இந்தாண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளும் நாளாக அமைந்தது. அதற்கு காரணம் நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' அனுப்பிய, 'சந்திரயான் - 3' விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனம், வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா.
நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் பயணம், 2008ம் ஆண்டு, 'சந்திரயான் - 1' விண்கலம் ஏவப்பட்டதன் வாயிலாக துவங்கியது. அந்தப் பயணம், 'சந்திரயான் - 3'ன் வாயிலாக வெற்றி அடைந்துள்ளது. அதுவும் நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்கியது, மற்றொரு சாதனையாக அமைந்துள்ளது.
இந்த சாதனையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரதமர் மோடி, தன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து, நாடு திரும்பும் போது நேரடியாக பெங்களூரு, இஸ்ரோ நிறுவனத்திற்கு சென்று விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 2019ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய, 'சந்திரயான் - 2' விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தொழில் நுட்பக்கோளாறு காரணமாக, நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்தது. ஆனாலும், அந்த விண்கலத்தில் அனுப்பிய, ஆர்பிட்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக வலம் வருகிறது.
'சந்திரயான் - 2' தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அடிப்படையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் விடா முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் சந்திரயான் - 3 விண்கலம். அது தான் தற்போது வெற்றிகரமாக நிலவில் கால் பாதித்து, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
'சந்திரயான் - 2' பயணம் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டாலும், அதன் வாயிலாக அனுப்பப்பட்டு, தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டர், சந்திரயான் - 3ன் பயணத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்பதில் மாற்றமில்லை. இந்த வார துவக்கத்தில், சந்திரயான் - 3 விக்ரம் லேண்டருக்கும், சந்திரயான் - 2 ஆர்பிட்டருக்கும் இடையே இஸ்ரோ நிறுவனம் தொடர்பை ஏற்படுத்தியது. இதுவே, விஞ்ஞானிகளுக்கு பாதி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நிலவில் அறியப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது, நம் நாட்டின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். முந்தைய சோவியத் யூனியன் ஒத்துழைப்போடு, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றிருந்தார். அதன்பின், 40 ஆண்டுகளுக்கு பிறகு, சந்திரயான் - 3ன் வெற்றிகர பயணம் வாயிலாக, இந்தியா மற்றொரு பெரும் புகழை அடைந்திருக்கிறது.
கடந்த, 2013ல் நவம்பரில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், சிகப்பு கிரகமான செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை, 2014ல் அடைந்தது. ஆறு மாதங்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த மங்கள்யான், 8 ஆண்டுகள் வரை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, பல அரிய புகைப்படங்களையும், ஆய்வுக்கு உதவும் தகவல்களையும் அனுப்பியது.
அதுவே, இந்திய விண்வெளி ஆய்வில் சிறப்பாக பங்காற்றும் நாடுகள் வரிசையில், இந்தியா இடம் பெற உதவியது. தற்போது, சந்திரயான் - 3ன் வெற்றிகர பயணம் இந்தியாவின் அடுத்தடுத்த விண்வெளி திட்ட லட்சியங்களுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் உத்வேகம் தருவதாக அமைந்து உள்ளது. இதுபோன்ற வெற்றிகள் அடுத்தடுத்து தொடர வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்!
அதே நேரம் இஸ்ரோ விஞ்ஞானிகளை குறிவைத்து சாகடிக்கும் மர்ம நபர்களை கலையெடுக்குமா இந்திய அரசு?