Load Image
Advertisement

கட்சிப்பதவி வேணுமா... நோட்டை தள்ளு கவுன்சிலர் ராஜினாமா முடிவை விட்டுத்தள்ளு!

வீட்டுத்திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

சூடா காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, விசேஷமான செய்தி இருக்கா,'' என கேட்டாள்.

''ஆமா, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துல, ஆளுங்கட்சி லேடி கவுன்சிலரு விண்ணப்பிச்ச தகவலை கேள்விப்பட்டதும், மாவட்ட நிர்வாகமே ஆடிப்போயிருச்சாம். 'ரெவின்யூ ஆபீசர்ஸ்' அவுங்க வீட்டுக்கு நேர்ல போயி, ஆய்வு செஞ்சு, கவர்மென்ட்டுக்கு 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க,''

''இருந்தாலும், நம்ம மாவட்டத்துக்கு 'மானிட்டரிங் ஆபீசரா' போட்டுருக்கற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயஸ்ரீ மறுநாளே நம்மூருக்கு வந்து, ஏரியா வாரியா ஆய்வுக்கு போயிருக்காங்க. கலெக்டர் ஆபீசுக்கு வந்து, 'டிபார்ட்மென்ட்' வாரியா கேள்வி கேட்டிருக்காங்க.

மகளிர் உரிமைத்தொகை கள ஆய்வு பணியை வேகப்படுத்தச் சொல்லியிருக்காங்க. இப்போ, கலெக்டர் ஆபீசுல இருக்குற ஊழியர்களையும் நியமிச்சு, வீடு வீடா போகச் சொல்லியிருக்காங்க. 10ம் தேதிக்குள்ள பயனாளிகள் 'லிஸ்ட்' சமர்ப்பிக்க உத்தரவாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும்... சி.எம்., வரப்போறதா, ஆபீசர்ஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்களே...'

''சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தை கோட்டை விட்ட மாதிரி, பாராளுமன்ற தேர்தலில் கோட்டை விட்டுறக் கூடாதுன்னு, தி.மு.க., மேலிடம் உஷாரா இருக்குதாம். இந்த மாத கடைசி வார ஞாயித்துக்கிழமை, கொங்கு மண்டல தி.மு.க., பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம் நடத்த, 'பிளான்' பண்ணியிருக்காங்க.

''பொறுப்பு அமைச்சரா இருந்த, செந்தில்பாலாஜி ஜெயில்ல இருக்கறதுனால, அந்த கூட்டத்தை திருப்பூர் மாவட்டத்துல நடத்த முடிவு செஞ்சிருக்காங்க.

ஆளுங்கட்சிக்காரங்க ஆர்வம் காட்டாம இருந்தாலும், சி.எம்., தலைமையில செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நட்டு, அறிவுசார் மையத்தை துவக்கி வைக்கறதுக்கு, கார்ப்பரேஷன் தரப்புல 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க.''

''கார்ப்பரேஷன்னு சொன்னதும்...ஞாபகத்துக்கு வருது. கவுன்சில் கூட்டத்துல, மேயரும், 'சென்ட்ரல் ஜோன்' சேர்மனும் சண்டை போட்டாங்களே...''

''ஆமாக்கா, உண்மைதான்!

''மாமன்றத்தில் வெளிப்படையா, ஆளுங்கட்சியினருக்குள் நடந்த தகராறு உளவுத்துறை மூலமா, மேலிடத்துக்கு போயிருக்கு. கார்ப்பரேஷன்ல உச்சபட்ச அதிகாரம் படைச்ச அதிகாரியை, சென்னைக்கு வரவழைச்சு விசாரிச்சிருக்காங்க; அவரும் நடந்ததை புட்டுப்புட்டு வச்சிட்டு வந்திருக்காராம்,''.

இருவரும் பேசிக்கொண்டே, தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு புறப்பட்டனர். ஸ்கூட்டரில், டவுன்ஹாலை கடந்தபோது, சிக்னலில், கல்வித்துறை வாகனம் நின்றிருந்தது.

அதை பார்த்த மித்ரா, ''கல்வித்துறை பத்தி, எந்த தகவலும் சொல்லலையே...'' என, நோண்டினாள்.

''மித்து! ஸ்கூல் டிபார்ட்மென்ட்டை பத்தி எழுத ஆரம்பிச்சா... அனுமன் வால் மாதிரி, நீண்டுக்கிட்டே போகும். உதாரணத்துக்கு, ராஜவீதியில இருக்கற துணி வணிகர் கவர்மென்ட் பள்ளிக்கூடத்துல, ரெண்டாயிரத்து, 500 ஸ்டூடண்ட்ஸ் படிக்கிறாங்க; இது, லேடீஸ் ஸ்கூல். மாதவிடாய் சமயத்துல, பொம்பளைப் பிள்ளைக ரொம்பவே கஷ்டப்படுறாங்க. டாய்லெட் பராமரிப்பு மோசமாக இருக்குறதா புலம்புறாங்க. உடல் உபாதைகளால் பிள்ளைங்க கஷ்டப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.

மார்க்கெட் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தனர். கடைக்காரர்கள் ஒவ்வொருவரும், விருந்தினர்களை போல், வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கடையில், பொருட்கள் வாங்க ஆரம்பித்த மித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்களே கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டுகளை வளைச்சுப் போட்டு, காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாமே...'' என கேட்டாள்.

''அதுவா... நானும் கேள்விப்பட்டேன்! நார்த் ஜோன்ல தான், 'ரிசர்வ் சைட்'டுகளை கபளீகரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஜோனுக்கு பொறுப்பானவரும், 'சிட்டி மம்மி'க்கு வழிநடத்தக்கூடிய வேலானவர், ரிசர்வ் சைட்டுகளை 'பார்க்கிங்' ஏரியாவா மாத்தி, கலெக்சன் பார்த்துட்டு இருக்காராம். கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் 'சைலன்ட் மோடுல' இருக்காங்களாம்,''

'அப்படியா,'' என கேட்டு, வாயைப்பிளந்த மித்ரா, ''ஆளுங்கட்சியை சேர்ந்த இன்னொரு குரூப், கட்சிப்பதவி வாங்கித்தர்றோம்னு, கரன்சி நோட்டுகளை அள்ளுதாமே... சிலருக்கு பதவி கெடைக்கிறதுனால... நெறையப் பேரு கரன்சி கட்டுகளோட அலையுறாங்களாமே...''

''உண்மைதான்... பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி, ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப் போறாங்களாம். செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 'சைலன்ட்' ஆகிட்டாங்க; அவரை நம்பி, மாற்றுக் கட்சியில இருந்து வந்தவங்களும் ஒதுங்கி நிக்கிறாங்க. ஏற்கனவே கோடிக்கணக்குல செலவழிச்சவங்க, கட்சி ஆபீஸ் பக்கம் எட்டிப் பார்க்கறதே இல்லை. இப்போதைக்கு, 'மாஜி'யோட கை ஓங்கி இருக்கு.''

''இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு, சேலத்துல நடக்கப் போற மாநாட்டை காரணம் காண்பிச்சு, புறநகர் வடக்கு பகுதியில், உடன்பிறப்புகள் வசூல் வேட்டையில் இறங்கிட்டாங்களாம்.

கரன்சி வாங்கிட்டு, பதவி போட்டுக் கொடுக்குறாங்களாம்; 25 வருஷமா கட்சிக்காக உழைச்சவங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காம இருக்கறதுனால, 'சீனியர்'கள் 'அப்செட்'டுல இருக்காங்க,'' என்றபடி, பழங்கள் வாங்க ஆரம்பித்தாள் சித்ரா.

''அக்கா, ஆளுங்கட்சி கவுன்சிலரும், கட்சி நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்யப் போறாதா, சமூக வலைதளத்துல ஒரு பதிவு வைரலாச்சே... விசாரிச்சீங்களா...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.

''அதுவா... சூலுார் ஒன்றியத்துல இருக்கற தி.மு.க., கவுன்சிலரின் கணவர், தனது மனைவி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போறதா தகவல் பரப்புனாரு. அவருக்கு ஆதரவா, துணை தலைவரும் பதிவு போட்டதும், ஆளுங்கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டிருக்கு. கட்சி நிர்வாகிகள் அவுங்களை 'மீட்' பண்ணி, சமரசம் பேசியிருக்காங்க. அதனால, ராஜினாமா முடிவை இப்போதைக்கு ஒத்திவச்சிருக்காங்களாம்,''

''தி.மு.க.,வை பத்தி, விலாவாரியா பேசுனீங்க... அ.தி.மு.க.,வுல என்ன நடக்குதுன்னு சொல்லவே இல்லையே... ''

''ஜவுளிக்கடை ஆரம்பிச்சிருக்காங்களே... அதை கேட்குறீங்களா... அடுத்ததா, மிகப்பெரிய ஓட்டல் ஆரம்பிக்கவும், ஐடியா வச்சிருக்காங்களாம்...''

''அக்கா... நான் அதை கேட்கலை. கொங்கு மண்டல அ.தி.மு.க.,விலும் ஜாதிப்பிரச்னை கொழுந்து விட்டு எரியுதாமே...''

''அ.தி.மு.க.,வுல குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதிக்கம் இருக்குங்கிற கம்ப்ளைன்டை மறைக்கிறதுக்கு, சமுதாயத்துக்கு ஒன்னுன்னு, மூணு மாவட்ட பொறுப்பை பிரிச்சுக் கொடுத்தாங்க. மாவட்ட பொறுப்புல இருக்கறவங்க, அந்தந்த மாவட்டத்துல, அவுங்க சார்ந்திருக்கிற சமுதாயக்காரங்களுக்கே முன்னுரிமை தர்றதா புகார் கெளம்பி இருக்கு. போரை வழி நடத்துபவரின் பெயரை கொண்ட மாவட்டத்தில், ஜாதிப்பாகுபாடு உச்சத்தில் இருக்குதாம்,''

''சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றியத்தில், முக்கியப் பொறுப்பிலுள்ள ஒருவர், மற்றவர்களை பகிரங்கமாகவே திட்டுறாராம். மாவட்டத்திடம் சொன்னால், அவரும் கண்டுகொள்வதில்லையாம்,'' என்ற சித்ரா, பில் தொகை கொடுத்து விட்டு, கடையை விட்டு வெளியேறினாள்.

ஸ்கூட்டரை மித்ரா எடுக்க, பின் இருக்கையில் சித்ரா அமர்ந்து கொண்டாள். ஒப்பணக்கார வீதி, மில் ரோடு வழியாக, அவிநாசி ரோடு மேம்பாலத்தை வந்தடைந்தனர்.

காந்திபுரம் செல்ல ஸ்கூட்டரை திருப்பிய மித்ரா, ''அ.தி.மு.க., ஆட்சியில் செல்வாக்கா இருந்த, கார்ப்பரேஷன் லேடி ஆபீசர், இந்த மாசத்தோட 'ரிட்டையர்' ஆகப்போறாங்களாமே...'' என, துாண்டில் போட்டாள்.

''ஆமா, மித்து! அந்த லேடி ஆபீசர், நகரமைப்பு அதிகாரியா இருந்தப்போ, ஏகப்பட்ட விதிமீறலில் ஈடுபட்டிருக்காரு. கடைசி நாளில், 'சஸ்பெண்ட்' ஆகலாம்னு சொல்றாங்க. அப்படியொரு சூழல் வரக்கூடாதுன்னு, இப்பவே, காய் நகர்த்திட்டு இருக்காங்களாம். பழைய பைல்களை துாசி தட்டி, சென்னையில இருக்குற உயரதிகாரிகளுக்கு, ஒரு குரூப் 'பேக்ஸ்' அனுப்பிட்டு இருக்குதாம்,'' என்றாள் சித்ரா.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து சென்றபோது, பஸ் ஸ்டாண்டில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லக் கூடிய பஸ் வெளியே வந்தது.

அதைப்பார்த்த மித்ரா, ''மேட்டுப்பாளையம் நகராட்சியில, இரண்டாயிரம் குடிநீர் கனெக்சன் இல்லீகலா கொடுத்திருக்காங்களாம். இதுக்கு நகராட்சியில 'ரிக்கார்டு' இல்லையாம். இருந்தாலும், போலி பில் புக் வச்சு, கட்டணம் வசூலிக்கிறாங்களாம்,'' என்றபடி, கணபதியை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

காந்திபுரம் சிக்னலில், சாலை விபத்தை தவிர்க்க, போக்குவரத்து விதிமுறையை பின்பற்ற வேண்டிய அவசியத்தை போலீசார், ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர்.

அதைக்கேட்ட சித்ரா, ''மித்து, பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்த, போலீஸ் உயரதிகாரிகள் படாதபாடு படுறாங்க. ஆனா, கீழ் லெவல் ஆபீசர்ஸ் சிலர், பொதுமக்களிடம் வாக்குவாதம் செஞ்சு, மரியாதையை கெடுத்துக்கிறாங்க,'' என்றாள்.

''அப்படியா... என்ன நடந்துருச்சுக்கா...''

''சிட்டிக்கு வி.ஐ.பி.,கள் வரும்போது, பாதுகாப்பு பணியில் இருக்கற போலீசார், வாகன ஓட்டிகளை ஒருமையில் திட்டுறாங்களாம்; வயசானவங்களா இருந்தாலும் மரியாதை இல்லாம பேசுறாங்களாம். சில நாட்களுக்கு முன் மினிஸ்டர் வந்தப்போ, பீளமேடு பகுதியில் இருந்த எஸ்.ஐ., ஒருத்தர், அந்த வழியா வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியிருக்காரு; வாக்குவாதம் முற்றிஇருக்கு.

வாகனத்தில் வந்த வாலிபரை, சக போலீஸ்காரங்க சமாதானம் செஞ்சு, அனுப்பி வச்சாங்களாம். கேரளாவில் பொதுமக்களை போலீசார், ஒருமையில் பேசக்கூடாதுங்கிற உத்தரவு நடைமுறையில் இருக்காம்; அதேமாதிரி, நம்ம மாநிலத்திலும் உத்தரவு போடணும்னு பொதுமக்கள் எதிர்பார்க்கிறாங்க,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் சித்ரா.

அதைக்கேட்டு, சிரித்துக் கொண்டே ஸ்கூட்டரை ஓட்டினாள் மித்ரா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement