உ.பி.,யில் செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மத்திய பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை.
டவுட் தனபாலு: பெண்ணாகிய நீங்க தலைமை வகிக்கிற கட்சியில, இதுவரை சட்டசபை, லோக்சபா தேர்தல்கள்ல எத்தனை பெண்களுக்கு, 'சீட்' கொடுத்திருக்கீங்க... பெண்களை அரசியலுக்கு அழைத்து வருவதில் என்ன பங்களிப்பை செய்திருக்கீங்க என்ற, 'டவுட்'களுக்கு விடை தர முடியுமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடைசியாக, 2009ல் லோக்சபா தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்ட போது, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகை, நீலகிரி, தென்காசி ஆகிய ஏழு ஊர்கள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதில், ஐந்து தொகுதிகள், வட மாவட்டங்களில் திணிக்கப்பட்டன. தொகுதிகள் மறு சீரமைப்பில், இந்த பெரும் சமூக அநீதி களையப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: தென் மாவட்டங்களில் உள்ள பட்டியலின மக்களும் பயன்பெற வேண்டும் என்ற ராமதாசின் கருத்து சரியானது தான்... அதே நேரம், அவரது கட்சிக்கு செல்வாக்கு இருக்கும் பல இடங்கள் தனி தொகுதிகளாக இருந்து, அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக கவர்னர் ரவி: பாரதத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை. உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற பரந்த கருத்து நம்மை வழி நடத்துகிறது. பல்வேறு பிரச்னைகள், மோதல்கள், போர்கள் நடக்கும் இந்த உலகில், மீண்டும் விஸ்வ குருவாகி உலகிற்கு ஒளி காட்ட, இதுவே நமக்கு சிறந்த வாய்ப்பு. சமூக கலாசாரம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம், பாரதத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாக உடையது.
டவுட் தனபாலு: ஆன்மிக முன்னேற்றம் என்ற இவரது கருத்து, 'திராவிட மாடல்' ஆட்சியாளர்களுக்கு எட்டிக்காயாக கசக்குமே... சீக்கிரமே, தி.மு.க., கூட்டணி கட்சியினர், இவருக்கு எதிர்வினை ஆற்றுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...
கவனருக்கு எதிராக பேச. நம்ம 'இளைய பெருமாளை ' கிளம்பிவிட்டால். போதுமே ஒருவேளை அவர் பேச்சுக்கு மறைமுக பதிலடியோ இது?