Load Image
Advertisement

மின்னும் ஆபத்து!

நகப் பூச்சுகளிலும், அலங்காரப் பொருட்களிலும், ஆடைகளிலும் பயன்படும் ஜிகினாவால், நீரில் வாழும் பாக்டீரியா பாதிக்கப்படுவதாக பிரேசில் நாட்டு சாவொ பவுலொ பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

'பாலிஎத்திலீன் டெரெப்தாலேட்' (பி.இ.டி) அல்லது 'பாலிவினைல் குளோரைடு' (பி.வி.சி) ஆகிய வேதிப் பொருட்கள் சிறிய அலுமினிய துகள்களின் மீது பூசப்பட்டு, ஜிகினா உருவாக்கப்படுகிறது.

இவை மிகச் சிறியவை என்பதால் கழிவுநீரைச் சுத்திகரிக்கும்போது நீக்க முடியாது. அதனால் இவை அப்படியே கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை அடைகின்றன.

நீலப் பச்சைப் பாசி என்று அழைக்கப்படும் 'சயனோபாக்டீரியா' நீர்வாழ் தாவரங்களில் நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன. இவை சூரிய ஆற்றலைக் கொண்டு, ஒளிச்சேர்க்கை வாயிலாகத் தங்கள் உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களின் முக்கிய உணவாகவும் உள்ளன என்பதால், நீர்நிலைகளின் சூழலியலுக்கு மிகவும் இன்றியமையாதவை. ஆனால், இந்த ஜிகினா இவற்றில் படிந்து ஒளிச்சேர்க்கை சரியாக நடைபெறாதபடி தடுத்துவிடுவதால், 'சயனோபாக்டீரியா'க்கள் அழிகின்றன.

ஆய்வாளர்கள் 'சயனோபாக்டீரியா' வகையைச் சேர்ந்த 'மைக்ரோசிஸ்டிஸ் ஏருகினோசா', 'நோடுலேரியா ஸ்புமிகேனா' என்ற இருவேறு இன பாக்டீரியாக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவற்றை, ஆய்வுக் கூடத்தில் 21 நாட்கள், ஒரு லிட்டருக்கு 0, 50, 100, 200, 350 மி.கி. என்ற வெவ்வேறு அளவு ஜிகினா கலந்த தண்ணீரில் வளர்த்தனர். ஜிகினாவின் செறிவு கூடக்கூட பாக்டீரியாவில் பாதிப்பு அதிகரிப்பதை ஆய்வுப்பூர்வமாகக் கண்டனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களால் செய்யப்பட்ட ஜிகினாவைப் பயன்படுத்துவது ஒன்றே இதற்குத் தீர்வாகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement