அநேகமாக திருச்சியில் ஏசி., ப்ரிட்ஜ், கிரைண்டர், கட்டில், மெத்தை இல்லாத தொழில் முனைவர் வீடு புவனேஸ்வரியின் வீடாகத்தான் இருக்கும்.
யார் இந்த புவனேஸ்வரி
பட்டதாரிப் பெண்ணான புவனேஸ்வரி திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவரை சராசரி தாய்குலம்தான். உடல் நலத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படவே பல மருத்துவ நிபுணர்களைப் பார்த்தும் பெரிதாக பலனில்லை.
ஒரே ஒருவர் மட்டும் உங்கள் உணவு முறையை மாற்றிப் பாருங்களேன் என்றார், முக்கியமாக எண்ணெயில் இருந்து ஆரம்பியுங்கள் என்றார்.
அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் மரச்செக்கு எண்ணெய் பற்றி அதிகம் தகவல்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் லாபநோக்கோடு அதிலும் கலப்படம் செய்யப்படுகிறது என்ற தகவலும் கூடவே வந்து பயத்தை உண்டு பண்ணியது.
மரச்செக்கில் பிழிந்து எடுக்கப்படும் நல்ல எண்ணெய்க்காக பல மரச்செக்கு ஆலைகளுக்கு சென்றேன். அதில் ஒருவர், 'என்ன தேவையோ? அதற்கான மூலப்பொருளை நீயே கொண்டுவந்து ஆட்டி எடுத்துக் கொள். அரவைக்கூலி மட்டும் கொடு' என்றார்.
அதன்படி நல்ல எண்ணெய்க்கு தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு போய் நானே கண் முன்பாக ஆட்டி எடுத்துவந்து சமையலுக்கு உபயோகித்தேன். ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது. எனது மாற்றத்தை பார்த்த நட்புகளும், உறவுகளும் தங்களுக்கும் எண்ணெய் அரைத்து தரும்படி கேட்டனர். 'இவ்வளவு சரக்கை எங்ககிட்ட கொண்டு வந்து ஆட்டுவதற்கு பதிலாக நீயே மரச்செக்கு ஆலை போட்டுக் கொள்' என்றார் ஒருநாள். அதன்படி போடப்பட்டதுதான் என் முதல் மரச்செக்கு ஆலை.
எனது ஆலையில் நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை எண்ணெய்கள் அரைக்கப்பட்டது. நிறைய வாடிக்கையாளர்கள் உருவாகினர். ஒரு மரச்செக்கு எந்திரம் இரண்டாகி இப்போது மூன்றாகியுள்ளது.
டெங்கு, கொரோனாவிற்கு பிறகு மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீது கூடுதல் அக்கறை வந்துவிட்டது. இதன் காரணமாக எண்ணெயுடன் சேர்த்து பாரம்பரிய அரிசி, சிறுதானிய தீனி,மூலிகை பொருட்கள், சோப்பு, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, தேன், சத்துமாவு, கோதுமை , கம்பு அவல், கருப்பு கவுனி, பீட்ருட் மால்ட், கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் என்று கிட்டத்தட்ட நுாற்றுக்கும் அதிகமான பொருட்களை 'நலமுடன்' என்ற பிராண்டில் நம்பிக்கையுடன் விற்பனை செய்கிறோம்.
இதில் பல பொருட்கள் எங்கள் சொந்த தயாரிப்புகளே. மற்ற பொருட்களை எது சரியானதோ அதை மட்டுமே வாங்கிவிற்கிறோம், நாங்கள் தயாரிக்கும் மற்றும் வாங்கி விற்கும் பொருட்களின் முதல் நுகர்வோர் நானும் என் குடும்பத்தினருமே. எங்களுக்கு சரியாகப்பட்டால் மட்டுமே விற்பனைக்கு வரும்.
தரையில் பாய் விரித்து படுத்து துாங்கி எழும் பழக்கத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த ஐந்தாண்டுகளில் ஆங்கில மருத்துவரிடமோ,மருந்துகளிடமோ போனது கிடையாது. குறைந்த விலை நிறைந்த ஆரோக்கியம் தரும் இந்த இயற்கை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையின் ஒவ்வொரு அங்குலத்திலும் என் கணவர் ஞானவேல் முருகன் துணையிருக்கிறார்,
ஆடம்பர அலங்கார கடை போடவேண்டும். ஊரெங்கும் கிளை திறக்கவேண்டும். விடிய விடிய கடை திறந்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எவ்வித எண்ணமுமின்றி போதும் என்ற மனதுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக நலமாக வளமாக இருக்கிறோம். எங்கள் மனநிறைவுக்காகவும், ஆரோக்கியமான சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவும் மரச்செக்கு எண்ணெய் துவங்கி சிறுதானிய விற்பனை வரை இலவச பயிற்சியும் வழங்குகிறோம் என்று கூறும் புவனேஸ்வரியுடன் தொடர்பு கொள்வதற்கான எண்கள்:7010555818, 8668188836.
நன்றி:தினமலர்-வாரமலர்
அருமை வாழ்த்துக்கள்