Load Image
Advertisement

பெண் புலவர்களின் பாடல்களை ஓவியமாக்க திட்டம்!

திருக்குறள் 1,330க்கும் ஓவியங்கள் வரைந்துள்ள, விழுப்புரத்தைச் சேர்ந்த சவுமியா:

தமிழின் பெருமைமிகு அடையாளமான திருக்குறளை, ஓவியத்தின் வழியாக காட்சிப்படுத்தி இருக்கிறேன். இயல் என்ற பெயரில் ஓவியங்கள் வரையும் நான், தற்போது சென்னையில் தனியார் கல்லுாரியில் காட்சித் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன்.

'தினம் ஒரு குறள்' என்ற கான்செப்ட்டில், 1,330 குறள்களுக்கும், தொடர்ச்சியாக 1,330 நாட்கள் ஓவியங்கள் வரைந்து, அதன் பொருளுடன், என் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தேன். சமீபத்தில் இந்த முயற்சியை சுபமாக முடித்துள்ளேன்.

'பிரீ லான்சராக' ஓவியங்கள் வரைஞ்சு சம்பாதிச்சு, அந்தக் காசுல தான் என் படிப்பு செலவுகளை பார்த்துக்கிட்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், தினம் ஒரு குறள்னு, 1,330 நாட்கள் விடாமல் தொடர்ச்சியா ஓவியம் வரையத் தீர்மானிச்சேன். அது, மிகப் பெரிய சவால் தான்.

இருந்தாலும் நம்பிக்கையோட, 'அகர முதல எழுத்தெல்லாம்' குறளுக்கு ஓவியம் வரைஞ்சு, பயணத்தை துவங்கினேன்.

தொடர்ச்சியாக நான் வரைஞ்சு பதிவிடுறதைப் பார்த்துட்டு, நிறைய பேர் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. என்னோட ஓவியங்களை தினமும் எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க.

விஷுவல் கம்யூனிகேஷன்ல, 'கலர் தியரி, கலர் சைக்காலஜி' ஆகிய தலைப்பில் பாடங்களே இருக்கு. ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு விதமான தாக்கத்தை நமக்குள்ள ஏற்படுத்தும்.

அபாயத்தை குறிக்க சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துறோம், வெண்மை பிரதிபலிக்கக் கூடியது, கருமை உள்வாங்கிக் கொள்வதுன்னு, நிறங்களுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் மற்றும் உளவியல் சார்ந்து தான், இந்த ஓவியங்களை வரைந்தேன்.

என் ஓவியங்கள்ல பாலின வரைமுறைகளைத் தகர்த்தேன். காதல் பிரிவுத் துயர்ல ஓர் ஆண் அழுவதைப் போல வரைந்திருந்தேன்.

அதைப் பார்த்துட்டு ஒருத்தர், 'ஆண்கள் அழ மாட்டாங்க'ன்னு சொன்னார். ஆண்கள் அழுவதை, 'நார்மலைஸ்' செய்யவே அப்படி வரைந்தேன். திருக்குறளை பாலின ரீதியா அணுகக் கூடாது. எல்லாருக்கும் பொதுவானதாக அணுக வேண்டும்.

இந்த, 1,330 ஓவியங்களையும், அதற்கான குறள் மற்றும் விளக்க உரையுடன் புத்தகமா பதிப்பிக்கும் வேலையில இறங்கியிருக்கேன். ஓவியக் கண்காட்சி நடத்தும் திட்டமும் இருக்கு. திருக்குறளை இனி வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல என்னாலான பங்களிப்பா இதை பார்க்கிறேன்.

புலவர்களா, தங்களோட ஆளுமையை நிறுவிய பெண்கள் பலர் உள்ளனர். அடுத்ததா, அவங்களோட பாடல்களை ஓவியமா காட்சிப்படுத்த வேண்டும்.



வாசகர் கருத்து (3)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    பாராட்டுக்கள் ....

  • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

    வாழ்த்துக்கள்

  • kumar - Erode,இந்தியா

    அருமை . நல் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement