Load Image
Advertisement

பேக்கரியில் தடையின்றி நடக்கும் 'சரக்கு' விற்பனை!

''முதல்வர் எங்க ஊருக்கு அடிக்கடி வரணும்னு சொல்றாங்க...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எதுக்குப்பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில, தொடுகாடு, பராசங்குபுரம், செங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட ஊர்கள் இருக்குதுங்க... இந்த சாலையில, பல இடங்கள்ல மண் அரிப்பு ஏற்பட்டு, பெரிய, பெரிய பள்ளங்கள் விழுந்திருக்குதுங்க...

''இதனால, வாகன ஓட்டிகள் ரொம்பவே அவதிப்பட்டாங்க... 'சாலையை சரி பண்ணுங்க சார்'னு, பல முறை அதிகாரிகளிடம் சொல்லியும் அவங்க கண்டுக்கலைங்க...

''இந்தச் சூழல்ல, போன 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை ஊராட்சியில இருக்கிற, தன் தோட்ட வீட்டுக்கு வந்தாருங்க... இரவு அங்கயே தங்கிட்டு, மறுநாள் காலையில தொடுகாடு, ஸ்ரீபெரும்புதுார் வழியா காஞ்சிபுரத்துல நடந்த, மகளிர் உரிமைத்தொகை திட்ட துவக்க விழாவுக்கு போனாருங்க...

''முதல்வர் வந்ததால, இந்த சாலையை அதிகாரிகள் கண்ணாடி மாதிரி மாத்திட்டாங்க... வழிநெடுக குப்பை, கூளங்களையும் அகற்றி சுத்தமாக்கிட்டாங்க... அதனால தான், 'அடிக்கடி முதல்வர் இந்த பக்கம் வரணும்'னு இந்த பகுதி மக்கள் சொல்றாங்க...' என்றார், அந்தோணிசாமி.

''வரி மோசடி பத்தி விசாரிக்கறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவுல, 10 கிராமங்கள் இருக்கு... இங்க, காலி மனைகளுக்கு நகர நிலவரி திட்டத்துல வரி வசூலிக்கறா ஓய்...

''மனையின் பரப்பளவை பொறுத்து, அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் வரி விதித்து ரசீது வழங்குவா... உரிமையாளர்களுக்கு வழங்கற ரசீதுல, அவா தந்த தொகையை கார்பன் வைக்காம எழுதி குடுத்துடறா ஓய்...

''வருவாய்த் துறை அலுவலகத்துக்கு தர்ற ரசீது அடிக்கட்டையில, 50 முதல் 70 சதவீதம் வரை வரியை குறைச்சு எழுதி, பணத்தை எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கறா... இதன் மூலமா, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திட்டதா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் போனது ஓய்...

''லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒரு வாரமா சில வி.ஏ.ஓ.,க்கள், அவா ஆபீஸ், வீடுகள்ல சோதனை நடத்தி, மோசடி ரசீதுகளை கைப்பற்றியிருக்கா... சீக்கிரமே, அவா மேல நடவடிக்கை வரும்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பேக்கரியில கேக், பப்ஸ், டீ, காபி வித்து பார்த்திருக்கோம்... சரக்கு வித்து பார்த்திருக்கீயளா வே...'' என, கடைசி தகவலுக்குவந்தார் அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில ஒரே பெயர்ல நகர்ல சில இடங்கள்ல ஒரு பேக்கரி இருக்கு... இங்க, மது விற்பனை கொடி கட்டி பறக்கு வே...

''மதுவிலக்கு, சட்டம் - ஒழுங்கு போலீசார், 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு மாசமானா கரெக்டா மாமூல் போயிடுது... இது பத்தி, மீடியாக்கள்ல செய்திகள் வந்துடக் கூடாதுன்னு, சில உள்ளூர் நிருபர்களுக்கும், 'கட்டிங்' வெட்டிடுதாவ வே...

''எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாத இந்த பேக்கரியில, ஏன் கூட்டம் கும்மியடிக்குதுன்னு பலருக்கும் தெரியாது... அங்க, தங்கு தடையில்லாம, 'சரக்கு' கிடைக்கிறதால தான், இந்த கூட்டம்னு இப்பதான் தெரியுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''நம்ம கீதா ஸ்டோர் ஈஸ்வரன் வரார்... சுக்கு காபி போடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.



வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    அந்தகாலத்தில் மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் வருவாரென்று கேள்விபட்டதுண்டு. அதுபோல் முதல்வர் மாறுவேடம் கூட வேண்டாம். மாதம் தோறும் ஒரு சட்டசபை தொகுதிக்கு வந்தால் கூட போதும். சுகாதாரமும் தெருக்களும் சந்தி சிரிப்பதை கண்கூடாக பார்த்து அறிந்து கொள்ளமுடியும். ஆனா ஒன்று.. கவுன்சிலர்களும் மாவட்டமும் வேலையே நடக்காமல் கணக்கெழுதி கல்லா கட்ட முடியாது. ஸ்டாலினுக்கு அது தெரிந்தும் கண்டும் காணாததுபோல் ... பழத்துக்கு இலை மறைவு.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'கொடுப்பதை' கொடுத்துவிட்டால் கோயிலில் கூட சரக்கு விற்க அனுமதித்துவிடுவார்கள்

  • அப்புசாமி -

    பேக்கரியில் சம்சா சாப்பிட்டா தாகம் ஏற்படும் அதுக்காக கொஞ்சம் சரக்கு விக்கிறோம். ஜீரணமும் நல்லா இருக்கும். தமிழகமே திருடர்களால் நிரம்பியுள்ளது. இதுல போலீஸ், அதிகாரிங்களை குறை சொல்லி என்ப பயன்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement