Load Image
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீர் வளம் குறையும் அபாயம்

எஸ். சிவசக்திவேல்
கட்டுரையாளர், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பல்கலைக்கழக, சுற்றுப்புற சூழ்நிலையியல்துறை பேராசிரியர். பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்பவர். கடந்த, 2019ல் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கொட்டிய கனமழைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து பள்ளி மாணவர்களைக் கொண்டு மலேசியாவில் நடந்த உலக புவியியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர்.

நீலகிரி மாவட்டத்தில் வளிமண்டல அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த, 1940 - 90க்கு இடைப்பட்ட மழைக்காலம்; 1995க்கு பின் ஏற்பட்டுள்ள மழைக்கால மாற்றம்; 2015க்கு பிந்தைய பருவமழை பொழிவின் அளவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 1941 - 76ம் ஆண்டு வரை சீரான தட்பவெப்ப நிலை, மிதமான மழைப்பொழிவும் இருந்துள்ளது. அதன்பின், பருவமழை வேகம் எடுத்து, 1995 வரை அதிக மழை பொழிவு இருந்தது; அதன்பின், ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பெற்றது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் காலநிலை மாறி வருகிறது.

வெப்பம் அதிகரிப்பு



ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவலான மழை மற்றும் சில பகுதிகளில் குறைவான மழை பொழிவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மண் அரிப்பு, நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. 1995க்கு பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, அரபிக் கடலில் தட்ப வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வடக்கு திசையில் ஐந்து ஆண்டுகள், தெற்கு திசையில் ஐந்து ஆண்டுகளாகவும் மாறி, அதன் திசை வேகத்தை மாற்றிக் கொண்டுள்ளது. கடந்த, 2015 - 20 வரையில் காற்றின் திசை கிழக்கு பக்கமாகவும், தெற்கு பக்கமாகவும் வீசி வருகிறது. இதனால், தென் மாநிலங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது.

கடந்த ஓராண்டாக வழி மண்டல கீழ் அடுக்கு காற்று, வடக்கு திசையை நோக்கி, மேற்கு பக்கமாக திரும்பி உள்ளதால், வட மாநிலங்கள் மற்றும் வட பாகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அதிக மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களால் பெரியளவிலான பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை குறையும்



மேற்கு தொடர்ச்சி மலை, நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளதால் மழை பொழிவு மிகக்குறைவாக காணப்படும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 2023 -24ம் ஆண்டுகளில், 2,300 மி.மீ., மழை அளவு நமக்கு தேவைப்படும் நிலையில், சராசரியாக, 1,650 மி.மீ., மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலையின் சுவை குறையும். உலக சந்தையில் துாளின் விலை சரிய வாய்ப்புள்ளது. இந்த நிலை, 5 ஆண்டுகளுக்கு பின் மாறும்.

இதற்கு உதாரணமாக, சமீபத்தில் 'பிபார்ஜாய்' என்ற காற்று சுழற்சி, வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத், மஹாராஷ்டிரா, பாகிஸ்தான் வரை கடுமையான மழைப் பொழிவை ஏற்படுத்தியது. நீலகிரியில் மலைத்தொடரின் அமைப்பு, மேக கூட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையில் உள்ளது. மலைப்பகுதியில் காணப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டு, புல்வெளிகளாகவும், தேயிலை தோட்டங்களாகவும் மாறியுள்ளது. மழை பொழிவை ஏற்படுத்தும் உயிர் வேதிப்பொருட்கள் இவற்றில் கிடையாது.

மாறாக இயற்கையாக வனப்பகுதியில் வளரும் மரங்கள் மட்டுமே மேக கூட்டங்களை கலைத்து, நீராவியை குளிர்வித்து மழைப் பொழிவை ஏற்படுத்த முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மலைகளின் மேல் பரப்பில் மழைக்காடுகள் மற்றும் இயற்கையாக வளர்ந்து காணப்பட்ட மரங்களை அழித்ததாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயம் பாதிக்கும்



சர்வதேச பொருளாதாரத்தில் தேயிலை தோட்டங்கள் முக்கிய பங்கு வகித்தாலும், எதிர்காலத்தில் இவை மலை மாவட்டத்தில் இயற்கை பாதிப்பை ஏற்படுத்தும். இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகள், நீர்வளம் குறைந்து, மலைப்பகுதியில் விவசாய உற்பத்தி வெகுவாக குறையும் அபாயமும் உண்டு.

இதைத்தவிர்க்க வனப்பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய கிராம பகுதிகளில், அதிக அளவிலான சோலை மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் வெட்டப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்களையும்; இயற்கை வளங்களையும் அழிப்பதை முழுமையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே எதிர்கால பாதிப்பினை குறைக்க இயலும்.



வாசகர் கருத்து (4)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ...

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஒரு பக்கம் மக்கள்தொகை பெருக்கம் இன்னொரு பக்கம் அவர்களின் அழிக்கும் திறன் , எங்கேதான் போயி முடியுமோ என்றுள்ளது

  • CBE CTZN - Coimbatore,இந்தியா

    தேயிலை தோட்டங்கள், பண்ணைகள், காய்கறி தோட்டம், கணக்கில் இல்லா தங்கும் விடுதிகள், விதிமுறை மீறிய கட்டிடங்கள், இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் பூரண அசிர்வாதத்துடன்கடந்த ஆண்டுகளில் நடந்தவை.. விழிப்புணர்வு மக்களிடம் இருக்கிறது, ஆனால் அரசு அதிகளிகளிடம் இல்லாததே முழு காரணம்.. அவர்கள் தான் சுற்றுசூழல் மாற காரணம் , இயற்கையை நாசம் செய்த குற்றவாளிகள்

  • ராஜா -

    இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி உல்லாச விடுதிகள் கட்டுங்க, நன்றாக மழை பெய்து ஆறு குளம் எல்லாம் நிரம்பி விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement