Load Image
Advertisement

கவுன்சிலருக்கும் வேணுமாம் மகளிர் உரிமைத்தொகை... காசுக்கு அலையுறதுல இதுவும் ஒரு வகை!

ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில் வண்டியில் போய்க் கொண்டிருந்த சித்ராவும், மித்ராவும், 'ரவுண்டானா'வில் வண்டியை நிறுத்தி விட்டு, அங்குள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

பையிலிருந்து ஏதோ விண்ணப்பங்களை எடுத்துப் பார்த்த சித்ரா, ''தெரிஞ்சவுங்க ஒருத்தவுங்க ஒரு 'பெர்த் சர்ட்டிபிகேட்'ல சின்னத் திருத்தம் பண்ண அலையா அலையுறாங்க. பல மாசமாகியும் இன்னும் கிடைச்சபாடில்லை!'' என்று ஆரம்பித்தாள்.

அதை வாங்கிப் பார்த்த மித்ரா, ''அக்கா! பெர்த், டெத் எந்த சர்ட்டிபிகேட்ல திருத்தம் பண்ணனும்னாலும், மெயின் ஆபீஸ்ல இருக்குற ஹெல்த் செக்சன்லதான் விண்ணப்பம் கொடுக்கணும். அங்க இருக்குற ஒரு லேடி, காந்தி நோட்டைக் கண்ணுல காமிக்காம, எந்த வேலையும் செய்ய மாட்டாங்க. சின்னத் திருத்தம் செய்யணும்னாலும், 5 ஆயிரம் ரூபா வெட்டியே ஆகணும்!'' என்றாள்.

குறுக்கிட்ட சித்ரா, ''அடக்கொடுமையே! பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் லஞ்சமா...!'' என்று கொந்தளிக்க, மித்ரா அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''யார் போனாலும் முதல்ல ஆயிரம் ரூபா அட்வான்ஸ் கொடுக்கணுமாம். அதுக்கு அப்புறம் சர்ட்டிபிகேட் ரெடியாயிருச்சுன்னா, அவர் கூப்பிட்டுச் சொல்லுவாராம். கார்ப்பரேஷன் ஆபீசுக்கு எதிர்ல இருக்குற பேக்கரிக்கு வரச் சொல்லுவாராம். அங்க போனா, நாலாயிரத்தை வாங்கிட்டு, ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டை, கையில கொடுத்துருவாராம்!''

''அதெப்பிடி மித்து...ஒரிஜினலை தபால்லதானே அனுப்பி வைக்கணும்!''

''அதான் இல்லை...தபால்ல ஜெராக்ஸ்தான் அனுப்புவாராம்...அவர் கேட்ட பணத்தைக் கொடுக்கலைன்னா, உங்களுக்கு சர்ட்டிபிகேட் கிடைக்காது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அதைக் கிடப்புல போட்ருவாராம்!''

''சம உரிமை சமஉரிமைன்னு இதுலதான், இப்போ சம உரிமைக்கு போராடுறாங்க போலிருக்கு...நம்ம கார்ப்பரேசன்ல ஏ.சி.,யா இருந்த ஒரு லேடி ஆபீசர், 20 வருஷமா இங்கேயே இருக்கார்னு, அவரை போன வாரம் திருப்பூருக்கு மாத்திருக்காங்க. ஆனா, அவர் ரிலீவ் ஆகாம, 'மகனுக்குக் கல்யாணம்'னு காரணம் சொல்லிட்டு, இங்கேயே மறுபடியும் போஸ்ட்டிங் வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்காராம்!''

''ஆனா ஏ.சி.,போஸ்ட்டிங்குக்கு வலுவா கேப்பாங்களேக்கா!''

''யெஸ் மித்து...இறந்து போன தி.மு.க., பேராசிரியரோட 'ரிலேட்டிவ்' ஒருத்தரைப் பிடிச்சு, இதுக்கு காய் நகர்த்துறாங்களாம்...பேரம் நடந்துட்டு இருக்குன்னு தகவல் கேள்விப்பட்டேன். கார்ப்பரேசன்ல இனிமே காசு கொடுத்தாதான் காலத்தை ஓட்ட முடியும்!''

''அதான் கார்ப்பரேசன் பேரு கெட்டுப்போச்சு...அதுலயும் மினிஸ்டர் செந்தில் பாலாஜி ஜெயிலுக்குப் போன பின்னாடி, ஆளும்கட்சியில சில பேரோட ஆட்டம் உச்சத்துக்குப் போயிருச்சு.

''வடவள்ளி தொண்டாமுத்துார் ரோட்டுல இருக்குற ஒரு வார்டோட லேடி கவுன்சிலர், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிச்சிருக்காராம்...பேருலயே 'கடாட்சத்தை' வச்சிருக்கிற அந்தக் கவுன்சிலர் கணவர், ரியல் எஸ்டேட் பண்றாராம்,''

''வசதி இருக்குறதை விடு...கவுன்சிலர்களுக்கு ஏற்கனவே 10 ஆயிரம் ரூபா மதிப்பூதியம் கொடுக்குறதால, இதை வாங்குறதுக்கு அவுங்களுக்கு தகுதியே இல்லையே...அது கூட தெரியாம கவுன்சிலரா இருக்காங்களா... உருப்பட்டது மாதிரித்தான்!''

''ஆமாக்கா! அவுங்க அம்மா வீட்டு அட்ரஸ்ல அப்ளை பண்ணுனது மட்டுமில்லாம, கள ஆய்வுக்கு வந்தவுங்கள்ட்ட, 'நான்தாங்க வார்டு கவுன்சிலர்; மறக்காம என் பேரைச் சேர்த்துருங்க'ன்னு கண்டிஷன் போட்டாராம்...,''

''மித்து! ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல, லஞ்சம் வாங்குறதுல டாப் 3 ஆபீஸ்ல, அதிகமா லஞ்சம் வாங்குறவுங்களை விஜிலென்ஸ்ல பட்டியல் போட்ருக்காங்கன்னு பேசுனோமே...!''

''ஆமா! கோவை வடக்கு, அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகா ஆபீஸ்கள்ல இருக்குற வி.ஏ.ஓ..,வுல இருந்து தாசில்தார் வரைக்கும், பல பேரு அதுல வருதுன்னு சொன்னாங்களே...!''

''அதே தான்...இந்த மேட்டர் வெளியானவுடனே, டி.ஆர்.ஓ., மூணு தாசில்தார்களையும் கூப்பிட்டு, கடுமையா கண்டிச்சிருக்காங்க...மூணு ஆபீஸ் பத்தியும் இனிமே லஞ்சம் வாங்குறதா கம்பிளைன்ட் வந்தா, மொத்தமா மாத்தி விட்ருவேன்னு 'வார்ன்' பண்ணிருக்காங்க...புரோக்கர்களை எல்லாம் வெளியேத்தச் சொல்லிருக்காங்க!''

''அட பரவாயில்லையே...!''

''மேடம் கொடுத்த 'டோஸ்'ல மூணு தாசில்தாரும், அவுங்கவுங்க ஆபீஸ்ல மீட்டிங் போட்டு, எல்லாருக்கும் எச்சரிக்கை கொடுத்திருக்காங்க...புரோக்கர்களையும் உள்ளே வர விடாதீங்கன்னு சொல்லிருக்காங்க...!''

''தாலுகா ஆபீஸ்ல புரோக்கர்களை துரத்திட்டாங்க...ஆனா நம்ம சிட்டி போலீஸ்ல கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஸ்டேஷன்ல, லஞ்சம் வாங்குறதுக்கு ஒரு ஏட்டய்யாவையே புரோக்கரா நியமிச்சு இருக்காங்களாம்!''

''என்ன மித்து சொல்ற?''

''உண்மைதான்க்கா...ஆக்சிடென்ட் கேஸ்களை பதிவு பண்றதுதான் அவுங்க வேலை. ஒரு விபத்துல ஒருத்தர் இறந்து, வண்டியை பறிமுதல் பண்ணிட்டா, முதல்ல டிரைவரை அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்புறம் ஸ்டேஷன் பெயில்ல விடுவாங்க...இதுல வண்டியை விடுறதுக்கு மட்டும் வேற எந்த ஸ்டேஷன்லயும் கேக்காத அளவுக்கு, அங்க லஞ்சம் கேக்குறாங்களாம்!''

''அப்பிடி எவ்வளவுதான் கேக்குறாங்க?''

''மினிமம் 20 ஆயிரம் கேக்குறாங்களாம்...காஸ்ட்லி காரா இருந்தா அதுக்கு மேலயாம்...இதை வசூல் பண்றதுக்குதான், ஒரு ஏட்டய்யாவை புரோக்கரா நியமிச்சிருக்காங்க. அவர்தான் பேசி வாங்கி, எல்லாருக்கும் பங்கு போட்டுக் கொடுக்குறாராம்!''

மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவ்வழியே கடந்த ஒரு பள்ளிப்பேருந்தைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''மித்து! பாஸ்கெட்பாலுக்கு பேர் போன, நம்ம துணி வணிகர் சங்க ஸ்கூலுக்கு புதுசா வந்த எச்.எம்.,மேடம், அங்க விளையாடப் போற ஸ்டூடன்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாரையும் விளையாட்டுப் போட்டிக்கெல்லாம் போகக் கூடாதுன்னு, கண்டிஷன் போடுறாங்கன்னு நம்ம பேசுனோம்....ஞாபகமிருக்கா?''

''ஓ....நல்லா ஞாபகமிருக்குக்கா...அதுக்கு அப்புறம் அங்க படிச்ச பாஸ்கெட் பால் பிளேயர்ஸ் 15 பேரு, பீளமேட்டுல இருக்குற ஒரு 'எய்டடு' ஸ்கூலுக்கு மாறிட்டாங்கன்னும் கேள்விப்பட்டேன்!''

''செம்ம 'அப்டேட்'டா இருக்குற மித்து... இது லேட்டஸ்ட் தகவல்...இப்போ நடந்த மாவட்ட அளவிலான பாஸ்கட் பால் போட்டியில, முதல் ரெண்டு இடத்தையும் அந்த 'எய்டடு ஸ்கூல்' தான் அடிச்சிருக்கு.

அதுக்கு முக்கியக் காரணம், கவர்மென்ட் ஸ்கூல்ல இருந்து அங்க போன அந்த 15 பொண்ணுங்கதான். புதுசா வந்திருக்குற சி.இ.ஓ., இந்த மாதிரி எச்.எம்.,களை எல்லாம் கூப்பிட்டு கண்டிச்சாதான், கவர்மென்ட் ஸ்கூல்கள் தேறும்!''

''படிப்பைப் பத்திப் பேசவும், ஞாபகம் வந்துச்சுக்கா...நம்ம பாரதியார் யுனிவர்சிட்டியில கேன்சர் பத்தி ஆராய்ச்சி பண்றதுக்கு, சென்ட்ரல் கவர்மென்ட்டோட ரூசா திட்டத்துல 50 கோடி ரூபா ஒதுக்கிருக்காங்க. கட்டடம், எக்யூப்மென்ட்ஸ், ஆராய்ச்சின்னு அதுக்கு கணக்குக் காமிச்சிருக்காங்க. அதுலதான் ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்குன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!''

''யார் யாருக்கு அதுல காசு போயிருக்காம்?''

''அதை விசாரிக்கத்தான், இப்போ ஒரு கமிட்டி போட்ருக்காங்க...முதற்கட்ட விசாரணையிலேயே, அப்பட்டமா ஊழல் நடக்குறது தெரிஞ்சிருக்குன்னு பேசிக்கிறாங்க...இப்போ பொறுப்புல இருக்கிறவுங்க சில பேரு மாட்டுவாங்கன்னு தெரியுது!''

தகவலைச் சொல்லி முடித்த மித்ரா, ''அக்கா! அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு ஒரு பிரெஷ் ஜூஸ் குடிக்கணும் போல இருக்கு...வாங்க போகலாம்!'' என்று எழுந்தாள்.

இருவரும் வண்டியை நோக்கி நடக்கத் துவங்கினர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement