Load Image
Advertisement

இம்முறையாவது மகளிர் மசோதா நிறைவேறுமா?

பி.ஜோசப், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்த அடுத்த வினாடியே, 'இது மறைந்த தன் கணவர் ராஜிவ் கனவு' என சோனியாவும், '2010ம் ஆண்டிலேயே காங்கிரஸ், இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியுள்ளது' என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உரிமை கொண்டாடுகின்றனர்.

இது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் கனவாகவோ, 2010ம் ஆண்டு காங்., கட்சி நிறைவேற்றிய மசோதாவாகவோ இருக்கட்டும். இருந்தும், 2014ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இதை ஏன் நிறைவேற்றவில்லை.

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம், 1989ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. 1989 மற்றும் 2010ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியிலிருந்தது.

ஆனால், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல, மசோதாவையும் தாக்கல் செய்து விட்டு, எல்லாம் வல்ல ஏகாம்பரம் லாலு பிரசாத் யாதவ் வாயிலாக, 33 சதவீத ஒதுக்கீட்டில் ஜாதி ரீதியாக உள் ஒதுக்கீடு கோரி, குழப்பத்தை ஏற்படுத்தி மசோதாவை கிடப்பில் போட்டு விட்டனர்.

அத்துடன், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது போல, நாட்டில் பல நல்ல விஷயங்கள் நடைபெற விடாமல், கவனமாக பார்த்து கொண்டது தான் காங்கிரஸ் கலாசாரம்.

இன்றைக்கு, 'நாங்கள் தான் கொண்டு வந்தோம்' என பெருமைபட்டு கொள்ள மட்டும் முன்னால் வந்து நிற்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக பற்றி எரிந்த காஷ்மீர் பிரச்னையை, ஒரே இரவில் தீர்த்து வைத்து காஷ்மீர் மக்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தது போல, இந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவையும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு நிறைவேற்றி முடிக்கும்.

ஆனாலும், எதிர்க்கட்சியினர் நிறைவேற்ற விடுவரா அல்லது வழக்கம் போல, 'கட்டை'யை போட்டு விடுவரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!




ஏற்றத்தாழ்வை ஒழிக்க உதயநிதி முன்வருவாரா?ஆர். விஸ்வநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சனாதன தர்மம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்களைப் படித்தேன். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஒரு விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார். அதற்கு முதலில் என் நன்றி!

உதயநிதி கூறும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, ஜாதி மற்றும் பொருளாதாரம் என, இரு வகைகளாக பிரிக்கலாம்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பல காலமாக இருந்து வருகின்றன. இதை முற்றிலும் ஒழிப்பது மிகவும் கடினமான, நீண்ட காலம் போராட வேண்டிய யுத்தம்; ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை முழுதும் களைய முடியா விட்டாலும், முயற்சி செய்தால் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகமெங்கும் உள்ள ஒரு பெரும் வியாதி. உலக பொருளாதாரம் எவ்வளவு உயர்ந்தாலும், ஏழ்மை மட்டும் குறைவதில்லை.

ஒரு கணக்கெடுக்கின்படி, இந்தியாவின் பெரும்பான்மை செல்வம், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேரிடமே இருக்கிறது; தமிழகத்திலும் இதே கதிதான். தனி நபர் வருமானம் கூடினாலும் இன்னும், 2 கோடி மக்கள் வறுமையில் தான் வாழ்கின்றனர். சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக, தமிழக அரசு எடுத்த ஒரு கணக்கெடுப்பே இதற்கு சான்று!

எனவே, உதயநிதி உண்மையிலேயே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க விரும்பினால், முதலில் தமிழகத்தில் ஏழ்மையை ஒழிக்க புரட்சி செய்யட்டும். தன் குடும்பத்தாரின், தன் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் சொத்துக்களில் ஒரு பகுதியையாவது ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

அதை வைத்து, தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடுகள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கட்டும்.

இதை செய்தால், அவரை ஒரு உண்மையான புரட்சியாளராக சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். ஜாதி, மதம், இனம் பாராமல் தமிழகத்தின் பல கோடி மக்கள் அவர் பின் நிற்பதற்கு தயாராய் இருப்பர்; அவரது பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும்.



நல்ல மனம் வாழ்க; நாடு போற்ற வாழ்க!பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போதே, 60 குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பது, ஏழைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து வைப்பது என்று, பல உதவிகளை செய்து வந்தேன். அப்போது, அவ்வளவு உதவிகள் செய்வதற்கு என்னிடம் பணமில்லை...

'அதனால், என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்; பலரும் எனக்கு உதவினர். தற்போது, கதாநாயகனாகி விட்டதால் போதுமான வருமானம் வருகிறது; எனவே, என் அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்...' என்று, வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

ஏழைகள், நோயாளிகள்,முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணம் வசூலித்து, தங்களை வளர்த்துக் கொண்டோர் பலர். வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும், அறக்கட்டளைகள் துவங்குவோரும் உண்டு.

அதே நேரம், நல்ல முறையில் சேவைகள் செய்ய மனமிருந்தாலும், போதுமான அளவிற்கு பணமின்றி கஷ்டப்படுகிற அறக்கட்டளைகளும் உண்டு. ஆனால், 'என்னுடைய அறக்கட்டளைக்கு இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். அந்த பணத்தை உதவி தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுங்கள்...' என்று சொன்னது, எனக்கு தெரிந்து, முதல் நபர் ராகவா லாரன்ஸ் தான்.

இன்று நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழல், பல்வேறு மோசடிகள், கொள்ளை, கொலைகள், கடத்தல், கலப்படம் போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்கள் அனைத்தும் பணத்திற்காக நடப்பவை. வெறும், 100 ரூபாய்க்காக கூட கொலைகள் நடந்ததுண்டு. ஆனால், இவரை நம்பி, இவருடைய சேவையை மதித்து, லட்சம் லட்சமாக கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர்; ஆனால், இவரோ வேண்டாம் என்கிறார்.

தானம் செய்ய செய்ய செல்வம் ஒரு போதும் குறையாது; பெருகவே செய்யும். பணத்திற்காக ஏதேதோ செய்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர். நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    தமிழகத்தில் ஏழ்மையை ஒழிக்க புரட்சி செய்யட்டும் உதயநிதி. என்கிறார் மதுரை விஸ்வநாதன். அதற்கு தன் குடும்பத்தாரின், தன் கட்சியின் அமைச்சர்கள், எம்...பி .. எம் ல் எ களின் சொத்தை செலவு செய்ய சொல்கிறார். நடக்கிற காரியமா..? பதவியை வைத்து கொள்ளையடிப்பபதை நிறுத்தினாலே போதும். அதுவே பெரிய புரட்சி சேவை....

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'மேடை கிடைத்தது என்று நாலு வார்த்தை யாரோ எழுதிக் கொடுத்ததை பேசினால், ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொண்டு அதை செய், இதை செய்யென்று அடிமடியில் கைவைக்கிறார்களே ' என்று புலம்பப்போகிறார் உதயநிதி எல்லாருக்கும். ராகவா லாரன்ஸ் மனம் வந்துவிடுமா ?

  • veeramani - karaikudi,இந்தியா

    எவரும் இந்திய மக்களுக்கு பிட்சை போடவேண்டாம். மக்கள் உழைப்பதற்கு தயார். அவர்களுக்கு வேலை கொடுத்தால் போதும். இன்னும் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விருதுநகர், சிவகாசி, மதுரையில் வேலைக்கு ஆட்கள் இல்லை. மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், எவருக்கும் இலவசமாக மீன் கொடுக்காதீர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement