மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: 'ஷவர்மா' சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம், துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் உணவகங்கள் தர கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை கண்காணித்து, பரிசோதனை நடத்தி அபராதம் விதிப்பதுடன், உரிமத்தை ரத்து செய்து கடைக்கு, 'சீல்' வைக்கப்படும்.
டவுட் தனபாலு: ஒரு சம்பவம் நடந்ததும், இப்படி வீராவேசம் காட்டுறது தானே, உங்க வழக்கம்... இந்த கடமை உணர்ச்சியை, அந்தந்த அதிகாரிகள், அவங்கவங்க வேலையில சரியா காட்டியிருந்தா, நாமக்கல் சிறுமி உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: தி.மு.க., ஆட்சியை அகற்ற, தே.ஜ., கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில், கூட்டணி கட்சிகளின் செயல்பாடு கவலையுடன், வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் கூறியுள்ளேன். விரைவில் நேரில் சென்றும் வலியுறுத்த உள்ளேன்.
டவுட் தனபாலு: உங்க கவலை உங்களுக்கு... பல தேர்தல்கள்ல, தென்காசி லோக்சபா தொகுதியில போட்டியிட்டும், உங்களால ஜெயிக்க முடியலை... 2024 தேர்தல்லயாவது, அ.தி.மு.க., - பா.ஜ., என்ற பலமான கூட்டணியில் வெற்றியை அறுவடை செய்யலாம்னு இருந்த உங்களுக்கு, இந்த கூட்டணி முறிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: காஞ்சிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சாகசம் செய்து விபத்து ஏற்படுத்திய, 'யு டியூபர்' டி.டி.எப்.வாசன், 24 என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வாகன ஓட்டுனர் உரிமம், ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: நல்ல விஷயம்... இவரை போன்றவர்கள், மேலும் பல இளைஞர்களை கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு இருப்பதுடன், பல விபத்துகளுக்கும் காரணமா இருக்காங்க... சாகசங்கள் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறப்ப, இந்த மாதிரி விபரீத சாகச பிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
நமது பாரத கலாச்சாரத்திற்கு விரோதமான உணவு வகைகளை தடைசெய்வது நல்லது