Load Image
Advertisement

வேளாண்துறை சரியான திட்டமிடல் இல்லை

ப.வேலுச்சாமி
கட்டுரையாளர், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட (பி.ஏ.பி.,) வெள்ளக்கோவில் நீர்பாசன பாதுகாப்பு சங்க தலைவர். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரி.சில ஐரோப்பிய நாடுகளில், பணியாற்றியவர்.விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாட்டால், சொந்த ஊர் திரும்பி, விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழைநீர், வீணாக கடலில் கலந்தது. அக்கால கட்டத்தில், கொங்கு மண்டலம் கடும் வறட்சியில் இருந்தது. மானாவாரி சாகுபடியில் மட்டுமே விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். கடந்த, 1960களில், அப்போதைய முதல்வர் காமராஜர் மற்றும் வி.கே.பழனிசாமி ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால், பொறியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்த நீரை கிழக்கு நோக்கி திருப்பினர்.

விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, பி.ஏ.பி., பாசன திட்டம், இன்று கொங்கு மண்டலத்துக்கு பயனளிப்பதாக மாறியது. தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அக்கால கட்டத்தில் கூட பாறை, மலைகளை குடைந்து, பல இடங்களில் சுரங்கப்பாதை அமைத்து, ஆங்காங்கே, ஒன்பது அணைகள் கட்டி, ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தனர். காண்டூர் கால்வாய் கட்டுமானம், நீர் மேலாண்மையில் ஒரு விந்தை என்று சொல்வதில் மிகையில்லை.

கானல் நீர்



இன்று, தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பொறியியல் நிறுவனங்கள் அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் இருந்தும் கூட, காண்டூர் கால்வாயில், முழுமையான தண்ணீர் பாய ஒரு நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக, காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் வரும், சுரங்கப்பாதை (Tunnel) படுமோசமாக உள்ளது. கால்வாய் அமைக்கப்பட்ட பின், ஒரு முறை கூட இந்த சுரங்கப்பாதை துார்வாரப்படவில்லை. இதுபோல, மொத்தம், நான்கு இடங்களிலும் இதே நிலையைத்தான் பார்க்க முடிகிறது.

நீர்வளத்துறையில், 100க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், 134 பாசன தலைவர்கள், ஒன்பது பகிர்மான குழு மற்றும் ஒரு திட்டக்குழு என இத்தனை கட்டமைப்பு இருந்தும் கூட, காண்டூர் கால்வாயில் முழுமையான தண்ணீர் வருவதில்லை.

பி.ஏ.பி., வாய்க்கால் பாசனம் என்பது புஞ்சைப் பயிருக்கான திட்டம். 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த, நான்கைந்து ஆண்டுகளில், தேவைக்கு மிகுதியாகவே மழை பெய்தது.ஆனால், சுரங்கப்பாதை சுத்தம் செய்யப்படாததால், குப்பைகள், முறிந்த மரங்கள் அடைப்பட்டு, தண்ணீர் முழுமையாக வருவது என்பது கானல் நீராகவே உள்ளது. இனியாவது, பொறியாளர்கள் குழுவினர், இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

திசை மாறும் விவசாயம்



கொங்கு மண்டலத்தில் விவசாயம் திசைமாறி சென்று கொண்டிருக்கிறது. மழைப்பொழிவு, காலநிலை மாற்றம் என அனைத்தும் மாறிவிட்டது. விவசாயத்தில், நிலையற்ற தன்மை தென்படுகிறது. கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், வெங்காயம், தக்காளிக்கு விலையில்லாததால், கலெக்டர் அலுவலகம் சென்று கொட்டினோம். ஆனால், இந்தாண்டு, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது; யாரும் எதிர்பாராத விலை கிடைத்திருக்கிறது.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், யார் ஆட்சி செய்தாலும், வேளாண்மை துறையை பொறுத்தவரை சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் துறையை பொறுத்தவரை சரியான திட்டமிடல் இல்லை. வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, மண் பரிசோதனை பிரிவு, வேளாண் பல்கலை கழகம், வேளாண் அறிவியல் நிலையம் என, விவசாய தொழில் சார்ந்து ஏகப்பட்ட துறைகள் உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் நிதி, விவசாய தொழிலுக்கென ஒதுக்கப்படுகிறது. விவசாய உபகரணங்கள், மானிய விலையில் உரம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை விவசாயிகளை முழுமையாக சென்றடைகிறதா என்ற கள அறிக்கையை அரசுகள் அலசி, ஆராய்வதில்லை. நீர்மேலாண்மையும், ஏற்ற வகையில் இல்லை; பல இடங்களில் தண்ணீர் திருட்டு நடக்கிறது.

வழிகாட்டுதல் தேவை



எந்ததெந்த பருவத்தில், என்னென்ன விளைபொருளை விளைவிக்க வேண்டும், எந்தெந்த உரங்களை பயன்படுத்த வேண்டும், எப்படி சந்தைப்படுத்த வேண்டும், விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு என்பது போன்ற வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

இயற்கை விவசாயம் மேற்கொள்வதன் வாயிலாக மகசூல் குறைவாக கிடைக்கிறது. விளை பொருட்களுக்கான விலை, சற்று அதிகமாக தான் இருக்கும். இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இயற்கை விவசாயம் என்பது, பெரியளவில் எடுபடவில்லை. விவசாய தொழில், நிலைத்தன்மையுடன் இல்லை. அதேபோல், விளை நிலங்களுக்கு நன்மை பயக்கும் தேனீ, புழு, பூச்சியினங்கள் அவசியம் வேண்டும். உயிர்வேலி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மண் வளம் காக்கவும், மழையை ஈர்க்கவும், மழைநீரை சேமிக்க வேண்டும். நாட்டின் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இப்பணியில், ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

வீடு, தெரு, விவசாய நிலம் மற்றும் புறம்போக்கு நிலமெங்கும் பரவியுள்ள அன்னிய தாவரங்களை அகற்றிவிட்டு, மண்ணுக்கேற்ற, உள்ளூர் மரம், செடியை நட்டு பராமரிக்க வேண்டும்.

எவ்வித பாரபட்சமுமின்றி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழித்தடங்களை மீட்டெடுக்க வேண்டும். இன்றைய சூழலில், விவசாயத் தொழிலில் ஈடுபட விவசாயிகள் தயாராக உள்ளனர். ஆனால், உரிய வழிகாட்டுதல் இல்லாததால் பின்வாங்குகின்றனர் என்பது தான் உண்மை.



வாசகர் கருத்து (3)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement