Load Image
Advertisement

நடிகர் சங்கத்துக்கு கடன் தராதீர்கள்!

நா.விஜயராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என்ன ஒரு அநியாயம்... நடிகர் சங்க கட்டடம் கட்ட, வங்கியில், 40 கோடி ரூபாய் கடன் வாங்க தீர்மானமாம். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தலா, 1 கோடி கொடுத்தாலே கட்டி விடலாம். அதிலும், 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினி, அஜித், விஜய், கமல் ஆகியோர், தலா 10 கோடி கூட தரலாமே!

அதற்கடுத்த வரிசையில் உள்ள சிம்பு, சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற 10 நடிகர்கள், தலா 1 கோடி கொடுத்தால் போதுமே... அதை விடுத்து வங்கியில் கடன் வாங்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

சரி, கடனை எப்படி அடைப்பர் என்றால், 'நடிகர் சங்க கட்டடத்தில் கட்டப்படும் வணிக கடைகளிடம் வாடகை வாங்கி அடைப்போம்' என்பர். ஆனால், கடனை ஒழுங்காக அடைக்கவோ, அதற்கு முயற்சிக்கவோ மாட்டார்கள்.

ஏறக்குறைய, ௧௫ - ௨௦ ஆண்டுகளுக்கு முன்பே, நடிகர் சங்கத்துக்கு, ௪ கோடி ரூபாய் கடன் இருந்தது; அதையே அடைக்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தனர். நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அந்த கடனை அடைத்தார் என்பது வரலாறு.

வங்கிகள் அரசுகளுக்கு கடன் கொடுத்தால், ஆட்சிகள் மாறினாலும் அந்த கடனை வசூலிக்க சட்டம் உள்ளது. புதிய ஆட்சியாளர்கள், பழைய கடன்களை அடைக்கவே செய்வர். ஆனால், நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவிக்கு வந்தால், பழையவர்கள் வாங்கிய கடனை அடைப்பர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, தயவுசெய்து வங்கி நிர்வாகிகள், நடிகர் சங்கத்தினர் கடன் கேட்டு வந்தால் உடனே தந்து விடாதீர்கள். எத்தனையோ விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்கள் வியர்வை சிந்தி, தாங்கள் சம்பாதித்த பணத்தை வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர்.

கோடிகளில் புரளும், வாங்கிய சம்பளத்துக்கு முறையாக கணக்கு கட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடும் சினிமா துறையினருக்கு, அந்தப் பணத்தில், 1 ரூபாய் கூட கடன் கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால், பின்னாளில் கடனை வசூலிக்க முடியாமல், வாராக்கடனாக தள்ளுபடி செய்து, மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள நேரிடும்.



மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்துங்கள்!சொ.முத்துக்குமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: ஜாதி மோதல், மது விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல், விற்பனை போன்றவற்றில் திராவிட மாடல் அரசு, அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. விலைவாசி உயர்வு, ஊழல், விளம்பரம், சிலைகள் அமைத்தல், ஹிந்தி எதிர்ப்பு மற்றும் நீட் எதிர்ப்பு போன்றவை, திராவிட மாடல் அரசின் இதர சிறப்புகளாகும். சட்டம் - ஒழுங்கு, திராவிட மாடல் ஆட்சியில் சந்தி சிரிக்கிறது. கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகள்...

 நாங்குநேரியில் ஜாதிய ரீதியில் ஒரு பிரிவு மாணவர்கள், மற்றொரு பிரிவு மாணவர்களை கத்தி, அரிவாள் கொண்டு, வீடு புகுந்து தாக்குகின்றனர்

 ரயில் நடைமேடையில், 'ரூட் தல' என்ற பெயரில், பட்டா கத்தியுடன் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்

 சென்னை, குருநானக் கல்லுாரி மாணவர்கள் வெடிகுண்டு வீசி மோதல்

 விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் போதை பழக்கத்தை தட்டிக் கேட்ட மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தாக்கப்பட்டார்.

இப்படியாக, மது, போதைப் பொருள் மற்றும் ஜாதிய வெறி போன்றவை, இன்றைய மாணவர்களை வெகுவாக சீரழித்து வருகிறது. இதனால், அந்த மாணவர்கள் மட்டுமல்ல... அவர்களது எதிர்கால தலைமுறையே சீரழிவை சந்திக்க நேரிடும்.

எனவே, ஊழல் செய்வதிலும், விளம்பரம் தேடுவதிலும் காட்டும் வேகத்தை, போதை பொருட்களை ஒழிப்பதிலும் திராவிட மாடல் அரசு காட்ட வேண்டும். சீரழிந்து வரும் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும்.



உண்மையான சனாதனம் எது தெரியுமா?எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது, சனாதானத்தை வேரறுக்க வேண்டும் என உதயநிதி முழங்கியுள்ளார். அவருக்கான ஒரு குட்டிக்கதை இது...

ஒரு நாட்டில், அமைச்சர் ஒருவர் மன்னரிடம், 'மன்னரே, நீங்கள் சனாதனத்தை அதிகமாக பின்பற்றுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு மக்களிடம் பரவலாக உள்ளது' என்றார்.

உடனே மன்னர், 'அப்படி கூறிய ஒரு நான்கு பேரை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார். இதன்படி, நால்வர் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, தன்னுடன் இரு நாட்கள் தங்குமாறு மன்னர் உத்தரவிட்டார்.

முதல் நாள், அரண்மனையை சுத்தம் செய்வோர் வந்தனர். சனாதன எதிர்ப்பு பேசிய நால்வருடன், அரசர் மறைவாக நின்று அவர்களை கண்காணித்தார். சுத்தம் செய்பவர்கள் அமைச்சர்கள் இருக்கையில் ஏறி நின்று, சுவரில் உள்ள ஒட்டடைகளை சுத்தம் செய்தனர். அதில் ஒருவர், அரசரின் இருக்கையில் ஏறி நின்று, மேல் பகுதிகளை சுத்தம் செய்தார்; பின், பணியாளர்கள் வேலையை முடித்து சென்றனர்.

மறுநாள் அரசருக்கு, சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளி வந்தார். நாட்டிற்கே உத்தரவு பிறப்பிக்கும் மன்னரை, அந்த தொழிலாளி, 'கீழே குனியுங்கள், நிமிருங்கள்' என்றெல்லாம் உத்தரவு போட்டு, அவரது சிகையை திருத்தம் செய்து, பொற்காசுகள் பெற்று சென்றார். இப்போது, அந்த சனாதன எதிர்ப்பாளர்களை அழைத்து, மன்னர் பின்வருமாறு கூறினார்...

'சனாதனம், ஒவ்வொரு பிரிவிற்கும் பொதுவானது. எவன் ஒருவன், எந்த துறையில் சிறந்து விளங்குகிறானோ, அவன் அந்த தொழிலை படைத்த கடவுளின் தலையில் தோன்றியவனாகிறான்; மற்ற பிரிவினர், அதற்கு கீழே தான் வருவர்.

'உதாரணமாக எனக்கு சவரம் செய்ய தெரியாததால், நான், அந்த தொழில் புரிவோரை அரசராக கருதி, அவர்களின் கட்டளைக்கு தலைவணங்கியே ஆக வேண்டும். அப்போது, அவர்களின் ஆன்மிக விதியில், அரசனாகிய நான், அவர்கள் தொழும் குலதெய்வத்தின் காலடியில் கிடப்பவன் ஆகிறேன்.

'அரண்மனையை சுத்தம் செய்வோர், தங்களது திறமையில் மிகுந்த சிரத்தை எடுத்து பணிபுரிவதால், அவர்கள் காலடிபட்ட இடத்தில் தான், நான் அமர வேண்டும். சனாதனம், வெவ்வேறு தெய்வங்களின் அடிப்படையில், தொழிலால் கிடைக்கப்படும் அருளின் தன்மையாகும்.

'எவர் ஒருவர், சனாதனத்தை குறை கூறுகிறாரோ, அவர் தன் துறை சார்ந்த அனுபவம் இல்லாத ஒருவரிடம் அந்த துறையின் தலைமை பொறுப்பை ஒப்படைப்பாரா... அது, நடைமுறையில் இயலாத காரியமாகும்; இதுதான் ஆன்மிக நியதி...' என்று தெரிவித்தார் அரசர்.

மன்னரின் கருத்தால் சமாதானம் ஆன நால்வரும், சனாதன எதிர்ப்பை அன்றோடு கைவிட்டனர். இந்த கதையானது, அடுத்த முதல்வர் கனவில் மிதக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம்.

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், சனாதனத்ப்பற்றிய கதை வாயிலாக கடிதமெழுதி அதைப்பார்த்து தன்னை மாற்றிக்கொள்ளும் நிலையில் உதயநிதியில்லை. சாரி..

  • chennai sivakumar - chennai,இந்தியா

    நடிகர்களுக்கு சம்பளம் தரும்.தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்து corpus fund உருவாக்கி கட்டடம் கட்டலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement