பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியில் இருந்த வரை, தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் வந்தது. காங்., ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்காமல் துரோகம் இழைக்கிறது. தமிழக அரசும் உரிமையை கேட்டுப் பெற முடியாமல், வாய் பொத்தி அமர்ந்துள்ளது.
டவுட் தனபாலு: கர்நாடகாவுல இந்த வருஷம் சரியான பருவமழை பெய்யாததும் பிரச்னைக்கு காரணம்... போன வருஷம் உங்க கட்சி ஆட்சி நடந்தப்ப, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி, உபரி நீரைத்தான் தமிழகத்துக்கு திறந்து விட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: நான் செல்லும் இடங்களில் எல்லாம், வன்னிய இளைஞர்கள் என்னை பார்த்து, 10.50 சதவீதம் இடஒதுக்கீடு என்னவானது எனக் கேட்கின்றனர். அதற்கான பதில் என்னிடம் இல்லை. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ம.க., இனியும், இலவு காத்த கிளியாக இருக்க முடியாது. வன்னிய இளைஞர்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தியும் வைக்க முடியாது. இதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: 'வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தினா, 1987ல் வடமாவட்டங்களை ஸ்தம்பிக்க வச்ச மாதிரி, மீண்டும் ஒரு போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்' என்பதைத் தான், டாக்டர் இப்படி நாசுக்கா சொல்றாரோ என்ற, 'டவுட்' வருதே!
lll
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, பயிற்சி பெண் மருத்துவர் சிந்து இறந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சிந்து மரணத்திற்கு, நிபா காய்ச்சல் தான் காரணம் என, செய்திகள் வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவலை விரைந்து கட்டுப்படுத்தவும், நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாநில எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும் பல முறை எச்சரித்தும், அரசின் அலட்சியத்தால், இதுபோன்ற உயிரிழப்பு நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பயிற்சி டாக்டரே, காய்ச்சலுக்கு பலியாகி இருக்காங்க என்றால், சுகாதாரத் துறையின் நடவடிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
1987ல் வடமாவட்டங்களை ஸ்தம்பிக்க வச்ச மாதிரி, மீண்டும் ஒரு போராட்டம் தூண்டி விட்டால் ஆளும் அப்பாவும் பிள்ளையும் தைலாபுரம் தந்தை மகனை சிறைபிடிப்பார்கள்.