Load Image
Advertisement

'கஞ்சா' வாலிபர்கள்கிட்ட பேசுறாங்க 'செம டீல்' கலெக்டருக்கு தங்கமோதிரம் போட வசூல்

சித்ராவும், மித்ராவும் கார்ப்பரேஷன் ஆபீஸ் அருகே, ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, டீ சாப்பிட கேன்டீனுக்குள் நுழைந்தனர்.

''மினிஸ்டர் சொல்லியும் கூட, ரெண்டு நாள் கழிச்சு தான் கையெழுத்து போட்டாங்களாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமாப்பா... உண்மைதான்! கட்சிக்காரங்களுக்கு ஏதாச்சும் செஞ்சு கொடுமான்னு மினிஸ்டர், தனக்குரிய ஸ்டைலில் அன்னிக்கு சொன்னதால, பயந்திருப்பாங்கன்னு நெனச்சு, நுால் விட்டு பார்க்கறதுக்காக, ஒரு ஆபீசரை அனுப்பி வச்சிருக்காங்க.

வந்தவரை, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிட்டாங்களாம். வ.உ.சி., பூங்காவுக்கு ஆய்வுக்கு போனப்போ, மைதானத்தில் என்ன நடக்குதுன்னு விசாரிச்சிருக்காங்க.

''மேலிட அழுத்தம் தாங்க முடியாம, கல்யாணத்துக்கு முந்தின நாள் கையெழுத்து போட்டிருக்காங்களாம். ஜனதா கட்சியில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு தாவிய நிர்வாகிதான், கண்காட்சிக்கு பொறுப்பாம். பைல் டீல் பண்ண அதிகாரிகள் பலரும், அ.தி.மு.க.,வினருக்கு நெருக்கமானவங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு லட்சக்கணக்குல பணம் கொடுத்தாங்களே... 'டாஸ்மாக்' வசூல் பணமா...''

''அதெல்லாம் இல்லப்பா... திருச்சிக்காரர் சகோதரர் முன்னிலையில் பட்டுவாடா நடந்திருக்கு. மொத்தமுள்ள, 100 வார்டுகளில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் என, 96 பேரு இருக்காங்க.

இதுல, 94 பேருக்கு பணம் பட்டுவாடா ஆயிருக்கு; பணம் வாங்காத ரெண்டு பேரு யாருன்னு தெரியலை. கட்சியில முக்கியப் பொறுப்புல இருக்குற நிர்வாகிகள் சில பேருக்கும், லட்சக்கணக்குல பெரிய தொகை கொடுத்தாங்களாம்,''

ஆளுங்கட்சியில மா.செ.,க் களை மாத்தப் போறதா சொன்னாங்களே...'' என, ரூட் மாறினாள் மித்ரா.

''எந்த மாற்றமா (!) இருந்தாலும், சி.எம்., விசிட்டுக்கு அப்புறம் தானாம். 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) வர்ற சி.எம்., திருப்பூர்ல தங்குறாரு. 23ம் தேதி நிகழ்ச்சியை, 'ரகசியமா' வச்சிருக்காங்க. 24ம் தேதி காங்கயத்துல நடக்குற பூத் கமிட்டி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, சென்னைக்கு திரும்பிப் போகப் போறாராம்,''

''அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லாததால, கோவையில நிகழ்ச்சி நடத்த யாரும் ஆர்வம் காட்டலையா...''

''உண்மைதானே! ஊரே திரும்பி பார்க்குற மாதிரி, அவரை மாதிரி, கரன்சியை அள்ளி விட்டு, தடபுடலா நிகழ்ச்சி நடத்துறதுக்கு, யாருமே இல்லைன்னு நினைக்கிறாங்க போலிருக்கு.

''இருந்தாலும், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட ஆய்வு கூட்டம் நடத்துறதுக்கு சி.எம்., ஆபீசுல அனுமதி கேட்டிருக்காங்க. அங்கிருந்து போலீஸ் சைடுல 'ரிப்போர்ட்' கேட்டிருக்காங்க.

விநாயகர் சதுர்த்தி வருது; விசர்ஜன ஊர்வலம் நடக்கும். அந்த சமயத்துல, விரும்பத்தகாத சம்பவம் நடந்துருச்சுன்னா, சங்கடம் வந்துரும்னு 'ரிப்போர்ட்' கொடுத்திருக்காங்க. அதனால, 'சி.எம்.ரெவ்யூ' மறுபடியும் தள்ளிப் போகுதாம்,''

கேன்டீனில் இருந்து வெளியே வந்த இருவரும், ரோட்டோரத்தில் நடந்து சென்றனர்.

''லோக்சபா எலக்சனுக்கு முன்னாடி, ஆளுங்கட்சியில மாற்றம் வருமா,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.

''சி.எம்., வந்துட்டு போனதுக்கு அப்புறம், கோவையை களையெடுக்கப் போறாங்களாம். அதுக்கு முன்னாடி, எவ்வளவு முடியுமோ அவ்ளோ சம்பாதிக்கலாம்னு, ஆளாளுக்கு கல்லாவை நிரப்பிட்டு இருக்காங்க.

இரட்டையர் போல், ஒரே காரில் வலம் வர்ற ரெண்டு பொறுப்பாளர்களும் பண்ற அட்ராசிட்டியில, ஆளுங்கட்சிக்காரங்க புலம்பித் தள்ளுறாங்க. அமைப்பாளர்கள் நியமிக்கிற விஷயத்துல மட்டும், மூணு லட்சம் முதல், 15 லட்சம் வரை வசூல் பண்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

கோனியம்மன் கோவிலுக்கு வெளியே நின்றிருந்த போலீஸ் ஜீப்பை பார்த்த மித்ரா, ''பொருளாதார குற்றப்பிரிவுல இருக்குற, லேடி போலீசார் ரொம்பவே மன உளைச்சலில் இருக்காங்களாமே... இதெல்லாம் போலீஸ் கமிஷனர் கவனத்துக்கு போகாமலா இருக்குது,''

''மித்து! அந்த பிரிவுல இருக்குற ஆபீசர், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அலுவலர்களை, மரியாதை குறைவா பேசுறதை வழக்கமா வச்சிருக்காரு. அவரு சொல்றதை கேட்டு, 'பக்குவமா' நடந்துக்கிட்டா, மரியாதை கொடுக்குறாரு.

இல்லைன்னா... அவரு கொடுக்குற டார்ச்சர் தாங்க முடியலையாம்; எப்படா... இந்த செக்சன்ல இருந்து டிரான்ஸ்பராகி போக முடியும்னு, லேடி போலீசார் காத்துக்கிட்டு இருக்காங்க... இதெல்லாம் கமிஷனர் கவனத்துக்கு இதுவரைக்கும் போகாம இருக்கறது, உளவுத்துறை இன்னமும் வீக்கா இருக்கோன்னு தோணுது,''

''அக்கா... பீளமேடு போலீஸ்காரங்க கிட்ட, ஒரு குரூப் தில்லா பேரம் பேசுச்சாமே...''

''நானும் கேள்விப்பட்டேன்... வெவரமா சொல்றேன் கேளு. பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் பஸ் ஸ்டாப் பக்கத்துல, போன வாரம் விடிகாலை 1:30 மணிக்கு அதிவேகமா வந்த ஒரு கார் விபத்துக்குள்ளாச்சு.

அந்த வழியா, ஒன்றரை வயசு குழந்தையோட வந்த பேரன்ட்ஸ் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பிச்சாங்க. அந்த காருக்குள்ள நாலு இளைஞர்கள் இருந்திருக்காங்க; அவுங்க கஞ்சா போதையில, நிற்கக் கூட முடியாம, தள்ளிட்டு இருந்திருக்காங்க. போலீஸ்காரங்க 'என்கொயரி' செஞ்சப்போ, 'அஞ்சு லட்சம் ரூபா தர்றோம்; கம்முன்னு போங்க'ன்னு பொதுமக்கள் முன்னாடியே 'டீல்' பேசியிருக்காங்க,''

''அப்புறம்... என்னாச்சு. டீலுக்கு ஒத்துக்கிட்டாங்களா, இல்லை... அந்த பசங்க கம்பி எண்ணுறாங்களா...''

''அவுங்க மேல, போதையில் வண்டி ஓட்டுனதா கேஸ் போட்டிருக்கறதா போலீஸ் தரப்புல சொல்றாங்க. இந்த விவகாரத்துல, கமிஷனர் நேரடியா விசாரிச்சா, பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்னு சொல்றாங்க,''

''அக்கா... போலீஸ் கமிஷனர் ரொம்ப நல்லவரா இருக்காரு. ஊருக்கும், மக்களுக்கும், போலீஸ் குடும்பத்துக்கும் நல்லது செய்யணும்னு நினைக்கிறாரு. ஆனா, அவருக்கே தெரியாம, ஸ்டேஷன் லிமிட்டுக்குல இருக்கறவுங்க, வசூல் ராஜாக்களா இருக்காங்க...''

''ஒரே ஒரு சம்பவத்தை உதாரணமா சொல்றேன். சிங்காநல்லுார் பிரபல பெட்ரோல் பங்க் எதிரே இருக்கிற ரெண்டு மாடி கட்டடத்துல சூதாட்ட கிளப் நடந்துட்டு இருந்துச்சு; 'ஸ்பெஷல் ஸ்குவாடு' ரெய்டுக்கு போயி, மூட வச்சிட்டாங்க.

ஸ்டேஷன்ல இருந்து மாமூல் பேசி, மறுபடியும் திறந்துட்டாங்க; கோடிக்கணக்குல பணம் புரளுது. ஏகப்பட்ட பேரு லட்சக்கணக்குல பணத்தை பறிகொடுத்துட்டு போறாங்க. கட்டடத்தை சுத்தியும் அடியாட்களை வச்சு, 'வாட்ச்' பண்ணிட்டு இருக்காங்க.

இதையெல்லாம், கமிஷனருக்கே தெரியாம மறைச்சிட்டு இருக்காங்க. அப்பப்போ, இவரும் ஸ்டேஷன் விசிட் போனா நல்லாயிருக்கும்னு, உளவுத்துறை போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,''

இருவரும் பேசிக்கொண்டே, லங்கா கார்னர் வரை நடந்து வந்து விட்டனர். அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

நோயாளிகளுக்கு பரிவுடன் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியர்களை பார்த்த மித்ரா, ''சேலத்தை சேர்ந்த ஒருத்தரு, செவிலியர் பயிற்சி கொடுக்குற முக்கியப் பொறுப்புல இருக்காரு; மூன்றெழுத்து அதிகாரியான அந்த லேடி, சில நாட்களுக்கு முன்னால நிலம் வாங்கியிருக்காரு. பத்திரப்பதிவு செய்றதுக்கு சாட்சி கையெழுத்து போட, செவிலியர் மாணவியரை அழைச்சுட்டு போயிருக்காங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும்... அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கெடைச்சதுனால... கலெக்டர் பெயரை சொல்லி, கலெக்சன் பண்ணிட்டு இருக்காங்களாமே...''

''ஆமா மித்து! உண்மைதான்! துாய்மை பணியாளர்கள் பலரும் ஊதிய உயர்வு கேட்டு, ரொம்ப நாளா போராடிட்டு இருந்தாங்க; கலெக்டர் நிர்ணயிச்ச சம்பளம் கொடுக்கப் போறாங்களாம். அதனால, 'கலெக்டருக்கு சாதாரணமா நன்றி சொன்னா பத்தாது; தங்கத்துல மோதிரம் வாங்கிப் போடனும்'னு சொல்லி, துாய்மை பணியாளர்கள்கிட்ட ரூ.1,000, ரூ.2,000ம்னு வசூல் பண்ணிட்டு இருக்காங்களாம்...''

''அடக்கொடுமையே... இப்படியுமா வசூல் பண்ணுவாங்க...'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இருவரும், மீண்டும் விக்டோரியா ஹால் நோக்கி, நடக்க ஆரம்பித்தனர். செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று, லங்கா கார்னரை கடந்து சென்றது.

அதை கவனித்த சித்ரா, ''மாசு கட்டுப்பாடு வாரியத்தினரும், வருவாய்த்துறையினரும் இணைஞ்சு தொண்டாமுத்துார் ஏரியாவுல, செங்கல் சூளைகளை 'சீல்' வச்சாங்க. அந்த செங்கல் சூளைகளில் இருந்து, சட்ட விரோதமா செங்கல் கடத்திட்டு போறாங்களாம்... வழக்கம்போல போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லை; நமக்கேன் வம்புன்னு ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரங்களும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்களாம்.

''இதே மாதிரி, அன்னுார் தாசபாளையம் குளத்திலும் ராத்திரி நேரத்துல லோடு கணக்கில் மணல் கடத்திட்டு போறாங்களாம். நீர் நிலைகள்ல வண்டல் மண் அள்ள அனுமதி வாங்கியிருந்தாலும், வி.ஏ.ஓ., முன்னிலையில காலை, 10:00ல இருந்து சாயங்காலம், 5:00 மணி வரைக்கும் தான் எடுக்கணும். ஆனா, அன்னுார்ல, நைட் நேரத்துல தான், மணல் கடத்திட்டு போறாங்க...'' என்றாள்.

கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த மித்ரா, ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் 13 பேரை, வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கி அடிச்சாங்களாமே..'' என, ரூட் மாறினாள்.

''அது, விற்பனை பத்திரம் கொடுக்காம இழுத்தடிப்பு செஞ்சது; கிரையம் செய்றதுல முறைகேடு செஞ்சதுக்காக, டிரான்ஸ்பர் செஞ்சிருக்கறதா, அந்த ஆபீசுல பேசிக்கிறாங்க,''

''அதே ஆபீசுல தி.மு.க.,வை சேர்ந்த, சின்னதா பேருள்ள லேடி ஆபீசர் முக்கியமான பொறுப்புல இருக்காங்க. கரன்சி இல்லாம எந்த வேலையும் செய்றதில்லையாம்.

இந்த ஆபீசுல இருக்குற அலுவலர்கள் யாரும் தனக்கு ஒத்துழைக்கிறதில்லைன்னு, செயற்பொறியாளரிடம் புகார் சொல்லியிருக்காராம்.

அவுங்ககிட்ட விளக்கம் கேட்டப்போ, லேடி ஆபீசர் மேல பக்கம் பக்கமா புகார் எழுதிக் கொடுத்திருக்காங்க... யார் மேல நடவடிக்கை எடுக்கப் போறாங்கன்னு தெரியலை...'' என்ற சித்ரா, மீண்டும் கார்ப்பரேஷன் ஆபீசுக்குள் நுழைந்தாள்.

அவளை பின்தொடர்ந்து சென்ற மித்ரா, மண்டல தலைவர் ஒருவரின் காரை பார்த்ததும், ''கல்யாணம் தடபுடலா நடந்துச்சாமே... ஏதாச்சும் விசேஷமா... சொல்லும்படியா...'' என, வம்புக்கு இழுத்தாள்.

''மாஜியும்... இவுங்க குடும்பமும் பங்காளி வகையறா. வரவேற்பு நிகழ்ச்சிக்கு 'மாஜி' குடும்பமும், அன்பானவர் குடும்பமும் வந்திருந்து, ரொம்ப நேரம் இருந்து, மணமக்களை வாழ்த்தியிருக்காங்க. கல்யாண நிகழ்ச்சிக்கு 'மாஜி'யும் போயிருக்காரு,'' என்றாள் சித்ரா.

வீட்டுக்குச் செல்ல, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement