றுமையாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ முன்மாதிரியாக உள்ளன .