சுப்ரபாரதி மணியன்
கட்டுரையாளர், எழுத்தாளர். நாவல்,சிறுகதை நுால்கள், நாடக தொகுப்பு,கவிதைகள், கட்டுரைகள் என, 95 படைப்புகளைவெளியிட்டுள்ளவர். ஜனாதிபதியிடம் 'கதா' விருதும்,
தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருதும்பெற்றவர். இவரது சிறுகதைகள் பல இந்திய
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஒரு எழுத்தாளன், படைப்பாளியின் பார்வை, வாசிப்பு மற்றும் அனுபவம், எந்த நிலையில் இருக்கிறதோ, அதையொட்டி தான் அவர்களது படைப்புகளும் இருக்கும். துவக்கத்தில், எளிமையான கவிதை வாயிலாக தனது படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள், பின், நாவல் எழுதுவது போன்ற நிலைக்கு உயர்கின்றனர்.
இலக்கியம் என்பது, சமூகப் பயன்பாட்டுக்கான ஆயுதம்; சமூக சீர்திருத்தத்திற்கான விஷயம். சமூகத்தில் நடக்கும் விஷயங்களை எழுதுவதன் வாயிலாக, அது சரித்திரமாக மாறுகிறது; மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
பழமையே பெருமை
இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், மொழி என்பது மிகப்பழமையானது இயற்கையும், செழுமையும் நிறைந்தது நம் நாடு. ஆனால், மற்ற நாடுகளுக்கு மொழி சார்ந்த வயது இல்லை. எனவே, நம் நாட்டின் மீது பற்றுடன் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் மற்றும் படைப்பாளிக்கு, தான் வாழும் சமூகம் குறித்த சரியான புரிதல், அறிதல் இருக்க வேண்டும். அதற்கு, சமூகத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சமூகத்தில் நடக்கும் விஷயங்களை கலை, இலக்கிய வடிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இது, அவர்களின் சமூக கடமையும் கூட. மக்களுக்கான கல்வி, மருத்துவம் ஆகியவை, மக்களின் வரிப்பணத்தில், அவர்களுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கல்வி சார்ந்த விஷயங்கள் வணிகமயமாகிவிட்டன.
ஆங்கில வழிக்கல்வி உட்பட பல்வேறு கல்விகளைக் கற்க நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. நடுத்தர, கீழ்தட்டு மக்கள், கல்வியை மிக ஆடம்பரமாக கைகொள்ள வேண்டியுள்ளது. சிங்கப்பூர், மலேஷியா, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அடிப்படை கல்வி முதல், ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமாக வழங்குகின்றனர். அங்கு, இயல்பான முறையில் கல்வி கற்கின்றனர்.
காலத்தின் தேவை
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் 'டிஜிட்டல்மயம்' என்பது தவிர்க்க முடியாதது. அது, ஒரு வகையில் நல்லது தான். மொபைல் போன், கம்ப்யூட்டர், 'டிவி' உள்ளிட்ட டிஜிட்டல் உபகரணங்கள் வாயிலாக படிப்பதால் உடல் நிலை, கண் பார்வை கோளாறு ஏற்படுகிறது. புத்தக வாசிப்பு என்பது, மனம் மற்றும் உடல்நலத்துக்கு உகந்தது.
ஆனால், இன்றைய சூழலில் புத்தகம் எழுத, வாங்க மற்றும் படிப்பதற்கு செலவு அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்ற மனநிலையில், குறைந்த செலவில் சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் படைப்புகளை படிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்; இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாகவும், கலை, இலக்கியத்தை கொண்டு செல்ல வேண்டும்.
வாசிப்பு முக்கியம்
ஒரு மொழி என்பது புத்தக வசிப்பால் மட்டும் வாழாது; பிற ஊடகங்களையும் சார்ந்திருக்க வேண்டும் என்பதை, டிஜிட்டல் யுகம் உணர்த்துகிறது. வாசிப்பு பழக்கம், நாம் தினமும் உணவு உண்பதை போன்றது என, கருத வேண்டும். தினமும் மேற்கொள்ளும் மூச்சுப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றது தான், புத்தக வாசிப்பும். வாசிக்கும்போது தான், ஒட்டு மொத்த கவனமும் எழுத்து, புத்தகத்தின் மீது குவியும். மனதளவில் ஒருவரை சமநிலைப்படுத்த வாசிப்பு மிக முக்கியம்.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகளில், நுாலக வகுப்புகளை துவங்கி உள்ளனர். மாணவர்கள், கட்டாயம் நுாலகங்களுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
பல மொழிப்புலமை அவசியம்
பல மொழிகளில் புலமை பெறுவது நல்லது தான். இளமைக் காலங்களில் பல மொழிகளை கற்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இருப்பினும், எல்லாவற்றுக்கும் தாய்மொழிக் கல்வி தான் அடிப்படை. அந்த வகையில் தாய்மொழிக்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். பிற நாடுகளில் தாய்மொழிக்கல்வி என்பது, மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், பெரிய வல்லரசு நாடுகளாக இருந்தால் கூட ஆங்கிலத்தை நம்புவதில்லை; ஆங்கிலம் துணை கொண்டு அவர்கள் அலுவல் மேற்கொள்வதில்லை.
பொறியியல், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்து படிப்புகளையும், அவரவர் தாய்மொழியில் தான் படிக்கின்றனர். அண்டை நாடான இலங்கையில் கூட, ஒரு காலத்தில் தமிழ் வழியில் தான் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி போதிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா போன்ற நாடுகள் தான், ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தாய்மொழியில் கற்பது முக்கியமானது; பிற மொழி அறிந்து கொள்வதும் நல்லது. இன்றைய இளைய தலைமுறையினர், வாசிப்பதை விட பார்க்கவும், கேட்கவும் விரும்புகின்றனர். அந்தளவுக்கு தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இதை தவிர்க்க முடியாது. இதுவும் ஒரு வகையில் வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். வாசிப்புடன் கூடிய டிஜிட்டல் பயன்பாடு வாயிலாக கற்பனை வளம், சிந்தனை வளம் மேம்படும்.
கல்வியோடு கலை!
கல்வி திட்டங்களில், கலை இலக்கிய படைப்புகளை கொண்டு வருவது முக்கியம். கலை, இலக்கிய படைப்பு வாயிலாக தான், ஒரு தலைமுறையை சார்ந்தவர்கள், அந்த விஷயங்களை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். திடீரென ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்வதோ, படித்து தெரிந்து கொள்வதை விட, கலை, இலக்கியம் வாயிலாகவோ, பாட திட்டத்தின் வாயிலாகவோ அறிந்து கொள்ளும்போது, மனதில் சுலபமாக பதியும்.
இதை உணர்ந்து தான், தமிழக அரசு கடந்த, 2 ஆண்டுகளில், பாடநுால் திட்டங்களில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. பாட புத்தகங்களில் பல எழுத்தாளர்களின் கதை கட்டுரை, கவிதை படைப்புகளை அச்சிட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகள் கலைஞர்கள், எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அதே நேரம், அது அரசியல் சார்ந்து இருந்து விடக்கூடாது. விருது என்பது, 100 சதவீதம், தகுதியான கலைஞர்கள், படைப்புகளுக்கு போய் சேர வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு, நல்ல அரசியல் களம் இருக்க வேண்டும்; லஞ்சம், ஊழல் இல்லாத அரசியல்வாதிகளை தேர்வு செய்வது, ஒவ்வொருவரின் கடமை. ஜாதி, மதம், இனம் கடந்து, நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கும் விதமான விழிப்புணர்வை எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஏற்படுத்த வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!