Load Image
Advertisement

24 மணி நேரமும் சரக்கு சப்ளை பண்ற சர்வீஸ்... ஒரு ஸ்டேஷனுக்கு ரூ.18 ஆயிரம் மாமூல் பீஸ்!

நாளிதழ்கள், 'டிவி' லேப்டாப் எல்லாவற்றையும்மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, டைப் செய்து கொண்டிருந்தாள் மித்ரா.

திடீரென உள்ளே நுழைந்த சித்ரா, ''என்ன மித்து! இத்தனை வேலையையும் எப்பிடி ஒரே நேரத்துல பார்க்குற...ரியலி நீ கிரேட்தான்!'' என்று பாராட்டினாள்.

புன்னகைத்தமித்ரா, ''வாங்கக்கா! நம்ம ஊரு ஆபீசர்கள் பல பேரு இப்பிடித்தான இப்போ ஏகப்பட்ட வேலைகளை 'இன்சார்ஜ்'ன்னு பார்த்துக்கிட்டே, அதுக்குத் தனியா 'சார்ஜ்' வாங்கிட்டு இருந்தாங்க...அதுல ரெண்டு பேரைத் துாக்கிட்டாங்க!'' என்றாள்.

மித்ராவின் தலையில் செல்லமாகத் தட்டிய சித்ரா, ''யாரையோ சொல்றேன்னு தெரியுது. ஆனா யாரை, எதுக்காகச் சொல்றேன்னுதான் தெரியலை!'' என்றாள்.

அதற்கு விளக்கமளிக்கத் துவங்கினாள் மித்ரா...

''நம்ம கார்ப்பரேஷன்ல பல வருஷமா, பல ஆபீசர்கள் அசையாம இங்கேயே ஏ.ஓ., அப்புறம் ஏ.சி.,ன்னு 15, 20 வருஷமா 'இன்சார்ஜ்' போஸ்ட்டிங்லயே, வலுவா சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. அதுல ரெண்டு ஏ.சி.,யை நேத்து துாக்கிட்டாங்க...இன்னொரு ஆபீசருக்கு வேற ஓலை ரெடியாகுதாம்!''

இடையில் அலைபேசியில் வந்த அழைப்பைப் பேசி விட்டு, மித்ராவேதொடர்ந்தாள்...

''அக்கா! கார்ப்பரேஷன்ல கட்டட அனுமதிக்கு, ஒரு வழியா 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' கொண்டு வந்துட்டாங்க. புது சாப்ட்வேர் அமலுக்கு வந்திருச்சு. சிட்டியில கட்டடம் கட்டுற இன்ஜினியர்ஸ் எல்லாம் சந்தோஷமா வரவேற்கிறாங்க...இனிமே கார்ப்பரேஷன், 'டீடிசிபி'ன்னு அலையாம, வீட்டுல இருந்தே 'ஆன்லைன்'ல கட்டட அனுமதியை, 'டவுன்லோடு' பண்ணிக்கலாம்!''

''பரவாயில்லையே...ஆனா காசு பார்த்துப் பழகுன அதிகாரிகள், இந்த சாப்ட்வேர்லயும் ஏதாவது குளறுபடி பண்ணுவாங்களே...ஏற்கனவே, சொத்து வரி விதிக்கிறதுல, ஏரியாவைக் குறைச்சுக் காமிக்கிறது, கமர்சியல் பில்டிங்கை வீடுன்னு போட்டுத் தர்றதுன்னு ஏகப்பட்ட 'பிராடு' வேலை நடக்குது. ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல போன வாரம் திடீர்னு ரெய்டு பண்ணுனதுல இதெல்லாம் தெரிஞ்சிருக்கு!''

''கண்டுபிடிச்சு என்ன பண்ணுனாங்களாம்?''

''அங்க 500 வீடுகள்ல ரெய்டு பண்ணுனதுல, 70 வீடுகள்ல விதிமீறல் இருந்திருக்கு...அந்த வீடுகள்ல இருந்து ஒன்றரை கோடி ரூபா ஒரே நாள்ல வசூலாயிருக்கு...இப்போ எல்லா வார்டுலயும், 'ஜி.ஏ.எஸ்., மேப்பிங்' முறையில் ட்ரோன் வச்சு, விதிமீறல்களைக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருக்காங்க!''

''அந்த ட்ரோனை அப்பிடியே ரேஸ்கோர்ஸ் பக்கம் திருப்பி, மத்தியானமும், நைட்டும் வந்து படமெடுக்கச் சொன்னா, பல 'பகீர்' விஷயங்கள் பகிரங்கமா நடக்குறது தெரியவரும்...!''

''பசங்க கார்ல உட்கார்ந்து, கஞ்சா, போதையைப் போட்டு மதி கெட்டுத் திரியுறதைச் சொல்றியா...!''

''ஆமாக்கா! அதேதான்...வரவர அது போதைப் பாதையாவே மாறிடுச்சு...போன வாரம் அந்த ஏரியாவுல நடந்து வந்த ஒரு லேடி கிட்ட, பைக்ல வந்த பசங்க செயினை அறுத்துட்டுப் போயிருக்கானுக. அது கவரிங் செயின்னு தெரிஞ்சதும், போன பசங்க திரும்ப வந்து, அந்த லேடி முகத்துல ஓங்கி அடிச்சிருக்கானுக. ஆனா போலீசால அவுங்களைக் கண்டுபிடிக்கவே முடியலை!''

''அங்க லேடீஸ் ஹாஸ்டல் இருந்தும் அங்கயும் கூட 'சிசிடிவி' வைக்காம இருக்காங்களா?''

''இல்லை...இப்போ போலீஸ்காரங்க ஒரு கம்பம் நட்டு, 'சிசிடிவி' வைக்கப் போறாங்க. அதுஎத்தனை நாளைக்கு ஒர்க் அவுட் ஆகுமோ...

''கலெக்டர், கமிஷனர், ஐ.ஜி.,ன்னு அத்தனை பெரிய ஆபீசர்கள் இருக்குற ஏரியாவுலயே இப்பிடி கஞ்சாவும், போதையும் சர்வ சாதாரணமா புழங்குறப்போ, போதை இல்லாத நகரமா கோவையை மாத்தப் போறோம்னு, பெரிய போலீஸ் ஆபீசர் எப்பிடி சொல்றார்னே தெரியலை!''

''போலீஸ், போதைன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...நம்ம சிட்டியில இருக்குற அத்தனை டாஸ்மாக் பார் முன்னாலயும் இப்போ புதுசா ஒரு பெட்டிக்கடை போட்ருக்காங்க தெரியுமா...அந்தக் கடையிலதான் இப்போ '24 x 7' ஸ்கீம்...அதாவது 24 மணி நேரமும் சரக்கு விக்கிறாங்களாம்...பார் நடத்துறவுங்க சங்கத்துல ராஜா மாதிரி இருக்கிறவருதான் இதுக்கு ஏற்பாடாம்!''

''இவரென்ன ஈரோட்டுக்காரர் ஆளா, கரூர்க்காரரோட ஆளா...?''

''தலைமறைவா இருக்குற கரூர்க்காரரோட ஆளுன்னுதான் சொல்றாங்க...இவர் தலைமையிலதான் ஒவ்வொரு 'சரக்கு' பெட்டிக்கடையில இருந்தும் அந்தந்த ஸ்டேஷனுக்கு மாசம் 18 ஆயிரம் மாமூல், பேருக்கு ஒரு கேஸ்ன்னு பேசி முடிச்சிருக்காங்களாம். அந்த 18 ஆயிரத்துல இன்ஸ்க்கு 10 ஆயிரம், எஸ்.ஐ.,க்கு அஞ்சாயிரம், போலீஸ்களுக்கு மூவாயிரமாம்...!''

''ஒரே மாதிரி மாமூலா...ஓ...இதுக்குப் பேருதான் 'யூனிபார்ம்' சர்வீஸ்ங்கிறதோ?''

சித்ராவின் கமென்ட்டை பலமாகச் சிரித்து வரவேற்ற மித்ரா, மேலும் ஒரு விளக்கத்தையும் சொன்னாள்...

''இதுல ரத்தினபுரியில மட்டும் இன்னும் பெட்டிக்கடை போடலையாம்...அங்க புதுசா வந்திருக்குற 'இன்ஸ்' ரொம்பவே விரைப்பானவராம்... அவர்ட்ட பேச்சுவார்த்தை நடக்குதாம்!''

''மதுக்கரையில ரோடு வேலைக்கு 20 கோடி ரூபா வந்ததும், முக்கியமான பொறுப்புல இருக்குற ரெண்டு கவுன்சிலர்களும், ஆபீசரும் அவுங்களுக்குள்ள கமிஷன் பேசி முடிக்கப்பார்த்தாங்க. இது தெரிஞ்சு கவுன்சிலர் எல்லாரும் கொடி துாக்குனாங்க. இப்போ ஆளுக்கு அஞ்சு லட்சம்னு பேசி முடிச்சதும், கொடியைக் கீழே போட்டுட்டாங்க!''

''அப்பிடின்னா, முக்கிய கவுன்சிலர்கள், ஆபீசர்கள் பங்கு குறைஞ்சிருக்குமே!''

''அதான் இல்லை...அவுங்களுக்கும் அதிகப்படுத்திக் கொடுத்துட்டாராம் கான்ட்ராக்டர்...அந்த ரோடுகள் வேலை என்ன லட்சணத்துல நடக்குமோ?''

''இப்ப பல டிபார்ட்மென்ட்கள்ல கான்ட்ராக்ட் ஆளுங்க ஆதிக்கம்தான் அதிகமா இருக்கு...ஜி.எச்.,ல கான்ட்ராக்ட்ல இருக்குற துாய்மை பணியாளர்களை யாருமே எந்தக் கேள்வியும் கேக்க முடியலையாம்... சங்கம்கிற பேருல அவுங்க பண்ற மெரட்டல், நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. ஜி.எச்., நிர்வாகமே செம்ம கடுப்பாயிருக்கு!''

சித்ரா சொல்லும்போதே, குறுக்கிட்டு அதே மேட்டரைத் தொடர்ந்தாள் மித்ரா...

''உண்மைதான்க்கா...ஜி.எச்.,ல துாய்மை பணி செய்யுற ஒரு பொண்ணு, மேனேஜர்ட்ட 'நாங்க சங்கத்துல அப்பிடித்தான் செய்வோம்'னு ஆவேசமா பேசுற வீடியோவை நானும் பார்த்தேன். இங்க மட்டுமில்லை...மேட்டுப்பாளையம் ஜி.எச்.,ல வெறுமனே கையெழுத்துப் போட்டு கிளீனிங் வேலைக்கு வராதவரை, டிஸ்மிஸ் பண்ணுனதுக்கும் இந்த சங்கத்துக்காரங்க போராட்டம் நடத்திருக்காங்க!''

''இதே சங்கத்து ஆளுங்க, வார்டுல மக்கள்ட்ட வசூல் பண்ற வீடியோவும் வலம் வருது... இவுங்க மத்த கான்ட்ராக்ட் வேலையாளுகளையும், 'எங்க சங்கத்துல சேருங்க'ன்னு கட்டாயப்படுத்துறாங்களாம்.

சேர்றதுக்கு பணம் கேக்குறாங்களாம்; சேரலைன்னு சொன்னா மெரட்டுறாங்களாம். வேலை பார்க்காம டிமிக்கி அடிக்கிறதைப் பத்திக் கேட்ட, ஒரு மேனேஜர் மேல பாலியல் புகாரும் கொடுத்திருக்காங்க!''

''இவுங்க சங்கத்துப் பேரை வச்சு, வேலையே பார்க்காம சம்பளம் கேக்குறாங்க...ஆனா காட்டுக்குள்ள யானையைத் துரத்துறது, வேட்டையைத் தடுக்குறதுன்னு கடுமையான வேலை பாக்குற வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு, சம்பளத்தைக் கொடுக்குறதுக்குக் கூட, லஞ்சம் கேக்குறாங்களாம்!''

''இல்லியே மித்து! இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள்ல, தகுதியான ஆளுகளுக்கு பாரஸ்ட் கார்டு, பாரஸ்டர் புரமோஷனெல்லாம் கொடுக்குறாங்களே...கோவை வனக்கோட்டத்துல இருக்குற, ஏ.பி.டபிள்யு.,க்களுக்கு சம்பளம் கரெக்டா போடுறாங்களே!''

''அக்கா! நீங்க சொல்றது கரெக்ட்தான்...ஆனா மத்த பாரஸ்ட் டிவிஷன்ல இருந்து இங்க டிரான்ஸ்பர்ல வந்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு, சம்பளம் போடுறதில்லையாம்...டி.எப்.ஓ., ஆபீஸ்ல இருக்குற ஒருத்தரு, மாத்தி வந்தவுங்ககிட்ட ஒரு தொகையை எதிர்பார்த்து சம்பளம் போடாம இழுத்தடிக்கிறாராம்!''

''ரெண்டு லேடி ஆபீசர்கள் டிரான்ஸ்பர்ல, ஒரு இடத்துல சந்தோஷம், இன்னொரு இடத்துல வருத்தம்!''

''எதுக்கு இந்த டீசர்...மேட்டரை சொல்லுங்கக்கா!''

''ரத்தினபுரியில இருந்த ஒரு லேடி இன்ஸ் மேல ஏகப்பட்ட புகாரு...அவரோட பிரச்னையும் புகாருதான். யாராவது ஒரு புகார் கொண்டு வந்தா, அவுங்ககிட்டயும் காசு வாங்கிட்டு, எதிர்தரப்பைக் கூப்பிட்டுப் பேசுறது மாதிரிப் பேசி, அவுங்களையும் புகார் கொடுக்க வச்சு, அவுங்கள்ட்டயும் வசூலைப் போட்ருவாராம். புகார் கொடுத்த பைனான்சியர் ஒருத்தர்ட்டயும் இது மாதிரி, பெரிய தொகை கறந்திருக்காரு!''

''அவுங்களை மாத்துனதுல எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும்...யாரை மாத்துனதுல வருத்தம்?''

''நம்ம மாவட்டத்துல நாலே மாசம் வேலை பார்த்த சி.இ.ஓ.,சுமதிக்கு, எல்லா இடத்துலயும் நல்ல பேரு இருந்துச்சு. போற இடத்துல சமூக கருத்துகளோட பாட்டுப் பாடுவாங்க. அவுங்களுக்கு நடந்த பிரிவு உபசார விழாவுலயும், 'பசுமை நிறைந்த நினைவுகளே'ன்னு பாடி எல்லாரையும் கலங்க வச்சுட்டாங்க. அவுங்களுக்கு டீச்சர்ஸ் 'சின்னக்குயில் சி.இ.ஓ.,' ன்னு ஒரு பட்டமே கொடுத்திருக்காங்க!''

''லேடீஸ் பத்திப் பேசவும், நம்ம லேடி பிரசிடெண்ட்கள் ஞாபகம் வந்துச்சு..அன்னுார் யூனியன்ல 21 பஞ்சாயத்துல 12 இடத்துல லேடீஸ்தான் பிரசிடெண்ட்டா இருக்காங்க...அவுங்க எந்த வேலையுமே செய்யுறதில்லை.

வீட்டுக்காரரு, அண்ணன், தம்பின்னு சொந்தக்காரங்கதான் எல்லாமே பண்றாங்க. அதுல சில பேரு, கவர்மென்ட் ரிக்கார்டுகள்லயே பிரசிடெண்ட் கையெழுத்தையும் அவுங்களே போட்டுக்கிறாங்க!''

''பாரதி இருந்திருந்தா, நொந்து போயிருப்பாரு!''

''அக்கா! நம்ம பாரதியார் பல்கலையில, 'பாரதி உயராய்வு மையம்'னு ஒரு கட்டடம் கட்டிருக்காங்க...முதல்ல 1.15 கோடி ரூபாயில 'எஸ்டிமேசன்' போட்டாங்க. இப்போ கட்டடம் கட்டி முடிக்கிறப்போ, 2.15 கோடி ரூபா செலவாயிருச்சாம். ஆனா பில்டிங் அந்தளவுக்கு 'ஒர்த்' இல்லியாம். பி.டபிள்யு.டி., கட்டுற எல்லாக் கட்டடத்துக்கும், இப்பிடித்தான் ரெண்டு மடங்கா காசு அடிக்கிறாங்க!''

''மித்து! காசு யாரு அதிகம் சம்பாதிக்கிறாங்கன்னு, விஜிலென்ஸ் ஒரு சர்வே பண்ணிருக்கு...நம்ம மாவட்டத்துல, வருவாய்த்துறை வேலைகளுக்கு அதிகமா லஞ்சம் வாங்குறதுல, கோவை வடக்கு, அன்னுார், மேட்டுப்பாளையம் மூணு ஆபீஸ்கதான் 'டாப்'புல இருக்காம். பிரிவு வாரியா ஆபீசர்கள் லிஸ்ட் ரெடி பண்ணிருக்காங்களாம். எப்போ என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியலை!''

சித்ரா முடிப்பதற்குள் எழுந்த மித்ரா, ''சாரிக்கா! பேசிட்டே மறந்துட்டேன்...அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு, நன்னாரி சர்பத் போட்டுக் கொண்டு வர்றேன்!'' என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement