'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கோஷம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தர, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், குழு ஒன்றையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமித்துள்ளது. இது, நான்காவது குழுவாகும். ஏற்கனவே சட்ட ஆணையம், நிடி ஆயோக் மற்றும் பார்லிமென்ட் நிலைக்குழு போன்றவை, இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்துள்ளன.
இருப்பினும், ஒரே நாடு; ஒரே தேர்தல் பற்றி தற்போது ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு, ராம்நாத் கோவிந்தை தலைவராக நியமித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ௨௦௧௮ல் அவர் ஜனாதிபதியாக இருந்த போது, பார்லிமென்டில் நிகழ்த்திய உரையில், 'நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது, மனித சமூகத்தின் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அடிக்கடி அமலுக்கு வருவதால், வளர்ச்சித் திட்ட பணிகளும் பாதிக்கப்படுகின்றன' என்று தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே, தேர்தல் என்பது அதிக பணம் மற்றும் கால விரயத்தை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் அன்றாட செயல்பாடு களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. அதனால், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தலை ஒன்றாக நடத்துவது, அரசு நிர்வாகம் செம்மையாக நடைபெற உத்வேகம் தரும்.
ஆனாலும், திடீரென ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தினால், தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட பல மாநில அரசுகள் பாதிக்கப்படும் என்பதால், அந்த மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 'மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ., பெரிய அளவிலான தேர்தல் ஆதாயத்தை பெறவே, இந்த முறையை அமல்படுத்த முற்படுகிறது. இது, சரியல்ல' என்றும் விமர்சித்துள்ளன.
அதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் லோக்சபா தேர்தலை ஒரு கோணத்திலும், சட்டசபை தேர்தலை மற்றொரு கோணத்திலும் மக்கள் பார்க்கும் நிலையே உள்ளது. உதாரணமாக, ௨௦௧௮ டிசம்பரில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அடுத்து, ௨௦௧௯ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 'ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்தும் போது, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல ஓட்டுகளை பதிவு செய்வது மக்களுக்கு ஒன்றும் சுமையாக இருக்காது' என, சட்ட ஆணையம் தெரிவித்துள்ள பரிந்துரையையும் புறக்கணிக்க முடியாது.
இருப்பினும், இந்த முறையை அமல்படுத்த வேண்டும் எனில், அரசியல் சட்டத்திலும் மற்றும் சட்ட ரீதியான விஷயங்களிலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்தலில் தேசிய அளவிலான பிரச்னைகளை அரசியல் கட்சிகள் முன்னிறுத்தும் போது, மாநில அளவிலான பிரச்னைகள், உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடலாம். அவை மறைக்கப்பட்டு விடலாம். எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது, பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.
தற்போது, இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்ய குழு தான் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்ததும், அதுபற்றி பொதுமக்கள் கருத்தை கேட்டறிய வேண்டும்; பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்; அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என, பல நடைமுறைகள் உள்ளன. எனவே, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், இந்த முறை நாட்டில் அமலானால், அது நம் ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். ஒருமித்த கருத்து உருவாகாவிட்டாலும், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில் அமல்படுத்துவதே சரியாக இருக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!