விஸ்வகர்மா திட்டம் வெற்றிக்கு வாழ்த்துவோம்!
நம் நாடானது, அதன் கலாசார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினை பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இருப்பினும், கைவினை கலைஞர்களின் இந்த பாரம்பரிய திறமைகள், முறையான அங்கீகாரமின்மை, குறைந்த அளவிலான வருமானம், நவீன முறையில் தயாராகும் பொருட்களால் உருவாகியுள்ள போட்டி, போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாமை, போதிய பயிற்சி இல்லாதது மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் என, பலவிதமான சவால்களை சந்திக்கின்றன.
இதனால், பல கைவினை கலைஞர்கள், தங்களின் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை விட்டு விட்டு, வாழ்வாதாரம் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது தொடர்கிறது. இது, அவர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தை பாதிப்பது மட்டுமின்றி, மதிப்புமிக்க கலாசார சொத்துக்களை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தான், நாட்டின், 77வது சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பேசிய பிரதமர் , 'நெசவாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில், 'விஸ்வகர்மா யோஜனா' துவக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான, இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, இத்திட்டம் அறிவிக்கப் பட்டதாக கூறப்பட்டாலும், பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதே. விஸ்வகர்மா ஜெயந்தி தினமான, செப்டம்பர், 17ல், இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.
விஸ்வகர்மா யோஜனா வாயிலாக, கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக, 5 சதவீத வட்டியுடன், முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக, 2 லட்சம் ரூபாயும் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது.
அத்துடன், கைவினை கலைஞர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, அவர்களின் திறனை மேம்படுத்த உதவுவது போன்றவையும் செயல்படுத்தப்பட உள்ளன.
மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், பாரம்பரிய கைவினை கலைஞர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் வருமானம் உயர்வதோடு, அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் அளவும், தரமும் மேம்படலாம். தயாரித்த பொருட்களை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விற்பதற்கான புதிய சந்தை வாய்ப்புகளை பெறலாம். இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
அத்துடன், கைவினை கலைஞர்கள் கவுரவமாக, தனித்துவத்துடன் வாழ முடியும் என்பதோடு, நம் கலாசார பாரம்பரியமும் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும்; கிராமப்புற மக்களின் பொருளாதாரமும் மேம்படும்.
விஸ்வகர்மா யோஜனா, பாரம்பரிய கைவினைஞர்களை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும், அதன் வெற்றியானது, திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருங்கிணைப்பு, துல்லியமான தரவுகளை சேகரித்தல், புதுமையை ஊக்கப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் வாயிலாக, சாதகமான சூழலை உருவாக்குவதில் தான் உள்ளது.
அப்போது தான், நம் கலாசார பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதோடு, பொருளாதார மேம்பாடும் அதிகரிக்கும். உன்னதமான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என, நம்புவோமாக!
வரவேற்கத் தக்கது