புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துவதால், மரபுசார் எரிபொருட்களுக்கு மாற்று தேவைப்படுகிறது. காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது எந்த வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது என்பதால் பல நாடுகள் இவற்றை நிறுவி மின்சாரம் தயாரித்து வருகின்றன.
ஆனால், இதிலும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருக்கிறது. காற்றாலை அமைந்த பகுதிகளில் உள்ள பறவைகள், சுழலும் விசிறிகள் மீது மோதி இறக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டில் 10 லட்சம் பறவைகள் இவ்வாறு இறக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆகவே, பறவைகளைக் காப்பாற்ற ஐரோப்பாவின் எஸ்.ஐ.என்.டி.இ.எப். ஆய்வு மையமும், நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பும் சேர்ந்து தீர்வு கண்டுள்ளன.
இதன்படி, இனி கற்றாலைகளில் கேமராக்கள் பொருத்தப்படும். பறவைகள் அருகே வருகின்றன என்றால், உடனே அவை வருகின்ற திசை, வேகம் ஆகியவற்றைக் கேமரா மூலம் அறிந்துகொண்டு விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சுழலும் விசிறிகளால் பறவைகள் இறப்பதைக் குறைக்கலாம். என்றாலும், கம்பங்களின் மீது பறவைகள் மோதி இறப்பதைக் தடுக்க முடியாது. தவிரவும், சுழலும் விசிறிகள் நிற்பதற்குக் குறைந்தது 20 நொடிகள் வரை எடுத்துக் கொள்ளும். இதனால் பறவைகளின் இறப்பை 80 சதவீதம் வரை மட்டுமே குறைக்க முடியும்.
பறவைகளின் இறப்பை 100 சதவீதம் குறைக்கும் வகையில் மென்பொருள், தொழில்நுட்பத்தை விஞ்ஞானியின் உருவாக்கி வருகின்றனர். இம்முறை மேம்படுத்தப்பட்டு எல்லா காற்றாலைகளிலும் பொருத்தப்பட குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!