'ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்' என்ற அமைப்பு, பார்லிமென்டில் தற்போது எம்.பி.,க் களாக உள்ளவர்களின் கிரிமினல் பின்னணி குறித்த ஆய்வு அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது. அதில், 'லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தமுள்ள, 763 எம்.பி.,க்களில், 306 பேர் அதாவது, 40 சதவீதத்தினர் மீது, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதிலும், 194 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ., கட்சியில் உள்ள, 385 எம்.பி.,க்களில், 139 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதேபோல, 'காங்கிரஸ் எம்.பி.,க்கள், 81 பேரில், 43 பேர் கிரிமினல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற கட்சிகளில் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை விபரமும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 'அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவ, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா என்பவரை நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 'குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஆறு ஆண்டு களுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். அதன்பின், மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும். இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவிக்கும், அரசியல் சட்டத்தின், 14து பிரிவை மீறுவதாக உள்ளது.
'எனவே, குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் ஆயுள் முழுதும் எந்தத் தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தண்டனை பெற்றவர்கள் விடுதலை யான பின், ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே போட்டியிட முடியாது. அதன்பின், தேர்தல் களமிறங்கலாம் என்ற விதிமுறையானது, சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டையாகும். இப்படிப்பட்ட தளர்வு நீடிப்பதால் தான், அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த விஷயத்தில், முன்னுரிமை அடிப்படையில், மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்' என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அப்போது தான், அரசியல் கட்சிகள் மோசமான கிரிமினல் பின்னணி உள்ளவர்களை, தேர்தலில் நிறுத்த யோசிக்கும் நிலைமை உருவாகும். அத்துடன் வாக்காளர்களும், கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் நபர்களை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தால், அவர்கள் விரைவில் சிறைக்கு சென்று விடுவார் என நினைத்து, சரியான மாற்று நபரை தேர்வு செய்ய முன்வருவர்.
மேலும், 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்கள், விசாரணையில் உள்ள வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வழங்கப்பட்டு உள்ள தீர்ப்புகள் போன்றவை குறித்து மாதாந்திர அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, விஜய் ஹன்சாரியா தெரிவித்து உள்ள யோசனையும் சரியானதே. இதன் வாயிலாக, அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளும், வழக்குகள் சார்ந்த மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட நேரிடும்.
நீண்ட காலமாக சில வழக்குகள் நிலுவையில் இருந்தால், அதற்கான காரணங்களை குறிப்பிடும் போது, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளையும் உயர் நீதிமன்றங்கள் எடுக்கும். இந்த விவகாரத்தில், ஹன்சாரியா தெரிவித்துள்ள யோசனைகளை விரைவாக அமல்படுத்த, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும், மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்தால், அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் நீடிப்பதை தவிர்க்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!